வழக்கம் போல் அன்றும் தலைமுடியை இழுத்து வலியை பொருட்படுத்தாமல் சீவி இரட்டைப்பின்னல் போட்டுகொண்டிருந்தாள் அம்மா. பதின்மூன்று வயதான அப்பெண்ணுக்கு இயற்கை பெரிய பெண் என்ற மாற்றத்தை உடலில் ஏற்படுத்தி இருந்தாலும் உலகமே தெரியாத வெகுளி குழந்தை மனம் படைத்த சிறுமி அவள் என்பது அவளை பெற்ற அன்னைக்கே தெரியாத அதிசய உண்மை.வெகுளி தான் மக்கு அல்ல.
சாணம் தெளித்த வாசல் தரையில் அமர்ந்து தான் பெரும்பாலும் தலைசீவும் படலம் நடக்கும். நீயே சீவிக்கொள் என ஒருபோதும் அம்மா சொல்லியதில்லை. அவளுக்கும் கேட்க தோன்றியதில்லை. தனது ஊரிலேயே உள்ள அரசு மேனிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அவள், உணவு இடைவேளைக்கு வீட்டுக்கு வந்து செல்லும் போது தன்னை விட இரண்டு வகுப்புகள் அதிகம் படிக்கும் பக்கத்துவீட்டு அக்கா மதியமும் முகம் கழுவி பவுடர் பூசி செல்வதை பார்க்கும்போது அவளுக்கு வியப்பாய் இருக்கும். தனக்கு ஒருபோதும் அவ்வாறு செய்து கொள்ள தோன்றியதில்லையே, ஏன் என தெரியவில்லை என நினைத்துக் கொள்வாள். அதுபோன்ற எண்ணம் கூட அவளுக்கு வந்தது இல்லை. அவள் எண்ணம் எல்லாம் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும். எப்போதும் தன்னை முந்தி விடும் தன் சக மாணவனை விட அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். அவள் கனவு அக்கறை எல்லாம் படிப்பை, மேற்படிப்பை, பணி செய்வதை சுற்றியே இருந்ததால் இது போன்ற அந்த வயதுக்குரிய எதையும் அவள் சிந்திக்கவில்லை.
அம்மா முடிக்கும் தருவாயில், பெரியப்பா வீட்டு அண்ணன் தன்னை விட மூன்று அல்லது நான்கு வயது பெரியவர், ஆனால் பல வகுப்புகளில் தோல்வியடைந்து தற்போது அவரும் ஒன்பதாம் வகுப்பில் வேறு பிரிவில் படிக்கிறார். இருசக்கர மிதிவண்டியை வீட்டிற்கு எதிரே சாலையில் நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி வருவதை கவனித்தாள். புருவம் சுருக்கி அம்மா அவரை நோக்கினாள். என்ன விடயம் என்ற கேள்வி அவளது பார்வையில் தொக்கி நின்றது. தொண்டையை செருமி கொண்டு ஆரம்பித்தார் அவர். “சின்னம்மா தங்கச்சி சொல்லவில்லையா? பள்ளியில் சில பசங்க தங்கச்சிகிட்டே வம்பு பண்ணுறாங்க. தங்கச்சி பெயரை கூட கையில் எழுதி வச்சுருக்காங்க. உங்ககிட்ட தங்கச்சி சொல்லலையா பாத்து பாத்திரம் ” என்று முடித்து கிளம்ப எத்தனித்தார். அந்த அப்பாவி பெண்ணுக்கு காலுக்கு கீழ் பூமி நழுவிய உணர்வு. பயம் அப்பிக்கொண்டது. நடுக்கம் கண்டது உடல். கட்டுப்பாடு இல்லாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது.
