Home>>அரசியல்>>இந்திய ஒன்றியத்தை திறம்பட எதிர்க்கொள்ள சிறந்த வழிகள்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழர்கள்தமிழ்நாடுவரலாறு

இந்திய ஒன்றியத்தை திறம்பட எதிர்க்கொள்ள சிறந்த வழிகள்

இங்கர்சால் நார்வேமுன்மொழிக் கொள்கை எதிர்ப்பில், மத்திய அரசு, தமிழ் மீது தமக்கு இருக்கும் மொத்த வெறுப்புணர்வையும் கக்கிக் கொண்டிருக்கிறது. ஒன்றியத்தின் தமிழ் மொழி வெறுப்பை நாம் திமுக வெறுப்பில் மறந்து விடக் கூடாது. திமுகவை வெளுத்து வாங்கிய நிர்மலா சீதாராம், என்றெல்லாம் சிலர் பேசக் கேட்கிறோம், வேதனையாகவும் மிகவும் தவறாகவும் இருக்கிறது.

மாநில அரசியல் எதிர்ப்பை, ஓரம் வைத்து, ஒன்றியம் நம் மீது திணிக்க முற்படும் மும்மொழி கொள்கையை, பிஎம் ஸ்ரீ பள்ளியை, எதிர்ப்பது எப்படி என்று யோசிப்போம்.

இன்றளவில் மத்திய அரசின் தாக்குதலை, மாநில அரசு வெறும் அறிக்கைகளாலும், சமூக ஊடகங்களாலும் எதற்கும் பயன் இல்லாத பதிலைத் தந்து கொண்டிருக்கிறது. வெறும் வாய் சண்டையாகக் காட்டாமல் அதற்கு எதிர்த்து இங்கே அரசாணைகள் அறிவிக்கப்பட வேண்டும்.

கீழ்க்கண்டவற்றை எல்லாம் அரசாணையாக உடனடியாக வெளியிட வேண்டும்…

1 – அதாவது தமிழ்நாட்டில், தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் வேலை வாய்ப்பு.

2 – அனைத்து நிறுவனங்களிலும் பேச்சு மொழியாகத் தமிழ் இருக்க வேண்டும்.

3 – அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாயம் கற்பிக்க வேண்டும், எந்தக் காரணத்தினாலும் காலம் கடத்தவோ, செயல்படுத்த மறுக்கவோ கூடாது, உடனடியாக அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

4 – மக்கள் பயன்படுத்தும் அனைத்து டிஜிட்டல் இடைமுகத்திலும் தமிழ் இருக்க வேண்டும். உதாரணமாக வங்கிகளில் பணம் எடுக்கும் இயந்திரத்தில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும்.

5 – அனைத்து நிறுவனங்களின் பெயரும் தமிழில் இருக்க வேண்டும்.

6 – மத்திய அரசின் திட்டங்களை, தமிழ் பெயர்களில் மாற்றிப் பயன்படுத்த வேண்டும்.

7 – அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்புகள் இருத்தல் வேண்டும்.

8 – தொலைக்காட்சி வானொலியில் பேசுபவர்கள் பிற மொழி கலவாமல் தமிழில் பேச வேண்டும்.

9 – அரசு இணையதளங்கள் தமிழில் முழுமையாகச் செயல்பட வேண்டும்.

10 – அனைத்து விளம்பரங்களும் தமிழில் இருத்தல் கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

11 – தமிழ்நாட்டில் விற்பனையாகும் பொருட்கள் பற்பொடி முதல் மகிழுந்து வரை தமிழில் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும்.

12 – தமிழ் பெயர் வைத்திருப்பவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை தர வேண்டும்.

13 – அனைத்து மென்பொருள்களிலும் (Google, Microsoft, Apple, Linux) தமிழ் மொழி விருப்பத்தேர்வாக இருக்க வேண்டும்.

14 – தமிழ்ப் பெயர் கொண்ட நிறுவனங்களுக்கு வரி தள்ளுபடி வழங்க வேண்டும்.

15 – தமிழ் இலக்கியங்கள், நாடகங்களை ஆதரிக்கும் விதமாக அரசு உதவிகள் வழங்க வேண்டும்.

16 – திரைப்படங்களில் தலைப்பு தமிழில் இருந்தால் இத்தனை சதவீதம் வரி விலக்கு, பாடல்கள் தமிழில் இருந்தால் இத்தனை சதவீதம் வரி விளக்கு, வசனங்களில் பிற மொழிகள் கலந்து இருந்தால் அத்தனை சதவீதம் வரி அதிகரிப்பு போன்றவை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவை போன்ற, தமிழின்றி தமிழ்நாட்டில் எதுவும் செய்ய முடியாது, என்ற நிலையை உருவாக்காமல், வெறும் குழாயடி சண்டையில் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை.

ஆட்சி அதிகாரங்களைக் கையில் வைத்துக் கொண்டு, வெறும் அறிக்கைகளில் என்ன கிடைக்கப் போகிறது, செயலில் காட்டினால், அடுத்து, எதிர்த்து மூச்சு விடக் கூட எதிரிகள் அஞ்சுவார்கள்.

இவைகளை செய்யுமா தமிழ்நாடு அரசு?


திரு. இங்கர்சால்,
நார்வே.

Leave a Reply