Home>>இதர>>மனிதி 
இதர

மனிதி 

‘ஏன்மா? எப்பயும் 7 மணிக்கெல்லாம் ரூம் போயிட்டேன்னு ஃபோன் பண்ணுவ…இன்னைக்கென்ன 10 மணிக்கு கூப்புட்ற?? ரூம்க்கு போய்ட்டியா இல்லையா?? இன்னைக்கு ஆஃபீஸ்ல ஒர்க் அதிகமா?’ என தன் மகள் தன்னை விட்டு தூரத்தில் வேலை செய்து கொண்டிருப்பதால் தாய்மைக்கே உரிய பயத்துடனும் பரிவுடனும் சுலேகாவிடம் வினவினார் அங்கையற்கண்ணி..

‘ஒர்க்கெல்லாம் இல்லம்மா.. சொல்லியிருந்தேன்ல இன்னைக்கு சாயந்திரம் ஆஃபீஸ்ல இருக்க எல்லாரும் டீம் டின்னர்னு வெளிய சாப்டப் போறோம்னு…அதான் மா… சாப்ட்டுட்டு அங்க இருந்து வர்றதுக்கு இவ்ளோ நேரம் ஆய்டுச்சு மா.. வேற ஒன்னுமில்ல.. நடுவுல உனக்கு கால் பண்ணனும்னு நெனச்சேன்.. மறந்துட்டேன்.. சரி.. நீ சாப்ட்டியா இல்லையா?? அப்பா எங்க?’ என தன் தாயாரின் மனோபாவம் அறிந்து அவளிடம் அன்றைய நாள் என்ன நடந்தது என்பதை பதமாக கூறினாள் சுலேகா..

‘நாங்க சாப்ட்டோம்டா.. அப்பா நியூஸ் கேட்டுட்டு இருக்காரு.. இருடா தரேன்..என கைப்பேசியை மாற்றினார் அங்கையற்கண்ணி..

தந்தையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தாலும் மகள் இவ்வளவு நேரம் தவறி பேசுவதற்கான காரணத்தை மற்றோரு முறைக் கேட்டு மனதை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு தான் அக்கைப்பேசியினை அணைத்தார்..

பெற்றோரிடம் பேசி கொண்டிருந்த தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தன் தோழி நித்யாவை நோக்கி என்ன என்பது போல் கண்ணசைத்தாள் சுலேகா..

‘இல்ல… ரிட்டர்ன் வரும்போது பஸ்ல வந்த மாதிரி சொன்னியே.. ஆனா நீ சந்தோஷ் கூட பைக்ல தான வந்த.. நானும் அரவிந்த் கூட தான வந்தேன்.. அதான் பாத்தேன்..’ என்றாள் நித்யா..

‘ஏன்டி.. எங்க வீட்ட பத்தி உனக்கு தெரியாதா?? ஸ்கூல், காலேஜ் படிக்குறதுல இருந்தே பசங்க பிரண்ட்ஷிப்லாம் இருக்க கூடாதுன்னு சொல்லாம சொன்னவங்க டி..இப்ப அவங்கள விட்டு இவ்ளோ தூரம் தள்ளி வேற இருக்கேன்..அதுவும் சென்னையில இருக்கேன்.. நைட் 10 மணிக்கு ஒரு பையனோட பைக்ல வந்தேன்னு சொன்னா தாம் தூம்னு குதிப்பாங்களோ இல்லையோ…நா என்னமோ பெரிய கொல குத்தம் பண்ணுன மாதிரியும் அதனால அவங்க மரியாத செதஞ்சு சின்னாபின்னமா போன மாதிரியும் பேசுவாங்க டி..அதான் சொல்லல’…

‘சரி சரி..பிரஷ் அப் ஆய்ட்டு வா டி..உனக்கு ஒரு இன்ட்டிரஸ்ட்டிங் போஸ்ட் ஒன்னு காட்றேன்,’ என்றாள் நித்யா..

‘அப்படி என்ன இன்ட்டிரஸ்ட்டிங்கான போஸ்ட்.. நீ மிஞ்சி மிஞ்சி போனா குழந்தைங்க வீடியோவையும், அனிமல்ஸ் வீடியோவையும் தான் பாப்ப.. எழுதியிருக்காங்கன்னா.. நீ படிக்கவே மாட்ட’,என கலாய்த்தப்படி அவளருகே அமர்ந்தாள் சுலேகா..

