Home>>ஆராய்ச்சி>>பெருவுடையார் கோவில் என்னும் “பேரதிசயம்”
ஆராய்ச்சிதமிழ்நாடுவரலாறு

பெருவுடையார் கோவில் என்னும் “பேரதிசயம்”

அதிசயம் என்றால் என்ன??
ஒரு விடயம் மீண்டும் நடக்க வாய்ப்பு இல்லாமல் இருப்பது  அல்லது ஏற்கனவே உருவாக்கிய ஒரு பொருளை மீண்டும் உருவாக்க முடியாமல் இருப்பது..
அப்படி பார்க்கையில் மாமன்னன் ராஜராஜ சோழன் எழுப்பிய தஞ்சை பெருவுடையார் கோவில் ஒரு “அதிசயமே”.

அப்படி என்ன அதிசயம் உள்ளது அதில் ,எல்லாரும் சொல்வது போல் அந்த கோவில் கோபுர நிழல் கீழே விழாது ,அதனால் அது அதிசயம் என்று எடுத்து கொள்ளலாமா??
இல்லை இது வதந்தி.

பின் என்ன அதிசயம் அதில்?? அதை பார்க்கும் முன் பெருவுடையார் கோவிலை பற்றி சில அடிப்படை விசயங்களை தெரிந்து கொள்வோம்.

ராஜராஜ சோழன் இலங்கைக்கு கடல் வழியாக படை எடுத்து சென்ற போதே அங்கு உள்ள வானுயர்ந்த புத்த விகாரங்களை கண்டு பிரமித்துப்போய்அதை போல் நம் ஊரிலும் எழுப்ப வேண்டும் என்று எண்ணினார்.
அதனால் “புத்தகயா” கோவிலை  பார்வையிட்டு அதன் தாக்கத்தில் தமிழகத்தில் ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று எண்ணி கி.பி.1004 ம் ஆண்டு ஆரம்பித்தார்.

ஆகம விதிகள்,சித்தர்கள் குறிப்பேடுகள்,கட்டடக்கலை தொழில்நுட்பம்,சிற்பக்கலை.
இவைகள் அடிப்படை யில் இந்த கோவில் கட்டப்பட்டது.

இவற்றில் இந்த சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை தொழில் நுட்பம்(structural technology) இவை இரண்டும் தான் இன்று அனைவராலும் ஆச்சரியதோடு பார்க்கப்படுகிறது.
மிக வெளிப்படையாக காண்பவரை கவரும் சிற்பங்கள் ,சிலைகள் அனைவருக்கும் பரிச்சயம் உண்டு.இந்த நேரத்தில் சிற்பங்களுக்கும் சிலைகளுக்கும் உள்ள வித்தியாசம் அறிவோம்.
சிற்பம் என்பது அனைத்து ஜீவ ராசிகளையும் குறிக்கும்.(மீன்,புலி,மயில்).
சிலை என்பது மனிதர்களை மட்டும்  குறிக்கும்.

இந்த கோவில் அதிசயம் என்று சொல்ல காரணம் அதன் கட்டடக் கலை தொழில்நுட்பமே.

மிக எளிதாக ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம் எப்படி என்று.

1.முதலில் இந்த கோவிலை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்தது.

தஞ்சாவூரில் கரிசல் மண்,வண்டல் மண் மிகுந்த பகுதி.இங்கே பல நூறு டன் எடை கொண்ட கோவிலை எழுப்ப முதலில் பூமி தாங்க வேண்டும்.அதற்கு இப்போது மண் பரிசோதனை செய்வது உண்டு(soil test).

ஆனால் அந்த காலத்தில் எப்படி சாத்தியம்??

