Home>>கட்டுரைகள்>>வேறுபாடுகள் சூழ் உலகு
கட்டுரைகள்சுற்றுசூழல்

வேறுபாடுகள் சூழ் உலகு

ஒருவழியா கோடை காலம் முடிஞ்சு தென் மேற்கு பருவமழை அங்க அங்க பெய்ஞ்சு கொஞ்சம் வெப்பத்தை தணிச்சு இருக்கு. ஆனால் இந்த கோடைக்காலத்தை தள்ளுறதுக்குள்ள நமக்கு நாக்கு தள்ளி போய்டுது. பேசாம இந்த கோடைக்காலம் முழுதும் ஊட்டி, கொடைக்கானல்ன்னு போய் இருந்துட்டு வரலாம்ன்னு பலருக்கு தோணும். இங்கதான் ஒரு சந்தேகம். அது ஏன் ஊட்டி கொடைக்கானல் மட்டும் எப்பவும் குளிர்ச்சியாவே இருக்கு?? மத்த இடங்கள் எல்லாம் ரொம்ப வெப்பமா இருக்குன்னு ??

இதுக்கு எல்லாருக்கும் தெரிஞ்ச காரணம் அவை தரைமட்டத்தில் இருந்து பல கிலோமீட்டர் உயரே இருப்பதுதான்ன்னு.

அது சரி. உயரத்தில் இருந்தா ஏன் குளிரனும் ?? அதைப்பத்தி விரிவா இந்த பதிவில் பாப்போம்.

காற்றின் அழுத்தமானது தரைமட்டத்தில் இருக்கும்போது அதிகமாக இருக்கும். அதற்கு காரணம் காற்றின் மூலக்கூறுகள் அடர்த்தி கடல்மட்டத்தில் அதிகம் இருப்பது தான். அதுவே உயரே போகப்போக காற்றில் உள்ள மூலக்கூறுகளின் அடர்த்தி குறையும். இதனால் தான் அழுத்தம் குறைகிறது. உதாரணமாக, கடல்மட்டத்தில் காற்றழுத்தம் 1 பார் (1 Bar) ஆக இருக்கும். 5 கிலோ மீட்டர் உயரத்தில் காற்றழுத்தம் பாதியாகக் குறைந்து ஏறக்குறைய ½ பார் ஆக இருக்கும். 10 கி.மீ. உயரத்தில் ஏறக்குறைய ¼ பார் ஆக மேலும் குறையும்.

அது சரி. காற்றழுத்த வேறுபாட்டிற்கும் வெப்பநிலை மாறுபாட்டிற்கும் என்ன சம்பந்தம் ன்னு நீங்க கேட்கலாம்.

அதுக்கு முன்னாடி பூமியில் வெப்பம் எவ்வாறு உருவாகிறது என்பதை நாம் அறிய வேண்டும். சூரியனிடமிருந்து வரும் வெப்பம் நேராக பூமியின் தரையை தொடுகிறது .பின் அது பிரதிபலிக்கப்பட்டு உயரே நேராக வளிமண்டலம் நோக்கி செல்கிறது. அப்படி செல்கையில் இடையில் உள்ள காற்றானது வெப்பத்தை முடிந்த வரை தக்கவைத்து கொள்கிறது. கடல் மட்டத்தில் காற்றின் அடர்த்தி அதிகம் இருப்பதால் அதிக அளவு வெப்பத்தை தக்க வைத்து கொள்கிறது. எனவே கடல் மட்டத்தில் வசிப்பவர்கள் அதிக வெப்பத்தை உணர்கிறோம். அதுவே ஒரு உயரமான மலையின் மீதுப்பட்டு பிரதிபலிக்கும் சூரிய வெப்பத்தை அங்கே உள்ள காற்றின் அடர்த்தி குறைவாக இருப்பதால் அதிக வெப்பத்தை தக்க வைத்து கொள்ள முடியாது. எளிதில் வெப்பம் ஊடுருவி வளிமண்டலம் நோக்கி செல்லும். இதனால் தான் மலைப்பிரதேசங்களில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியாக உள்ளது.

இந்த இடத்துல இன்னொரு சந்தேகம் வரலாம். எப்படியும் சூரிய வெப்பம் தரையில் பட்டு பிரதிபலித்து நேராக வளிமண்டலம் தாண்டி சென்று ஒரு கட்டத்தில் பூமியில் வெப்பமே இருக்காதே, மொத்த பூமியும் குளிர் ல உறைஞ்சு போய்டுமே ன்னு தோணலாம்.