பலநேரங்களில் மனித செயலுக்கு காரணத்தை கண்டறிவது தேவையற்ற பயனற்ற செயலாகிவிடும். அன்று அந்த அண்ணனின் செயலில் வேரூன்றி இருந்தது உண்மையான அக்கறையா, பொறாமையா, வெறுப்பா, கோவமா இன்றுவரை கணிக்கமுடியவில்லை. அந்த அப்பாவி கிராமத்து சிறுமிக்கு சூது வாது, உலகம் தெரியாவிட்டாலும், அவளுக்குள் இருந்த ஏதோ ஒன்று அவளுக்கு சொல்லிக்கொண்டே இருந்தது படி,படி ,படிப்பு, கல்வி ஒன்று மட்டுமே எல்லா துன்பத்திலிருந்து உன்னை மீட்டெடுக்கும் என்று. பதின்பருவ கோளாறிலும், படிப்பில் விருப்பம் இல்லாமலும் இருந்த தன்னையொத்த, தன்னை விட பெரிய தன் வகுப்பிலும் மற்றும் பள்ளியில் பயிலும் பலரும், உண்மையில் காதலே அல்லாத அப்பருவத்தின் வெளிபாட்டை காதல் என கற்பிதம் செய்து கொண்டு ஒரு பெண்ணை பின்தொடர்வது, எங்காவது நின்றுகொண்டு விடாமல் பார்த்து கொண்டிருப்பது, பெயரை அல்லது பெயரின் முதலெழுத்தை கையில் எழுதிக்கொள்வது, சட்டையில் அப்பெண்ணின் பெயரின் முதலெழுத்தை வெளியில் தெரியும்படி அயர்ன் செய்து பள்ளிக்கு போட்டு வருவது இவ்வாறான பதின்பருவ சேட்டை செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இவளுக்கும் இவ்வாறான நெருக்கடிகள், சங்கடங்கள், அவளது ‘உள்ளிருந்த படிக்க வேண்டும்’ என்ற உந்துசக்திக்கு பெரும் தொந்தரவாக இருந்தது. ஆனால் வீட்டிலே சொல்லும் அளவுக்கு வீடு அவளுக்கு நட்பாயில்லை. அம்மா எப்போதும் கண்டிப்பு காட்டி பயம் ஊட்டினாள். வீட்டிலே சொன்னால் படிப்பை நிறுத்தி விடுவார்கள் என்ற பெரிய பயம் அவளுக்குள். எப்படியும் சேட்டை மாணவர்களில் பலர் இந்த வருட பரிட்சையில் தோற்று வீட்டிற்க்கு சென்று விடுவார்கள். அப்படியே தேறினாலும் அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் நிச்சயம் தோற்றுவிடுவார்கள். அவர்கள் எல்லாம் பள்ளியை விட்டு சென்று விட்டால் இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும். அதுவரை இவற்றையெல்லாம் பொறுத்து தான் போக வேண்டும் வேறு வழியில்லை என முடிவு செய்து தான் பொறுத்துக் கொண்டிருந்தாள். மேலும் தன் காரணத்தை சொல்லும் அளவுக்கு அவளுக்கு அன்று சுதந்திரம் இல்லை. யாரேனும் குரலை உயர்த்தினால் கூட அவளுக்கு பேச்சு மறந்து கண்ணீருடன் நிற்கும் பேதை சிறுமியாய் இருந்தாள்.
சீராக போய் கொண்டிருந்த வாழ்க்கையில் கஜா புயல் அடித்து வீழ்ந்த தென்னந்தோப்பானாள். அம்மா அடுத்து என்ன செய்ய போகிறாள் என கலவரம் கண்டது மனது. படிப்பை நிறுத்திவிடுவாளோ என்ற நினைவு கண்ணீரை மேலும் பெருக்கெடுக்க வைத்தது. அண்ணன் போகும்வரை பொறுத்த அம்மா, திண்ணைக்கு வந்ததும் விழுந்தது முதல் அறை கன்னத்தில். பிறகு தாறுமாறாக விழுந்தது அடிகள், வசவுகள். உடல், மனது இரண்டும் ஒருசேர துவண்டது. அடியை விட அம்மாவின் வார்த்தைகள் அளவிலா துன்பத்தை கொடுத்து. அடுத்து என்ன நடக்க போகிறதோ என நடுங்கி ஒடுங்கி சுவரோடு பல்லியாய் பள்ளியை பற்றிய எண்ணத்தோடு கண்ணீர் சொறிந்து கிடந்தாள். அவள் பக்கத்து நியாயத்தை பார்க்க யாருமே இல்லை அன்று. செய்யாத தவறுக்கு வீண்பழி சுமந்து நின்றாள் அந்த பேதைச்சிறுமி.