சாத்தியம் ஆகி உள்ளது.தஞ்சாவூரிலே மிக உயரமான இடத்தில் ,பூமிக்கு கீழே செம்மண்,செம்பாறைகள் ,சுண்ணாம்பு பாறைகள் மிகுந்த மிக அழுத்தமான அதாவது ஒரு சதுர அடிக்கு 160 டன் எடையை தாங்க கூடிய இடத்தை இந்த கோவில் கட்ட தேர்வு செய்தது எப்படி எந்த நவீன தொழில் நுட்பமும் இல்லாத காலத்தில் சாத்தியப் பட்டது என்பது ஆச்சர்யம் தானே!! அதனால் தான் எத்தனை இயற்கை சீற்றங்கள் வந்தாலும் எந்த பாதிப்பும் இல்லாமல் கம்பீரமாக உள்ளது.

2.மிக உயரிய விமானம்.பொதுவாக விமானத்திற்கும் ,கோபுரத்திற்க்கும் வித்தியாசம் உண்டு.கோபுரம் என்பது கோவில் நுழைவாயிலில் இருப்பது.விமானம் என்பது கருவறை மேலே எழுப்பப்படுவது.

இந்த விமானத்தின் மொத்த உயரம் 216 அடி .
இதுவே உயரமான விமானம்.எனவே இனி பெரிய கோபுரம் என்று சொல்லாமல் ,மிகப் பெரிய விமானம் என்று சொல்வது தான் சரி.
இந்த விமானம் நான்கு சுவர்களை ஒன்றோடு ஒன்றின் மீது சாய்ந்து கட்டப்பட்டுள்ளது.

3.இதனால் ஏற்படும் இழுவிசையினால் (tensile force) ஏற்படும் இழப்பை போக்க விமானத்தின் உள்ளே காற்று புகும் படி வைக்கப்பட்டுள்ளது.(உள்ளீடற்ற உட்புறம் வெளிக்காற்றை ஆக்கிரமித்து இழுவிசை யை சமன் செய்கிறது).

4.அடுத்து பொதுவாக ஒரு கல் மீது மற்றொரு கல் வைக்கும் போது அமுக்கு விசை (compressive force) ஏற்பட்டு ஒரு குறிப்பிட்ட காலத்தில் கட்டடம் விரிசல் ஏற்படும்.

ஆனால் இங்கே நம் கோவிலில் ஒரு கல் மீது மறு கல் நேர்கோட்டில் வைத்து இடைப்பட்ட பகுதியில் சிமெண்ட் பூச்சு போல் பூசப்பட வில்லை.அப்படி எனில் கண்டிப்பாக அமுக்கு விசை பாதிப்பு உண்டு.

அதற்கு மாறாக key ways போன்று ஒரு கல் ‘ப’ வடிவிலும் அதன் மேல் வைக்க படும் கல் ‘ப’வை தலைகீழாக இருக்கும் படியும் செய்யப் பட்டு ஒரே நேர்கோட்டில் இல்லாமல் ‘பத்தி திரிப்பு “முறையில் சற்று கோணத்தில் பொறுத்தப் படுகிறது, இடையில் எந்த பூச்சு வேலையும் இல்லாமல்.இதனால் எந்த காலத்திலும் அமுக்கு விசையால் எந்த நகர்வும் அசைவும் இருக்காது.

5.இது எல்லாவற்றையும் விட விமான உச்சியில் 30 அடி உயர ,80 டன் எடை உள்ள ஒரே கல்லால் ஆன விமான உச்சி உள்ளது.

இந்த 80 டன் எடை உள்ள கல்லை எப்படி 186 அடிக்கு மேலே ஏற்றி இருக்க முடியும்.
இது தான் காண்பவர் அனைவரையும் மண்டையை குடையும் கேள்வி.இன்றைய தொழில் நுட்பத்தில் கூட 80 டன் எடை உள்ள ஒரு பொருளை 186 அடி வரை தூக்கும் திறன் கொண்ட கிரேன் வசதி கிடையாது.
அப்படியெனில் அந்த காலத்தில் எப்படி சாத்தியம் ஆனது??

