Home>>அரசியல்>>மன்னார்குடியின் மிகப்பெரிய நீர் ஆதாரம் குப்பை கிடங்காக மாறும் அவலம்.
மன்னார்குடியின் மிகப்பெரிய நீர் ஆதாரம் குப்பைகிடங்காக மாறும் அவலம்.
அரசியல்சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

மன்னார்குடியின் மிகப்பெரிய நீர் ஆதாரம் குப்பை கிடங்காக மாறும் அவலம்.

மன்னார்குடி நாகராட்சிக்கு என் கண்டனங்கள் – நகரின் மிகப்பெரிய நீர் ஆதாரம் குப்பைகிடங்காக மாறும் அவலம்.

இன்று எதார்த்தமாக பகிரி (WhatsApp) வழியில் பசுமை விகடன் செய்தி ஒன்று கண்ணில்பட்டது அதில் மன்னார்குடியில் சில இளைஞர்கள் இணைந்து ஒரு நீர்த்தேக்கத்தை புணரமைத்ததும் அதை குப்பை கிடங்காக மாற்றப் போவதாகவும் செய்திகள் வந்திருந்தது. அதை அத்தெருவில் வளர்ந்தவள் என்ற முறையிலும் இதற்கு முன் நகர மன்ற தலைவராக இருந்ததாலும் மக்களோடு சில செய்திகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மேலும் இந்த விளக்கத்தின் வாயிலாக மன்னார்குடிநகராட்சி நிர்வாகத்திற்கு என் கடுமையான கண்டனத்தை தெரிவிக்க விரும்புகிறேன்.

நல்ல தண்ணீர் டேங்க் நாங்கள் வளர்ந்த நடராஜப் பிள்ளை தெருவிற்கு அருகே உள்ள ஜீயர் தோப்பில் எங்களது முன்னோர்கள் உருவாக்கிய நீர் நிலை ஆகும் இந்த நீர் நிலைக்கு வடுவூர் ஏரியிலிருந்து நகராட்சிக்கு சொந்தமான 22 அடி அகல வாய்க்கால் வழியாக தண்ணீர் நிரப்பப்படும். நிரப்பப்பட்ட தண்ணீர் அருகில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு வந்து pumping system மூலம் அனைத்து தெருக்களுக்கும் குடிநீர் வழங்கப்படும் இதனை சில பெரியவர்கள் சொல்ல நான் கேள்விப்பட்டது. இந்த நீர் நிலையை பாதுகாக்க 30க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியமற்றப்பட்டிருந்தனர் என்றும் நான்கு பக்கம் கரைகளும் அதாவது தற்போது அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் உள்ள பாதை நீர்த்தேக்கத்தின் இரு பக்க கரைகளாகவும் தெற்கு மற்றும் கிழக்குப் பக்க கரைகளோடு இணைந்து இருக்கும்.

பள்ளியின் தற்போதைய மைதானமும் இன்று இளைஞர்கள் புணரமைத்ததாக கூறும் இடமும் அன்று மொத்த நீர்த்தேக்கமாக இருந்தது. கரையில் இருந்து மதுக்கூர் சாலை வழியாக சிறிது தூரம் மதில் சுவர்கள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த மதில் சுவர்களை தாண்டி தண்ணீர் செல்ல முடியாத அளவிற்கு கட்டுமானம் செய்திருந்தனர் அங்கே தண்ணீரை சுத்திகரிக்கும் டேங்குகளும் இருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம் காலப்போக்கில் அவற்றில் பல அழிந்து விட்டது இருந்தாலும் இன்றும் அந்த இடம் நீர்த்தேக்கமாக இருந்ததை நானே பார்த்துள்ளேன்.

காலப்போக்கில் குடிநீர் திட்டங்கள் வளர்ச்சி அடைந்ததாலும் வீட்டிற்கு வீடு குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டதாலும் இந்த நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் வாய்க்கால் சில தனியார் ஆக்கிரமிப்புகளால் பயன்பாடின்றி போனதே தவிர அதன் கரைகள் அப்படியே தான் இருந்தன அதன் இரு பக்க கறைகளுக்கு வெளியில் தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்கப்பட்டது மீதம் இருந்த மூன்று பக்க கரைகளுடன் வடக்குப் புறம் புதிதாக கரை அமைத்து தண்ணீர் நிரப்பப்பட்டது.

இந்த உண்மைகள் அனைத்தையும் மறைத்துவிட்டு இன்றைய நகர மன்ற தலைவர் ஊடக செய்தியில் அது நீர் நிலையாக இருந்ததற்கு எந்த ஆவணமும் இல்லை என்று கூறுவது ஏற்புடையது அல்ல. அப்படி அவர் சொல்வது உண்மையானால் நமக்கு முன்னால் மன்னார்குடி நகராட்சியை நிர்வாகம் செய்தவர்கள் சட்டத்திற்கு புறம்பாக அங்கே நீர்த்தேக்கி மக்களுக்கு விநியோகம் செய்தார்கள் என்று அவர் கூறுகிறாரா?

இதை முன்னாள் நகர மன்ற தலைவர் என்ற அடிப்படையில் என்னால் கடந்து செல்ல முடியவில்லை. நகராட்சிக்கு குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லாமல் போகலாம் அதற்கான வசதிகளையும் வாய்ப்புகளையும் நகராட்சி தான் உருவாக்கிக் கொள்ள வேண்டுமே தவிர, இடம் இருக்கிறது என்பதற்காக ஒரு நீர் நிலையை குப்பை கிடங்காக மாற்ற முயற்சி செய்வது ஆக்கப்பூர்வமான செயலாக இருக்காது.

மேலும் அந்த இடத்தில் 1500க்கும் மேற்பட்ட மாணவிகளும் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 70க்கும் மேற்பட்ட மனநல குன்றிய குழந்தைகளும் கல்வி பயின்று வருகின்றனர் அருகில் முக்கியனான மருத்துவமனையும் உள்ளது. அவர்களின் சுகாதாரத்தை நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும் மேலும் அருகாமையிலேயே மக்கள் அடர்த்தியாக வாழும் கிழங்குகளம், ஜியார் தோப்பு மற்றும் தாயார் நகர் போன்ற குடியிருப்புகளும் உள்ளன.

அங்கிருக்கும் மக்கள் புழு, பூச்சிகள், கொசு, மற்றும் ஈ தொல்லை தாங்க முடியவில்லை என்றும் துர்நாற்றத்தில் குடியிருக்க முடியவில்லை என்றும் கூறுவதை கேட்க முடிகிறது. இந்த சம்பந்தப்பட்ட இடம் மன்னார்குடியின் இதயத்தை போன்று மையப்பகுதி இதை நிரந்தர குப்பை கிடங்காக மாற்றுவதை எக்காலத்திலும் அனுமதிக்க முடியாது.

நிர்வாகத்தில் இன்று நாம், நாளை வேறொருவர் இருப்பார் ஆனால் மக்களும் அங்குள்ள வளங்களும் நிரந்தரமானவை. அவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டியது மட்டுமே ஒரு தலைமையின் பண்பாக இருக்க வேண்டும். அதிலிருந்து விலகும் பட்சத்தில் தெருவாசி என்ற அடிப்படையில் நானும் மக்களோடு களத்தில் இறங்கி போராட வேண்டிய சூழ்நிலை வரும் என்பதையும் இப்பதிவின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.


சகோதரி. சுதா அன்புச்செல்வன்,
வழக்குரைஞர்,
முன்னாள் நகர்மன்ற தலைவர்,
மன்னார்குடி.

Leave a Reply