அம்மாவின் கோபத்திலும் நியாயம் இருந்தது. அவளுக்கு கோபத்தை கொடுத்தது அன்றாடம் அவள் கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள் தான். பள்ளிக்கு செல்லும் பெண்களில் பெரும்பாலோர் காதலே அல்லாத பருவஉணர்ச்சியை காதல் என்றெண்ணி படிப்பை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை அவதானிப்பதற்குள் கைகளில் இரு பிள்ளைகளோடு, பொருள் தேட கணவனை வெளிநாடு அனுப்பி விரக்தியோடும், வேதனையோடும் அல்லலுறும் அவலநிலை அனுதினமும் அங்கே அரங்கேறுகிறது.
முதிர்ச்சி, கல்வி குடும்ப நடத்த அடிப்படை அறிவு, பொருளாதாரம் ஏதும் இல்லாமல் பருவக்கோளாறில் தவறு செய்து மண முடித்து மனமுடைந்து தங்களையும், தன் வருங்கால சந்ததியையும் வேதனையிலும் வறுமையிலும் விடும் கொடுமை தான் அம்மாவின் பயம் கலந்த கோபத்திற்கு காரணமாக இருந்ததை அந்த பேதைச்சிறுமியால் அன்று சிந்தித்துணர வழியில்லை .
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையோடு வயலுக்கு சென்று திரும்பிய அப்பாவிடம் நடந்ததையும் கூற, கூடவே இவளும் வழி தவறி விட்டாள், அந்த பையனோடு பேசி கொண்டிருக்கிறாள். படிப்பில் கவனம் இல்லை என்று அவளது அனுமானத்தையும் சொல்லி இடையே சிறுமிக்கு இரண்டு அடியையும் கொடுத்து அவளும் அழுதாள். அப்பாவி அப்பா ஏதும் பேசாமல் காலை உணவை முடித்து வழக்கம்போல் அடுத்து வேலைகளை கவனிக்க சென்று விட்டார். அம்மாவும் பலமான சிந்தனையோடு மதிய உணவு தயார் செய்ய தொடங்கிவிட்டாள். ஒரு முடிவுக்கு வர அவளுக்கு அந்த சமையல் நேரம் உதவியது போலும்.
மதிய உணவு இடைவேளைக்கு வீட்டுக்கு வந்த தம்பியை பார்த்த பிறகே தான் காலையிலிருந்து கண்ணீர் சொறிந்து கிடப்பதும், இனிமேல் பள்ளிக்கு போகவே முடியாது போலும் போன்ற எண்ணங்கள் தோன்ற மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்தது. தன்னை விட இரண்டு வயது இளையவன். விளையாட்டு பிள்ளை. வீட்டில் நடந்த ஏதும் அறியாமல் வழக்கம் போல் மதிய உணவை முடித்து பள்ளிக்கு கிளம்பி சென்றான். அப்பாவுக்கும் சாப்பாடு போட்டு எல்லாவற்றையும் ஒழுங்கு செய்து முடித்த அம்மா ஒரு தீர்மானத்தோடு தனது அழுக்கடைந்த புடவையை மாற்றிக் கொண்டு தலையை சீவிக்கொண்டு கிளம்பினாள். பேதைச்சிறுமியிடம் வந்து கடுமையான குரலில் கிளம்பு பள்ளிக்கு என்று அதட்டல் போட்டாள். பயந்து போனாலும் பள்ளிக்கு என்ற வார்த்தையை கேட்டதும் பெரிய நிம்மதி பரவியது உள்ளுக்குள்.
அம்மா முன்னே வேகமாக நடக்க, அவள் பின்னால் தலையைகுனிந்தபடியே நடந்துக் கொண்டிருந்தாள். எதிர்படும் எல்லோரின் விசாரணை கேள்விகளுக்கும், பார்வைகளுக்கும் ஒன்றுமில்லை, பள்ளிக்கூடம் வரை போய்வருகிறேன் வார்த்தைகளாலும், புன்னகையாலும் பதில் சொல்லி நடந்து கொண்டே இருந்தாள் அம்மா.
