Home>>உலகம்>>மாவீரர்கள் மன்னிக்கமாட்டார்கள் – பழ. நெடுமாறன்
உலகம்செய்திகள்தமிழ்நாடு

மாவீரர்கள் மன்னிக்கமாட்டார்கள் – பழ. நெடுமாறன்

துளிர்க்கும் மலர் மொட்டுகள் மலர்ந்து மணம் பரப்புவதற்கு முன்னர் கருகி உதிர்ந்து சருகுகளாகிவிட்டன. தமிழீழ மண்ணில் இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகிய பலரும் வாழ்வின் வசந்த காலத்தை எட்டுவதற்கு முன்பே வீரத்தைக் களத்தில் நிறுத்தி ஈகத்தின் வடிவமாகி மறைந்து போனார்கள்.

வாழவேண்டிய வயதில், இளமை பூரித்துப் பொங்கும் பருவத்தில் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு தாயக மண்ணின் விடுதலைக்காக தங்களை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டு வீரச்சாவை விரும்பித் தழுவிக்கொண்ட அந்த இளந்தளிர்களின் உன்னதமான ஈகத்திற்கு இணை எதுவுமில்லை.

பெற்றெடுத்து அன்பை அள்ளிப் பொழிந்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோரையும், உடன் பிறந்த அன்புமிகு அண்ணன், தம்பிகளையும், அக்கா, தங்கைகளையும், உற்றார், உறவினர்களையும் உதறித் தள்ளிவிட்டு தாயக மக்களைக் காப்பதற்காக தங்களின் வாழ்வைத் துறந்து மாவீரர்களானவர்கள். எத்தனை ஆயிரமாயிரமானவர்கள்?

அதிலும் இன்ன நாளில், இந்த நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் தங்களது உயிர்களை ஆயுதமாக்கி எதிரியை அழித்து இணையற்ற ஈக மறவர்களான கரும்புலிகள் கணக்கற்றவர்களாவார்.

சிங்கள இனவெறிக் கொடுமைகளுக்கும், அநீதிகளுக்கும் எதிராக ஈழத் தமிழர்கள் 30ஆண்டு காலம் அறவழியிலும், 30 ஆண்டு காலம் மறவழியிலும் தங்களின் உரிமைகளை நிலை நிறுத்தப் போராடினார்கள். கடந்த 60ஆண்டு காலத்தில் சுமார் இரண்டு இலக்கத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் சிங்கள இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். 10 இலக்கத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்களுக்குச் சொந்தமான தாயக மண்ணில் வாழ வழியில்லாமல் எல்லாவற்றையும் இழந்து ஏதிலிகளாக உலக நாடுகளில் அடைக்கலம் புகுந்தார்கள். உள்நாட்டில் 5 இலக்கத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த ஊர்களிலிருந்தும், வீடுகளிலிருந்தும், நிலங்களிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு தங்களது மண்ணிலேயே ஏதிலிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழர்களில் இளைஞர்கள் பிரித்தெடுக்கப்பட்டுப் பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் சிங்கள இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டு மிகக் கொடுமையான சித்திரவதைகளுக்கும், படுகொலைகளுக்கும் ஆளாகிக் காணாமல் போனார்கள். இளம்பெண்கள் கைது செய்யப்பட்டு சிங்கள இராணுவத்தின் முகாம்களில் பாலியல் வன்முறைக் கொடுமைகளுக்கு இரையாக்கப்பட்டுச் சிதைக்கப்படுகிறார்கள். போர் முடிந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகும் சிங்களப் பேரினவாதிகள் தொடர்ந்து தமிழின அழிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இனப்படுகொலை குறித்து ஐ.நா. பேரவை கண்டனம் செய்த பெருங்குற்றத்திற்குள் அடங்கக்கூடிய செயற்பாடுகள் அத்தனையையும் சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்து செய்கிறது.

தமிழினத்தின் குழந்தைகள் பிறப்பு திட்டமிட்டுத் தடுக்கப்படுகிறது. கருவுற்றிருக்கும் தமிழ்ப் பெண்களுக்குக் கட்டாய கருச்சிதைவு, கருத்தடை போன்றவற்றை சிங்கள இராணுவம் ஈவிரக்கமில்லாமல் செய்துவருகிறது. தமிழ்க் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வெவ்வேறு இடங்களுக்குக் கடத்தப்பட்டு, உளவியல் ரீதியில் ஊனமாக்கப்படுகிறார்கள்.

