Home>>காவல்துறை>>சட்டத்தை மதிக்காமல் சண்டித்தனம் செய்யும் சாம்சங்!
காவல்துறைசெய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

சட்டத்தை மதிக்காமல் சண்டித்தனம் செய்யும் சாம்சங்!

சட்டத்தை நிலைநாட்ட தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்


சங்கம் வைக்கும் உரிமைக்காக சாம்சங் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை. ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்திய சட்டத்தை மீறுவதை ஒன்றிய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கக் கூடாது.

சங்கத்திற்கான தேவையை சாம்சங் தொழிலாளர்கள் உணர்ந்ததே 8 மணி நேர வேலையை உத்தரவாதப்படுத்துவதற்காகத்தான். ஓய்வு கிடையாது, விடுமுறை எடுக்க முடியாது, எதிர்த்துகேட்டால் தனி அறையில் பூட்டி வைப்பது, எதிர்த்து கேட்பவர்கள் 10 பேரை போட்டுத்தள்ளினால் எல்லாம் சரியாகி விடும் என்று வன்முறையை தூண்டுவது என அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளிலும் சாம்சங் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. சட்டத்தை அமல்படுத்த வேண்டிய தொழிலாளர் நலத்துறையும் காவல்துறையும் சாம்சங் நிறுவனத்தின் இன்னொரு துறைபோல நடந்து கொள்வது எந்த வகையிலும் ஏற்க முடியாது.

போராடும் தொழிலாளிகள் எந்த பொது இடத்திலும் கூடக் கூடாது என மிரட்டல் விடுக்கும் காவல்துறை அருகில் உள்ள கிராமங்களில் இடமே கொடுக்கக் கூடாது என்றும் மிரட்டியிருக்கிறது. 2 கி.மீ.க்கு அப்பால் ஒரு தனியார் இடத்தில் தொழிலாளர்கள் கூடி அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டால் அந்த இடத்தின் உரிமையாளரை மிரட்டுகிறது காவல்துறை. பந்தல் போடுவதற்கு வருபவர்களை மிரட்டி அனுப்பியதால் வேறு வழியின்றி பந்தல் பொருட்கள் அனைத்தையும் தொழிலாளர்களே விலை கொடுத்து வாங்க வேண்டிய ஒரு அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

தொழிலாளர் நலத்துறை சங்கப்பதிவை ஏற்காமலும், மறுக்காமலும் நிறுத்தி வைத்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றில் வேறு எந்த இடத்திலும் வாடகை கட்டிடத்தில் தொழிற்சங்கம் இயங்கினால் வாடகை ஒப்பந்தம் கேட்ட வரலாறே இல்லை. ஆனால், சாம்சங் தொழிற்சாலைக்காக அப்படியொரு கேள்வியை கேட்டிருக்கிறது தொழிலாளர் நலத்துறை. தொழிலாளர்துறையின் சில அதிகாரிகளே தொழிலாளர்களை மிரட்டுவதாகவும் தெரிகிறது. இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. போராடும் தொழிலாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சாம்சங் நிறுவனத்தை கண்டிப்பதோடு, தொழிலாளர் நலத்துறையும், காவல்துறையும் தமிழ்நாடு அரசின் துறைகளைப் போல நடந்து கொள்ள வேண்டும், சட்டத்தை பின்பற்ற வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசு போராடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய முறையில் தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.



திரு. கே. பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
சிபிஐ (எம்),
தமிழ்நாடு.

Leave a Reply