பள்ளியின் முகப்பை நெருங்கியவுடன் படபடவென்று அடிக்கதொடங்கியது இதயம் சிறுமிக்கு. உன்னுடைய வகுப்பு எங்கே, நேராக அங்கே செல் என உத்தரவிட்டு பின்தொடர்ந்தாள் அம்மா. அது கிராமத்து பள்ளி, மேலும் அங்கே பயிலும் எல்லோருமே பெரும்பாலும் உறவினர்களாகவும், ஆசிரியர்கள் அனைவரும் அருகில் இருக்கும் கிராமத்தையோ, சிறு நகரத்தையோ சேர்ந்தவர்களாய் இருந்தார்கள். கிராமத்து ஆட்களுக்கு அனுமதி பெற்று உள் செல்ல வேண்டும் என்பதெல்லாம் ஒருபோதும் நடைமுறையில் இல்லை.
உள்நுழைந்தவுடன் முதலில் இருந்த தலைமையாசிரியரின் அறையை தவிர்த்து சிறுமி படிக்கும் ஒன்பதாம் வகுப்பு அ பிரிவின் வாயிலில் சிறுமியை உள்ளே செல்ல சொல்லி விட்டு கோபத்தோடு பேச ஆரம்பித்தாள் அம்மா. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு சமூக அறிவியல் பாடத்தை நடத்திக் கொண்டிருந்த அந்த வேட்டியணிந்த உயரமான சதுர உருவம் கொண்ட, அண்மையில் தான் அந்த கிராமத்தில் வேலைக்கு சேர்ந்திருந்த அந்த ஆசிரியருக்கு ஒன்றும் விளங்காமல் பாடத்தை நிறுத்தி விட்டு சிறுமியை பரிதாபமாக பார்த்தார்.
அம்மா அனைத்து மாணவர்களையும் வசைபாடினாள். ஆசிரியர்களையும் விட்டு வைக்கவில்லை. அவமானத்தினால் சிறுமி துடிதுடித்து கூனிக்குறுகி தலை குனிந்து கண்ணீரால் தன் மரபலகையை கழுவிக்கொண்டிருந்தாள். அவள் அருகில் அமர்ந்திருந்த அவளது நெருங்கிய பள்ளித்தோழி ஆதரவாக கைகளை பற்றிக்கொண்டாள். அம்மா போட்ட சத்தம் கேட்டு அங்கே ஓடிவந்த தலைமையாசிரியர் வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என்று சமாதானபடுத்த முயன்றார். அம்மா ஒரு நிபந்தனையோடு அங்கிருந்து அகன்றாள். அதை தான் அவள் காலையிலிருந்து சிந்தனை செய்து கண்டுணர்த்திருக்கிறாள் போலும். அதைக்கேட்டதும் தன் கையை பற்றிக்கெண்டிருந்த தோழி கையை விடுவித்துக்கொண்டு நகர்ந்து அடுத்த மரப்பலகை இருக்கையில் அமர்ந்தாள்.
ஆம் எனது நினைவு தெரிந்த நாளில் நான் பெற்ற முதல் நெருங்கிய பள்ளித்தோழி அவள் தான். எனக்கு மிகவும் பிடித்தவள். ஆறாம் வகுப்பில் தான் எங்கள் ஊருக்கு வந்து எங்கள் பள்ளியில் என்னோடு சேர்ந்தாள். நகரத்தில் படித்ததால் எங்கள் வகுப்பிலேயே நாகரீகமானவள் அவள் தான். முன்நெத்தியில் முடியை குறுகியதாக வெட்டிவிட்டிருப்பாள். நல்ல நிறமாக தனிஅழகுடன் இருப்பாள். கிராமத்து மக்களுக்கு அவளது நடை, உடை பாவனைகள் வேறுவிதமாக இருந்தது போலும். பொறமைகூட காரணமாக இருந்திருக்கலாம். அம்மாவும் இந்த தவறான கணிப்பை கேட்டு நம்பி அவளோடு நட்பு தான் என்னையும் கெட வைக்கிறது என முடிவுக்கு வந்திருந்தாள். அதனால் தான் அவளோடு எனக்கிருந்த நட்பை அன்றோடு முறித்து போட்டாள். அவளோடு பேசினாலோ பழகினாலோ படிப்பை நிறுத்திவிடுவேன் என பயம் காட்டினாள்.