இந்த ரகசியம் இன்று வரை உறுதியாகத் தெரிய வில்லை.ஆனால் இப்படித்தான் செய்து இருக்க வேண்டும் என சில யூகங்கள் உள்ளன.

*பிதாகரஸ் தியரம் படி 186 அடி உயரத்திற்கு ஏற்ப ஒரு கர்ணப் பக்கம் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.அதாவது மண்ணால் ஏற்படுத்தப் பட்ட மிக அகலமான கோபுரத்தை தொடும் ஒரு கர்ணப்பாதை.அதில் பல யானைகளை கொண்டு இழுத்தும் ,உருட்டியும் கல்லை கொண்டு போய் சேர்த்து இருக்கலாம்.

*மற்றொன்று சுருள் பாதை (spiral) விமானத்தை சுற்றி மண்ணால் ஆன ஒரு சுருள் பாதை ஏற்படுத்தி பின் அதில் பல யானை களை கொண்டு ஏற்றி இருக்கலாம்.

எப்படி பார்த்தாலும் நமக்கு கண்ணை கட்டுகிறது  அல்லவா !இது போல் இனி செய்ய முடியுமா??
அதனால தான் இது அதிசயம்.

மேலும் இதை விட பெருமை கொள்ள வேண்டிய விஷயம்.இந்த கோவிலை வெறும் 7 ஆண்டுகளில் அதாவது 1010 ம் ஆண்டுக்குள் கட்டி முடித்து விட்டார்கள்.வெறும் மனித உழைப்பில் ,மூளையில் இவ்ளோ குறுகிய காலத்திற்குள் கட்டப்பட்ட கோவில் பெரும் அதிசயம்.

மேலும் இந்த கோவிலை கட்ட உறுதுணையாக இருந்த அனைவர் பெயரும் கல்வெட்டுகளில் பொறிக்கப் பட்டுள்ளது.மாமன்னர் ராசராசன் பெயர் உட்பட.அது தான் நமக்கு உள்ள ஆதாரம் இன்று வரை.(இல்லை எனில் வரலாறு கள் மாற்றப்பட்டு இருக்கும்).

இப்படிப்பட்ட பல ஆயிரம் எடை கொண்ட கோவிலுக்காண புதைவடை( அஸ்திவாரம்) வெறும் 5.75 அடி என்றால் நம்ப முடிகிறதா??

மணல் ,நீர்,சுண்ணாம்பு ,சிறு கற்கள் என நாம் இன்று பயன் படுத்தும் கான்கிரீட் முறையைத் தான் அப்போது பயன்படுத்தி இருக்கிறார்கள்.

ஆக என்ன ஒரு கணக்கிடுதல்  வேண்டும் இது போன்ற ஒரு கட்டடம் உருவாக்க..

நிச்சயம் நாம் பெருமை கொள்வோம் தமிழர் நாம் உலகின் தலைச்சிறந்த கட்டட நிபுணர்கள் என்று..

அதற்கு உதாரணம் இந்த
“பெருவுடையார் கோவில் என்னும் பேரதிசயம்”

இந்த கட்டுரை யை உருவாக்க உதவியாக இருந்தது திரு.தெய்வ நாயகம் அவர்களின் “ராஜ ராஜீஸ்வரம்”புத்தகம்.
அவர் 50 ஆண்டுகள் கோவிலை பற்றி ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுதி உள்ளார்.கோவிலை பற்றி மிக அதிகமாக தெரிந்து கொள்ள விரும்பும் நபர்கள் இந்த புத்தகத்தை படிக்க நான் பரிந்துரை செய்கிறேன்.
அந்த “ராஜ ராஜீஸ்வரம்”கடலில்  நான் அள்ளியது ஒரு குவளை நீர் மட்டுமே..
இது உங்கள் முழு தாகம் தணிக்காது..

–மன்னை செந்தில் பக்கிரிசாமி

Leave a Reply