மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் – பொதுமக்களின் உடல் நலனுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க முடியாது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி பொது உயிரி மருத்துவக் கழிவுகளை சுத்திகரிக்கும் ஆலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு இந்த மருத்துவக் கழிவுகள் சுத்திகரிக்கும் ஆலை அமைப்பது தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், அத்திட்டத்திற்கான கட்டுமானப் பணியை முழுவீச்சில் தொடங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பொது உயிரி மருத்துவக் கழிவுகளை எரிக்கும் போது அதிலிருந்து வெளியேறும் நச்சுத்தன்மைமிக்க வாயு, மானாமதுரை மற்றும் அதனை சுற்றிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் எனக்கூறி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை எதிர்ப்பு இயக்கத்தினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
எனவே, பொதுமக்களின் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொது உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்வதோடு, அங்கு நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
—
திரு. TTV. தினகரன்,
தலைவர்,
அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம்.