செய்தி பள்ளி ஆசிரியர்களுக்கு தெரிந்து அடுத்தடுத்த நடந்த வகுப்புகளில் அவளிடம் ஏதும் கேட்காமல் வகுப்புகள் அமைதியாக நடந்து முடிந்தது. பள்ளிக்கூடம் முடித்து வீடு திரும்பியவளிடம் வெறுமையும்,விரக்தியும் தனிமையும் ஒட்டிக்கொண்டன. வீட்டில் யாரும் முகம் கொடுத்த பேசவில்லை. தான் என்ன தவறு செய்தோம். எதற்காக இத்தனை கடுமையாக சொற்கள். நடத்தையை பழிக்கும் அவச்சொல். அந்த வயதில் பள்ளியில் உள்ள நட்பும், மரியாதையும் ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ எவ்வளவு உயர்ந்தது. அம்மா எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தி நட்பையும் முறித்து கூனி குறுக செய்துவிட்டாள். என்ன செய்வது என தெரியாமல் குழம்பி புத்தக பையோடு நடுவீட்டில் அமர்ந்தாள்.
எல்லாமே முடிந்து விட்டது போல் தோன்றியது. இவ்வளவு வசுவுகளையும் ,
பழிச்சொல்லையும் கேட்டுவிட்டு ஏன் இன்னும் உயிரோடு இருக்க வேண்டும். யாருக்கும் புரியவைக்க முடியாது. யாரும் தன்னை தன் உயர் கல்வி கற்கும் கனவு, சாதிக்க வேண்டும், வெற்றியாளராக வேண்டும், எக்காரணத்தை கொண்டும் திருமணத்திற்கு மட்டுமே தகுதி சேர்க்க அனைவரும் படிக்கும் அருகிலுள்ள மகளிர் கல்லூரிக்கு மட்டும் போகவே கூடாது போன்ற தனது எண்ணங்கள் அனைத்தையும் யாரும் புரிந்து கொள்ளப்போவதுமில்லை. அதுமட்டுமில்லாமல் இன்று குழி தோண்டி புதைத்தும் விட்டார்கள். ஏன் உயிரோடு இருக்க வேண்டும் என தோன்ற நிமிர்ந்தவளுக்கு நேராக கொல்லைப்புறத்திலிருந்த கேணி கண்ணுக்கு பட்டது.
சாவை எண்ணியதும் நெஞ்சுக்குள் பயம் அப்பிக்கொண்டது. சாவது கோழைத்தனம் இல்லை. வீரச்செயலும் இல்லை. அதற்கு ஒருதனி கிறுக்குத்தனம் வேண்டும் போலும். அது அவளிடம் இல்லை. உள்ளிருந்த ஏதோ ஒன்று எச்சரிக்கை விடுத்தது. கேள்விகளை எழுப்பியது. சரி நீ செத்து விட்டால் நாளை என்ன நடக்கும் இங்கே? அம்மா சொன்ன நினைத்த தவறான அபிப்ராயங்கள் எல்லாம் உண்மையாய் போகும். பொய் உண்மையாகும். உன் சாவு பொய்யை உண்மையாக்கும்.
அதை தான் நீ விரும்புகிறாயா? சாவு உன் துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுமா? ஒரு வாரம் உன்னை பற்றி பேசிவிட்டு மறந்து போவார்கள் இந்த மனிதர்கள். இதை தான் நீ அனுதினமும் கனவு கண்டாயா? அகத்திலிருந்து வந்த அந்த குரல் எழுப்பிய வினாக்களுக்கு விடை இல்லை அவளிடம். ஆனால் இருளை விரட்டி வெளிச்சம் போல் அவளுக்குள் இருந்த துன்பத்தை, மரண எண்ணத்தை அந்த குரல், வினாக்கள் விரட்டியது. யாரும் இந்த ஊரிலே எடுக்காத மதிப்பெண் எடுத்து காட்ட வேண்டும். தான் யாரென்று இந்த உலகுக்கு, குறிப்பாக அம்மாவிற்கு காட்ட வேண்டும்.