தமிழர்களின் இன விகிதாச்சாரத்தை அழித்து வடக்கு-கிழக்குப் பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் அரசு ஆதரவுடன் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இலங்கை விடுதலை பெற்ற 1948ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வட-கிழக்கு மாநிலத்தில் 40 சதவிகிதம் தமிழர்களின் இன விகிதாச்சாரத்தை சிங்கள அரசு அழித்துள்ளது. தமிழர்களின் சிற்றூர்கள், பேரூர்கள் ஆகியவற்றுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டுத் தமிழ்ப் பெயர்கள் அழிக்கப்படுகின்றன.

தமிழர்களுக்குச் சொந்தமான காணி நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்படுகிறது. இராணுவத்தின் தேவைக்காக என்று கூறி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள தமிழ் மண் பறிக்கப்பட்டுள்ளது.

தமிழீழத்தில் நடைபெற்ற இறுதிப் போரில் ஈவிரக்கமின்றித் தமிழர்கள் மீது ஐ.நா. பேரவை தடை செய்த ஆயுதங்களை ஏவிக் கொன்று குவித்த இராசபட்சே சகோதரர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். முன்னிலும் மோசமான முறையில் இன அழிப்பை அவர்கள் தொடர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அழிவின் விளிம்பிலிருந்து கதறும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்புணர்வும் கொண்ட ஈழத் தமிழ்த் தலைவர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். இதன் விளைவை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பார்த்தோம். தமிழீழ மண்ணில் சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடிய துயரம் நிகழ்ந்தது.

உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் அடைக்கலம் புகுந்து வாழும் ஈழத் தமிழர்களிடையேயும் முன்பு நிலவிய ஒற்றுமை உணர்வு இன்று இல்லை. மாவீரர் நாளை கொண்டாடும்போதுகூட பிரிந்து, தனித் தனியே கொண்டாடுகிற அவலப்போக்கு நிலவுகிறது.

ஈழத் தமிழ் மக்களும், விடுதலைப் புலிகளும் தங்களின் தாயக மண்ணை விடுவிக்கும் போராட்டத்தில் தங்கள் வலிமைக்கும் மேலாக அளப்பரிய தியாகங்களைப் புரிந்திருக்கிறார்கள். உலகில் எந்தவொரு தேசிய இனமும் தனது விடுதலைப் போராட்டத்தில் சந்தித்திராத வெங்கொடுமைகளுக்கும், பேரிழப்புகளுக்கும் ஈழத் தமிழர்கள் ஆளாகியிருக்கிறார்கள். ஈழத் தமிழ் மக்களும், மாவீரர்களும் சிந்திய குருதியால் தமிழீழ மண் சிவந்து கிடக்கிறது.

மாண்டு மடிந்து மண்ணோடு கலந்துவிட்ட அந்த மக்களும், அந்த மக்களுக்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களும் புரிந்த மாபெரும் தியாகம் வீண்தானா? விழலுக்கு இறைத்த நீர் தானா?

தமிழினத்தின் வரலாற்றில் என்றும் காணாத வகையில் மாபெரும் அவலத்தை நாம் சந்தித்திருக்கிறோம்.

உலகம் வியந்துப் போற்ற வாழ்ந்த தமிழினம் வாழ்வா? அல்லது சாவா? என்ற இறுதிக் கட்டத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஈழத் தமிழினத்தின் அழிவு, உலகத் தமிழினத்தின் அழிவுக்கு முன்னோடியாகும். இந்தக் காலகட்டத்திலாவது நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்காவிட்டால், நடக்கக்கூடாதது நடந்துவிடும். சீரிளமை திறன் குன்றாத தமிழ் மொழிப் பேசும் தமிழினம் உலகப் பந்திலிருந்த அடையாளமே தெரியாமல் துடைக்கப்பட்டுவிடும்.

தமிழீழத் தாயகத்தை விடுவிக்கும் போரில் உயிர் ஈந்த மக்களும், மாவீரர்களும் நம்மை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். ஈழத் தமிழ்த் தலைவர்கள் தோளோடு தோள் இணையவேண்டும். அவர்கள் ஒன்றுபட்டால் உலகத் தமிழினமும் ஒன்றிணையும்.வரப்போகும் நவம்பர் 27 மாவீரர் நாளில் உலகத் தமிழர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சூளுரை இதுவாக அமையட்டும்.


செய்தி உதவி:
பொறியாளர் கென்னடி,
நிர்வாகி – முள்ளிவாய்க்கால் முற்றம்,
தஞ்சாவூர்.

முகநூல் பதிவு முகவரி: https://www.facebook.com/permalink.php?story_fbid=2462192004082212&id=100008743081655

Leave a Reply