‘இல்லடி எனக்கு இன்னைக்கு ஏதோ ஞானோதயம் வந்து ஒரு போஸ்ட் படிச்சேன்… அதான் உன்ட்ட காட்டலாம்னு கூப்டேன்…இங்க பாரேன் யாரோ மனிதி-னு ஃபேஸ்புக் பேஜ்ல செம மெசேஜா போடறாங்க டி.. அப்படியே அப்பட்டமா எல்லா விஷயத்தையும் பேசுறாங்க..ஆண்மை, பெண்மை, திருநங்கை, சாதி, மதம், சமயம், காதல், நட்பு, தோல்வி, சந்தோஷம், துக்கம்னு பிரிச்சு மேஞ்சிருக்காங்க’, என்றவாறே தன் கைப்பேசியை சுலேகாவிடம் நீட்டினாள் நித்யா..

‘அதுலயும் பெண்ணியம்னு அவங்க போட்டுருக்க போஸ்ட் பாரேன்.. இரு இரு.. நானே படிச்சு காட்றேன்,’ என கொடுத்த கைப்பேசியை சுலேகாவிடமிருந்து பிடுங்கி கொண்டு படிக்க ஆரம்பித்தாள் நித்யா..

தன்னிடம் கொடுத்த கைப்பேசியை பிடுங்கியதைக் கூட பெரிதுப்படுத்தாமல் நித்யா படிப்பதை ஆர்வத்துடன் கேட்க ஆயத்தமானாள் சுலேகா…

‘காந்திஜி சொன்ன மாதிரி மிட் நைட்ல நகையெல்லாம் போட்டுட்டு போறது பெண்ணியம் இல்ல.. சுடிதாரோ, ஜீன்ஸோ, சாரியோ போட்டுட்டு ரோட்ல போகும் போது ஏதோ ஒரு பொருள பாக்குற மாதிரி உச்சி முடில இருந்து உள்ளங்கால் வர பாக்காம இருக்கணும்.. குண்டோ, ஒல்லியோ, கருப்போ, செகப்போ எப்படியிருந்தாலும் நக்கலான பார்வை இல்லாம இருக்கணும். தன் தாயோ, தமக்கையோ, தங்கையோ, தோழியோ, காதலியோ, மனைவியோ அவரவர் விருப்பம் போல செயல்பட விடனும். தகுதிக்கு மீறியதாய் இருந்தால் தகுந்த அறிவுரைகள் கூறி நல்வழிப்படுத்தலாம் (இது இரு சாரோர்க்குமே).. 

 

சமூக வளைதளங்களில் மட்டுமே பெண்மையைப் போற்றி விட்டு அல்லது அவ்வாறு போற்றி எழுதப்பட்ட பதிவிற்கு லைக்குகளையும் ஹார்ட்டின்கையும் பறக்க விட்டு, பேருந்தில் தன்னருகே நிற்கும் பெண்ணின் மார்பகத்திற்கான மதிப்பெண்கள் போடாமல் இருக்க வேண்டும்.. ஹார்மோன்களின் தாக்கம் என்ன செய்வது என நீங்கள் எதிர் கேள்வி கேட்டால் அதே ஹார்மோன்களின் தாக்கத்தில் மாதம் மூன்று நாட்களுக்கு உகந்த நண்பனாய் விளங்கும் நாப்கின் வாங்க வரும் மகளிரை ஏற இறங்க பார்ப்பது ஏன் எனும் கேள்வி பல பெண்களின் வாய்வரை வந்து இறந்து போனவை தான்.. எப்படி ஒரு ஆண் பிறந்து, வளர்ந்து, படித்து, தக்க வேலை செய்து, மணமுடித்து, குடும்பத்தினை நடத்தி, ஆடி அடங்கி ஒடுங்கிப் போய் ஓய்கிறானோ… அவ்வாறே பெண்ணும்.. ஆண் எனும் இடத்தில் பெண் என்னும் சொல். மற்றபடி டிட்டோ தான்… பெண் தனியாக சென்றால் சமுதாயத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சியிலும் வரும் செய்திகளுக்கு கமண்ட்டுகள் சொல்லியும் பதிவுகளாய் பறக்கவிட்டும் இருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தெரிய வேண்டும் தனித்து நடைப்போட்ட பெண்ணிற்கு அநீதியிழைத்த அச்சமுதாயத்தில் தான் நாமும் ஒரு அங்கமாய் இருக்கிறோம் என்ற அறிவுக் கதவு அகலமாய் திறக்க வேண்டும் என இறைவனிடம் கேட்கிறேன்… கைக்குலுக்கலிலோ, ஆரத்தழுவதிலிலோ, கண்ணீர் துடைப்பதிலோ, சாய்வதற்கு தோள் தருவதிலோ, இளைப்பாற மடி தருவதிலோ, மாதவிடாய் காலத்தில் தேவையறிந்து நாப்கின்கள் வாங்கி வருவதிலோ, உடன் பணி புரிவதிலோ, இருட்டினாலும் பயணிப்பதாலோ பெண்ணியம் பூர்த்தியாகாது…இவற்றுடன் சக மனிஷியாய், சக உயிராய் காண்பதிலும் நேசிப்பதிலுமே பெண்ணியம் நிறைவுப் பெறுகிறது..பெண்ணியம் ஆண்மையுடன் நிறைவுப்பெறட்டும்..

