வக்ஃப் சட்டத் திருத்தம் 2024 என்பது வக்ஃப் சட்டம் 1995-ல் 44 திருத்தங்களைக் கொண்டு வருகிறது. இந்த திருத்தச் சட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:
• வக்ஃப் வாரியத்தின் அதிகாரங்களைக் குறைப்பது,
• வக்ஃப் சொத்து வழக்குகளைக் கையாளும் தீர்ப்பாயங்களில் மாற்றங்கள் கொணர்வது,
• வக்ஃப் சொத்துக்கள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்குவது,
• வக்ஃப் வாரியப் பொறுப்புகளில் முசுலீம் அல்லாதவர்களை நியமனம் செய்வது, போன்றவையாகும்.
இந்தியாவிலேயே இராணுவம், இரயில்வே, வக்ஃப் வாரியங்கள் எனும் மூன்று நிறுவனங்கள்தான் அதிக நிலங்கள் வைத்திருக்கின்றன. நம் நாட்டில் மொத்தம் 32 வக்ஃப் வாரியங்கள் உள்ளன. அவற்றை தேசிய வக்ஃப் கவுன்சில் எனும் அமைப்பு ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது.
மேற்படி வக்ஃப் வாரியங்களின் கட்டுப்பாட்டில் பல இலட்சம் கோடிகள் ரூபாய் மதிப்புடைய 9.4 இலட்சம் ஏக்கர் நிலங்களை உள்ளடக்கிய 8.7 இலட்சம் சொத்துக்கள் உள்ளன. இவற்றில் பல சொத்துக்களை ஒன்றிய அரசு, மாநில அரசுகள், தனிநபர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் போன்றோர் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, மும்பையில் அம்பானி கட்டியிருக்கும் அன்டிலியா (Antilia) எனும் பல மாடிகளைக் கொண்ட சொகுசு வீடு வக்ஃப் நிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. பெங்களூரு நகரில் ஐடிசி நிறுவனம் நடத்தும் வின்ட்சர் (Windsor) ஓட்டல் வக்ஃப் நிலத்தில் எழுப்பப்பட்டுள்ளது. திருச்சி மாநகரின் பெரும்பகுதி நத்ஹர் தர்காவினுடைய வக்ஃப் சொத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் முனம்பம் பகுதியில் 400 ஏக்கர் வக்ஃப் நிலம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஒரு பகுதியில் அமைந்திருக்கும் ஃபரூக் கல்லூரி தாங்கள் வைத்திருக்கும் நிலம் வக்ஃப் சொத்தல்ல என்றும் தங்களுக்குப் பரிசாகக் கிடைத்தது என்றும் கூறுகிறது. சில தனியார்கள் உண்டுறை விடுதிகளும், உல்லாச விடுதிகளும், வீடுகளும் கட்டிப் பொருளீட்டிக் கொண்டிருக்கின்றனர். வீடுகள் கட்டி அவற்றில் வசிக்கும் சிலரை உள்ளூர் தேவாலயம் ஒருங்கிணைத்து போராட உதவுகிறது. இந்த பிரச்சினையை ஆய்வு செய்ய கேரள அரசு சி. என். ராமச்சந்திரன் நாயர் தீர்ப்பாணையம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது. மேற்படி ஆணையத்திடம் கேரள வக்ஃப் வாரியம் வக்ஃப் சொத்துக்களை ஆக்கிரமித்திருப்பவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே நேரம் தங்களுக்கு நட்டம் ஏற்படாமலிருக்கவும் உதவுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது.
ஆக, வக்ஃப் நில விவகாரத்தை இசுலாமியர்களுக்கும் இதர வகுப்பினர்களுக்கும் இடையே எழும் சொத்துப் பிரச்சினை என்று தவறாகக் கருதக் கூடாது. உண்மையில், வக்ஃப் நிலங்களில் பல கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன; அதேபோல மூவேந்தர்களும், பாளையக்காரர்களும் கூட பள்ளிவாசல்களுக்கும், தர்காக்களுக்கும் நில தானங்கள் அளித்திருக்கின்றனர்.
ஆனால் பாஜக அரசு வக்ஃப் சொத்துக்களைக் கையிலெடுத்து இசுலாமியர்களை வேற்றுப்படுத்தவும், கட்டுப்படுத்தவும், அச்சுறுத்தவும் சதித்திட்டம் தீட்டுகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்ற ஒன்றைக் கொண்டுவந்து அதைச் செய்து முடிக்க முனைந்தார்கள். ஆனால் இசுலாமியப் பெண்களின் தலைமையில் நடைபெற்ற அறவழிப் போராட்டங்களினாலும், கொரோனோ நோய்த்தொற்றுப் பரவலாலும், அந்தத் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
பின்னர் அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கிய “பொது சிவில் சட்டம்” என்கிற ஒரு திட்டத்தை முன்மொழிந்து பாசிஸ்டுகள் களமிறங்கினார்கள். ஆனால் இசுலாமியர்களும், கிறித்தவர்களும் மிகவும் பொறுப்புணர்வுடன், பக்குவத்துடன் அந்தப் பிரச்சினையைக் கையாண்ட நிலையில், பாசிஸ்டுகள் எதிர்பார்த்தக் களேபரங்கள் ஏதும் நடக்கவில்லை.
இந்த நிலையில் வக்ஃப் சொத்துக்கள் எனும் பிரச்சினையைக் கொண்டுவந்து மீண்டுமொரு முறை அதே சதி வேலையில் ஈடுபடுகிறார்கள். இசுலாமியர்களின் சொத்துக்களை அரசு நிர்வகிக்கவும், ஒழுங்கமைக்கவும் முயல்வது சரிதானே என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களை அச்சுறுத்துவதுதான் இந்த சதித்திட்டத்தின் நோக்கம்.
மதவாதத்தையும், வெறுப்பரசியலையும் கிளறிவிட்டு; கலவரம், களேபரங்களை உருவாக்கி; மத நல்லிணக்கத்தையும், சமூக அமைதியையும் சீர்குலைத்து; பாசிஸ்டுகள் தங்களின் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள கடிதில் முயற்சிக்கிறார்கள்.
பன்னெடுங்காலமாக மக்களால் பள்ளிவாசல்களாக, அடக்கத்தலங்களாக பயன்படுத்தப்பட்டு வரும் சொத்துக்களும், வக்ஃப் சொத்துக்களாகவேக் கருதப்படுகின்றன. அவற்றை “பயன்பாட்டின் விளைவாக உருவாகும் வக்ஃப்” (Waqf by user) என்று குறிக்கிறோம்.
புதிய சட்டத் திருத்தத்தால் இந்த முறை நீக்கப்படும். அப்படி நீக்கப்படும்போது, ஏராளமான வழிபாட்டுத் தலங்கள் பாதிப்புக்குள்ளாகும். அவற்றில் ஏதாவது தகராறுகள் இருந்தாலோ, அல்லது அரசு நிறுவனங்கள் நிறுவப்பட்டிருந்தாலோ, அவை வக்ஃப் சொத்துக்களாகக் கருதப்படாது. இதனால் இந்தியாவிலுள்ள 8.7 இலட்சம் வக்ஃப் சொத்துக்களில் 4.02 இலட்சம் சொத்துக்கள் நேரடி பாதிப்புக்குள்ளாகும். இவற்றில் முக்கிய முடிவெடுக்கும் பொறுப்பை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வழங்குவது ஏற்புடையதாக இருக்காது. காரணம் அனைத்து நில ஆவணங்களையும், அதிகாரத்தையும் தன்வசம் வைத்திருக்கும் அந்த அதிகாரி அரசின் கைப்பாவையாகத்தான் இயங்குவார், அல்லது இயக்கப்படுவார்.
மேலும் பாசிஸ்டுகள் இந்தியா முழுவதும் ஏறத்தாழ 3,000 பள்ளிவாசல்களை இந்துக் கோவில்களின் மீது கட்டப்பட்டவை என்று கதைத்துக் கொண்டிருக்கும் நிலையில், நாட்டின் சட்ட-ஒழுங்கு நிலைமை மிக மோசமடையும். ஏற்கனவே அயோத்தி பாபர் மசூதி/இராமஜன்மபூமி, மதுரா ஷாஹி இத்கா/கிருஷ்ணஜன்மஸ்தான், வாரணாசி ஞான்வாபி/விசுவநாதர் ஆலயம் போன்ற பிரச்சினைகளால் நாடே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. சம்பல், தாஜ்மகால், குதுப் மினார், திருப்பரங்குன்றம் என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது.
எனவே பொதுமக்கள் வக்ஃப் பிரச்சினையை இசுலாமியர்களின் சொத்துப் பிரச்சினை என்று தவறாகக் கருதி, இதில் நாம் எப்படி ஒரு நிலைப்பாடு எடுக்க முடியும், நம்மால் என்ன செய்ய முடியும் என்று ஒதுங்கிக் கொண்டால், பாசிஸ்டுகள் மாபெரும் வெற்றியடைவார்கள். இப்படியாக இசுலாமியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, ஏனையோர் ஒதுங்கிக்கொள்ளும் நிலையில், பாசிசம் தன் கோரப்பற்களைத் துருத்தி, தலைவிரித்தாடும், எதிரே தலைப்பட்டோர் அனைவரையும் கடித்துக் குதறும்.
எனவே வக்ஃப் சட்டத் திருத்தம் என்பது அனைத்து இந்தியர்களையும் உள்ளடக்கும் பொதுப் பிரச்சினை என்பதைப் புரிந்துகொள்வோம். நம்மனைவரின் சகோதரத்துவம், சகவாழ்வு, சமாதானம் போன்றவற்றுக்கு எதிராக நடத்தப்படும் சதித்திட்டம் என்பதை அறிந்துகொள்வோம். நம் நாட்டின் சரிநிகர் அங்கங்களான இசுலாமியர்களையும், பிற சிறுபான்மையினரையும் காத்து நிற்போம்.
—
திரு. சுப. உதயகுமாரன்,
மார்ச் 14, 2025