Home>>கட்டுரைகள்>>கல்வி சீர்வரிசை
கட்டுரைகள்

கல்வி சீர்வரிசை

பொதுவாக பெண்ணைக்  கட்டி கொடுக்கும் பெண் வீட்டார், மாப்பிளை வீட்டிற்கு சீர் வரிசை வழங்குவார்கள், தங்கள் பெண் புகுந்த வீட்டில் கஷ்டப்பட கூடாது என்ற நல்ல எண்ணத்தில். அதே போல் பதிலுக்கு மாப்பிள்ளை வீட்டாரிடம் அவர்கள் எதிர்பார்ப்பது, தங்கள் பெண்ணை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்பதே. அதேபோல் தாங்கள் படித்த பள்ளிக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் சீர் வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்…!

மன்னார்குடி அருகே கீழத்திருப்பாலக்குடி அரசுப்பள்ளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் சீர்வரிசைப்  பொருட்களை கிராம மக்கள் ஊர்வலமாக வந்து வழங்கினர். மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கீழத்திருப்பாலக்குடி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 53 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். எண்ணிக்கை குறைவால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட இப்பள்ளி, கிராம மக்கள் முயற்சியால் மேம்படுத்தப்பட்டு கூடுதல் வசதிகளுடன் புதுப்பொலிவுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 

இப்பள்ளியின் கூடுதல் வளர்ச்சிக்காக பள்ளியில் படித்த பழைய மாணவர்களின் முயற்சியால் கிராம மக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆகியோர் இணைந்து பள்ளிக்கு அடிப்படை தேவையான மடிக்கணினி, விளையாட்டு சாதனங்கள், அறிவியல் உபகரணங்கள், மின்விசிறி உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்களை கிராம மக்கள் ஊர்வலமாக வந்து பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினர்.

மேலும் இப்பள்ளியின் மேம்பாட்டிற்காக கிராம மக்கள் தொடர்ந்து தங்களால் இயன்ற நிதி உதவியும் வழங்கி வருகின்றனர்.

நகரத்து கல்விதான் சிறந்தது என்று அதை நோக்கி கல்வி கற்க படை எடுக்காமல் கிராமத்து பள்ளியில் பயின்றாலும் வாழ்வில் உயர்வே என்பதை உணர்ந்து இப்பள்ளி தொடர்ந்து செயல்பட அனைவரும் ஒன்றுபட வேண்டும். கிராம மக்கள் உதவி செய்வது மட்டுமின்றி தன் வீட்டுக் குழந்தைகளையும் இப்பள்ளியில் சேர்க்க வேண்டும்..

இந்த பள்ளியும் கிராமத்து மக்களின் உதவும் உள்ளமும் வளம் பெற வாழ்த்துகள்!…

தமிழ் கல்வியை ஆதரிப்போம்!..      தமிழை வளர்ப்போம்!..

 

பொன்மணி தர்மராஜன், BE., பரவாக்கோட்டை.

(2050 சித்திரை மாத மின்னிதழிலிருந்து)

 

Leave a Reply