அதுக்குதான் பூமிக்கு மேலே ஒரு போர்வை போல பசுமைக்குடில் வாயு அதாவது கார்பன் டை ஆக்ஸைடு உள்ளது. அது பூமியின் வெப்பத்தை தக்க வைத்து கொள்ளும்.இல்லை என்றால் பூமி வெப்பம் இல்லமால் உறைந்து போகும். இந்த பசுமைக்குடில் வாயு co2 அதிகம் ஆகும்போது தான் புவி வெப்பமயமாதல் அதிகம் ஆகும்.

திரும்ப நாம நம்ம தலைப்புக்கு வருவோம்.

இப்படி உயர்த்துக்குக்கு ஏத்த மாதிரி காற்றின் அடர்த்தி மாறுபட காரணம் என்ன??

இதை பத்தி தெரிஞ்சுகனும்னா,

வீட்டுல ஒரு பாத்திரத்தில தண்ணியை கொதிக்க வைக்கும் போது நீராவியானது வெளியேறும். அது உயரே மேல் நோக்கி செல்லும்.இதன் காரணம் நீராவியில் அடர்த்தி குறைவு.எனவே மேல் நோக்கி எழும்புகிறது. எனவே வெப்பத்தால் நீர் ஆவியாகும். அப்படி ஆவியாகும் நீரானது அடர்த்தி குறையும். அடர்த்தி குறைவான பொருளே மேல் நோக்கி செல்லும். கடல் மட்டத்தில் உள்ள தொடர் வெப்பத்தால் காற்றானது நீராவி போல ஆவியாகி மேல் நோக்கி செல்கிறது. இதன் அடிப்படையில் தான் கடல் மட்டத்தில் இருந்து மேலே செல்ல செல்ல அங்கே உள்ள காற்றின் அடர்த்தி குறைய காரணம்.

மேலும் இந்த காற்றுழுத்த மாறுபாட்டினால் இன்னும் சில விடயங்கள் கூட உண்டு.

விமான பயணங்களில் எப்போதும் சன்னல்கள் மூடியே இருக்க காரணம் கூட இந்த காற்றழுத்த வேறுபாடு தான். மிக உயரத்தில் விமானம் பறக்கும் போது காற்றின் அடர்த்தி வெகுவாக குறையும். இதனால் காற்றில் உள்ள ஆக்சிஜன் அடர்த்தியும் குறையும். எனவே சன்னல் திறந்தால் நாம் சரியான அளவு ஆக்சிஜன் இல்லமால் மூச்சு திணறி விடுவோம். இந்த காரணத்தால் தான் விமான சன்னல்கள் மூடியே உள்ளன. மேலும் பயணிகள் சுவாசிக்க போதிய அளவு செயற்கை ஆக்சிஜன் விமானத்திற்குள் பரவ விடுவார்கள்.

அதே போல விமான பயணத்தின் போது நமக்கு காதடைக்க இதுதான் காரணம். அதாவது நமது செவி யில் உள் புறம் வெளிப்புறம் என்று ரெண்டு விஷயம் உண்டு. உள் செவியில் உள்ள காற்றழுத்தம் தரைமட்டத்திற்கு ஏற்றார் போல் இருக்கும். (அதிகமாக இருக்கும்). ஆனால் வெளிப்புறம் காற்றழுத்தம் உயரே போக போக குறைவாக இருப்பதால் உள் செவிக்கு போக திண்டாடும். இது தான் காதடைக்க காரணம். அந்த நேரத்தில் எச்சில் விழுங்குதல் போன்ற செயல்கள் செய்யும் போது உள் செவி காற்றை வெளியேற்றி விடும். அப்ப தான் வெளியே உள்ள அழுத்தம் குறைந்த காற்று உள் செவிக்கு வரும்.

இது மட்டும் இல்லை, இந்த காற்றழுத்த மாறுபாடு தான் நமக்கு மழை பெய்யவே காரணம்.

எனவே அனைத்தும் ஒன்றாக இருந்தால் இவ்வுலகம் இயங்காது. வேறுபாடுகள் இல்லமால் உலகம் இல்ல. வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வதே உலக நியதி..


– மன்னை செந்தில் பக்கிரிசாமி, மன்னார்குடி.
(2051 ஆடி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)

படஉதவி: https://unsplash.com/@meditatingdragon

Leave a Reply