அகமகிழ்ந்த அன்புகளுடன் உங்கள் மனிதி❤,’ மூச்சு வாங்க படித்து முடித்த தன் தோழிக்கு சிரித்தவாறே தண்ணீர் பருக கொடுத்தாள் சுலேகா..

‘பாத்துப்பா…மூச்சு முட்டி செத்துடப் போற… தண்ணியக் குடி.. அப்பறமா பேசலாம்’…

சுலேகா வழங்கிய நீரை சொட்டு விடாமல் குடித்த நித்யா…பாருப்பா.. செமயா எழுதியிருக்காங்கல்ல.. இரு ஒரு கமெண்ட போட்டுட்டெ வந்துடுறேன்…

‘ஆவ்சம் ரைட்டிங்..அருமை’ என கமெண்ட் கொடுத்த நித்யா.. சரிப்பா.. நீ போய் தூங்கு.. எனக்கும் தூக்கமா வருது.. நாளைக்கு ஆஃபீஸ்கு சாரில போகனும்.. காலைல நீ தான் எனக்கு அட்ஜஸ்ட் பண்ணி விடனும்..இல்லண்ணா அந்த ராகவன் இருக்கான்ல எப்படா சாரி விலகும்னு பாத்துட்டே இருப்பான்.. அவன் முன்னாடி பாத்து நடக்கனும்… பக்கிப்பய… சரி சுலோ.. மறந்துடாத.. நீ பாட்டுக்கு சீக்கிறம் ஓடிராத.. குட்நைட்.. ஸ்வீட் டிரீம்ஸ் டியர்’, என தன் உறக்கத்துடன் காதல் புரிய தொடங்கினாள் நித்யா..

வாட்ஸாப்பில் தான் இன்றெடுத்த ஃபோட்டோக்களை பதிவிட்டதற்கு தன் பெரியப்பா மகனின் முகசுளிப்பான் ஸ்மைலிக்கான காரணத்தை கேட்டப் பொழுது… ஏன் சுடிதார்ல போல?? ஜீன்ஸ், ஷர்ட் போட்டுட்டு தான் ஆஃபீஸ் போகனுமா?? நைட் வேற லேட்டா வந்திருக்கப் போல… பாத்து இருந்துக்க..அவ்ளோதான் சொல்ல முடியும் என்ற கேள்விகளுக்கு தக்கவாறு பதிலளித்து விட்டு… ஃபேஸ்புக்கில் மனிதி என தான் தொடங்கிய பக்கத்தில் நித்யா அளித்த கமெண்டிற்கு நன்றி கூறி கைப்பேசியை அணைத்து உறக்கத்திடம் தஞ்சமடைத்தாள் சுலேகா… 

 

கனிமொழி, செஞ்சி.

(2050 பங்குனி மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply