Home>>அரசியல்>>ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்!
சீமான்
அரசியல்ஆந்திராஇந்தியாசுற்றுசூழல்மாநிலங்கள்

ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்திற்கு அருகில் காஞ்சா கச்சிபவுலி பகுதியில் 400 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள வனப்பகுதியைத் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்காக அம்மாநில காங்கிரசு அரசு அழித்தொழிக்கத் தொடங்கியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. ஐதராபாத்தின் நுரையீரலாய், பசுமை போர்த்திய பாதுகாப்பு அரணாய் திகழும் அதிமுக்கிய சூழலியல் பகுதியை தொழில் வளர்ச்சி 50,000 கோடி முதலீடு, 5 லட்சம் பேருக்கு வேலை என்றெல்லாம் கூறி அழிக்க முயல்வது பெருங்கொடுமையாகும்.

இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல; நமக்கும் பின்னால் வரும் வருங்காலத் தலைமுறைக்கானது; தற்காலிகமாக வாடகைக்குப் பெற்றுத்தான் நாம் பூமியில் தங்கியுள்ளோம் என்பதை நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் உணர்ந்து திருந்த வேண்டும். அதனைப் பாதுகாப்பாக அடுத்த தலைமுறைக்குக் கையளிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் இன்றியமையாத வாழ்வியல் கடமையாகும். நிலமும், நீரும், காடுகளும், ஆறுகளும், மலைகளும், கடலும், காற்றும் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; மண்ணில் வாழும் மற்ற உயிரினங்களுக்குதான் உரிமையுடையதாகும். மனிதர்கள் இன்றி மற்ற எல்லா உயிரினங்களும் வாழ முடியும்; ஆனால், மற்ற உயிரினங்கள் அழிந்துவிட்டால் மனிதரால் ஒரு நொடி கூட உயிர் வாழ்ந்திட முடியாது. எனவே நம் சுற்றுச்சூழலை அழிக்க நினைப்பது நம்மை நாமே அழித்துக்கொள்வதற்கான தொடக்கமேயாகும்.

தற்போது காஞ்சா கச்சிபவுலி பகுதி காடுகளைக் காப்பதற்கு ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் – ஆசிரியர்கள், மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து காடுகளை அழிக்கும் தெலுங்கானா அரசின் நடவடிக்கைக்குத் தற்காலிக தடை விதித்துள்ளது. ஆனால், அதுமட்டுமே போதுமானதன்று. உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு வரும்வரை காத்திராமல், ஐதராபாத் மாணவர்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்தை தெலுங்கானா மாநில காங்கிரசு அரசு அடக்கி ஒடுக்குவதைக் கைவிட்டு, வருங்காலத் தலைமுறையின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கான பொறுப்புமிகு போராட்டம் என்பதை உணர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே, வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை நாசமாக்கி, மண்ணிற்கும், மண்ணில் வாழும் உயிரினங்களுக்கும் பெருந்தீங்கு விளைவிக்கும் 400 ஏக்கர் காஞ்சா கச்சிபவுலி வன அழிப்பு முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டுமெனத் தெலுங்கானா அரசை வலியுறுத்துகிறேன்.


திரு. செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.

Leave a Reply