தன்னை பற்றிய அவளது எண்ணங்கள் எல்லாம் தவறு என அவளுக்கு புரிய வைக்க வேண்டும். நீண்ட மூச்சை உள்வாங்கிய சிறுமிக்கு கண்ணீர் நின்றது. மனதுக்குள் ஒரு வெளிச்சம் பரவியது. அவமானம் வைராக்கியத்தை விதைத்து விருச்சமாக்கியது. யாரோடும் பேசவில்லை. புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கினாள். சாவு எதற்குமே தீர்வாகாது. பொய்களை பொய்யாக்க வாழ்ந்து காட்ட வேண்டும்.
சகிப்புதன்மையோடும் பொறுமையோடும் வாழ்ந்து காட்டவேண்டும். அன்று அப்பேதை சிறுமிக்கு உள்ளிருந்த உள்ளொலியும் அகவிளக்கும் அறிவு வெளிச்சத்தை தூண்டி அவளை வாழ்வின் உயரங்களை தொட துணை புரிந்தது. அடுத்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அந்த கிராமத்து பள்ளியில் அதுவரை எந்தவொரு பெண்ணும் பெறாத மதிப்பெண்கள் பெற்று தன்னை நிரூபித்தாள் அவள்.
அன்று பிரிந்த அவள் தோழி அவர்கள் அனைவரது கூற்றையும் மெய்யாக்கும் வண்ணம் தேர்வில் தோற்று போனது துர்லபமா இல்லை நட்பு முறிவின் விளைவா விடைதெரியா வினாக்களின் பட்டியலில் சேர்ந்துவிட்ட கேள்வி. குஞ்சை அடைகாக்கும் கோழியை அன்று அழ வைத்த அம்மா புரிந்து கொண்ட பிறகு பட்டம் போல சிறுமியை சுதந்திர விண்ணில் பறக்க வைத்ததும், ஆண் பெண் பேதமற்று அத்துணை நண்பர்களையும் வீட்டுக்கு அனுமதித்ததும், அன்பாய் உணவிட்டு அனுசரிப்பதும் இன்று வரை மகளை பற்றிய பெருமிதம் அந்த கிராமத்து தாய்க்கு ஏராளம். பிள்ளைகளை பட்டம் போல பறக்க விட்டு கவனிப்பு எனும் நூல் கொண்டு தேவைக்கேற்ப கட்டுப்படுத்த படிக்காத அந்த தாய்க்கு யார் கற்று தந்தது.
மேலும் படித்து பனிரெண்டாம் வகுப்பு தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று பல தடைகளை தாண்டி அவள் கனவு கண்டது போல் தொழில்நுட்ப உயர்கல்வி பயின்று சிறப்பாக பணி செய்து வருகிறாள். அவளது அகக்குரல் தான் இன்று வரை அவளை வழி நடந்து செல்கிறது. இன்னும் உயரங்களை தொட்டுவிட அவள் உழைத்து கொண்டே இருப்பாள் அக்குரலின் வழிகாட்டலோடு.
ஒவ்வொருக்குள்ளும் ஒரு குரல் இருக்கிறது அதை மனசாட்சி, ஆத்மா என எப்படி வேண்டுமானாலும் பெயரிடலாம். அதற்கு சத்தியம் ஒன்றே தெரியும். அது சொல்வதெல்லாம் அறவழிதான். யார் ஒருவர் அதை கேட்க தொடங்குகிறார்களோ அவர்களுக்குள் அந்த சத்திய அறவழி குரல் ஆட்சி செய்யும். அவர்கள் செல்லும் வழி எல்லாம் சிறப்புத்தரும். மலையை போன்ற துன்பம் வந்தாலும் அதை தகர்த்தெறியும் வலிமையை, வழியை அவர்களுக்கு அந்த அறவழி அகக்குரல் காட்டிக் கொண்டே இருக்கும்.
முற்றும்.
– இளவரசி இளங்கோவன்,
(2051 ஆடி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)