Home>>இந்தியா>>வேளாண் சட்டங்கள் – நம்ம ஊரு ஆலமரத்தடி பஞ்சாயத்தில்…
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

வேளாண் சட்டங்கள் – நம்ம ஊரு ஆலமரத்தடி பஞ்சாயத்தில்…

பொன்னுச்சாமி:

என்ன கண்ணுச்சாமி? நாட்டுல பிரச்சினை ஏதும் உண்டா?

கண்ணுச்சாமி:

பிரச்சினை ஒன்னுமில்ல. நல்லது ஒன்னு நடந்திருக்கு. டில்லி அரசு நமக்கு நல்லது பண்றதுக்கு மூனு சட்டங்கள கொண்டு வந்திருக்கு பொன்னுச்சாமி.

பொன்னுச்சாமி:

அப்புடியா? கெழக்க உதிக்கிற சூரியன் மேற்க உதிச்சாலும் உதிக்கும்.ஆனா டில்லி அரசு வெவசாயிக்கு நல்லது பண்ணாதே? நம்ப முடியலியே!

கண்ணுச்சாமி:

இப்புடித்தான் எல்லாத்துக்கும் மோடிய குறை சொல்லுறதுக்குன்னே ஒரு கூட்டம் கெளம்பியிருக்கு

பொன்னுச்சாமி:

கோச்சுக்காத கண்ணுச்சாமி. சரி அப்புடி என்னதான் நல்லது பண்ணப்போறாங்க?

கண்ணுச்சாமி:

அப்புடி கேளு. நம்ம வருமானத்த ரெண்டு மடங்கா பெருக்கத்தான் இந்த சட்டங்கள கொண்டுவந்திருக்காங்க..

பொன்னுச்சாமி:

அப்புடியா, கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்களேன்.

கண்ணுச்சாமி:

இனிமே இந்த சட்டப்படி, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துல 100 கிலோ 1905 ரூவாய்க்கு நெல்ல போட வேண்டியதில்ல.  வடநாட்டுலேயிருந்து யாவாரி வந்து குவிண்டாலுக்கு அதிக ரூவா  குடுத்து வாங்கிக்குவான்னு மோடி சொல்றாரு.

பொன்னுச்சாமி:

அப்புடியா? நீ சட்டத்த படிச்சி பாத்தியா? இந்த சட்டத்துல கொறைஞ்சபட்ச ஆதரவு வெலை நிர்ணயிப்போமுன்னு சொல்லலியே. அப்படி நிர்ணயிக்கிற காலத்துலயே தனியார் யாவாரிங்க அதவிட கொறைஞ்ச வெலைக்கு தான் நெல்லை எடுக்கிறாய்ங்க. அரசாங்கம் வெலைய நிர்ணயம் பண்ணலேன்னா,  யாவாரி வச்சதுதானே விலை. நாலு யாவாரியும் கூடிப் பேசிக்கிட்டு 100 கிலோ 1500 ரூவாய்க்குதான் எடுப்போமுன்னு ஒரே கொரல்ல சொன்னா நாம என்ன பண்ண முடியும். பீகாருல சோளத்துக்கு அப்புடித்தான நடந்திருக்கு.

கண்ணுச்சாமி:

அப்புடி இல்ல பொன்னுச்சாமி!  ஒழுங்குமுறை விற்பனைக்கூடமும் செயல்படும், குறந்தபட்ச விலை நிர்ணயமும் பண்ணுவோமுன்னு மோடி வாய்மொழியா சொல்ராறு.

பொன்னுச்சாமி:

ஆமா! மோடி முன்னே சொன்னதையெல்லாம் செஞ்சு கிழிச்சுப்புட்டாரு. ஒவ்வொருத்தர் வங்கி கணக்கிலேயும் 15 இலட்சம் ருவா போட்டுட்டாரு. கருப்புப் பணத்தையெல்லாம் ஒழிச்சுப்புட்டாரு. ஆண்டுக்கு இரண்டு கோடிப்பேருக்கு புதுசா வேலை கொடுத்துப்புட்டாரு. இப்ப சொல்றதை கட்டாயம் நெறைவேத்தப்போறாரா?

அரசு கொறைஞ்சபட்ச வெலைய அறிவிச்சாலும் அதுக்குக் கொறைவான வெலைக்கு நெல் எடுக்கக்கூடாதுன்னு சட்டம் சொல்லலியே. அரசு கட்டுப்பாடு இருக்குமுன்னு சட்டத்துல சொல்லலியே. அரசாங்கம் ஒழுங்கு படுத்தலேன்னா யாவாரி வச்சதுதானே வெலை?

மொதல்ல கொஞ்ச காலத்துக்கு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடமும் தனியார் யாவாரி நெல்லை வாங்குறதும் இருக்கும். இப்பவே அரசாங்க கஜானாவுல காசு இல்லன்னு, ஒரு நாளைக்கு 1000ம் மூட்டைக்கு மேல கொள்முதல் பண்ண முடியாதுன்னு செண்டருல சொல்ராங்க.ஏழை மக்களுக்கு ரேசன் அரிசி குடுக்குற இந்திய உணவுக் கழகத்துக்குதான் தமிழக அரசு கொள்முதல் பண்ணுது. அதை மூடனுமுன்னு டில்லி அரசு அமைச்ச குழு ஒன்னு யோசனை சொல்லியிருக்கு. இந்திய உணவுக் கழகத்த மூடிப்புட்டா,அப்புறம் தமிழ்நாடு அரசு கொள்முதல் பண்ணாதே.

அது மட்டுமில்ல. தனியார் யாவாரிங்க இது வரைக்கும் கொஞ்சம்தான் இருப்பு வச்சுக்கலாம். ஆனா இந்த சட்டம் எவ்வளவு கோடி டன் வேணுமுன்னாலும் தானியங்கள, பருப்பு வகைகள, எண்ணெய் வித்துக்கள, சமையல் எண்ணெய, உருளைக்கிழங்க, தக்காளிய இருப்பு வச்சுக்கலாமுன்னு சொல்லுது. அப்ப எல்லாத்தையும் தனியார் கொள்முதல் பண்ணிப்புட்டா அரசு கொள்முதல் நிலையங்கள இழுத்து மூடவேண்டியதுதானே.. அப்புறம் யாவாரிங்க காட்டுலதான் மழை.

மொத சில வருசத்துக்கு கொஞ்சம் அதிக வெலை கொடுத்துக்கூட தனியார் யாவாரி வாங்குவான். அப்புறம் நாம எல்லாரும் அரசு கொள்முதல் நெலையத்த விட்டுப்புட்டு, அவன நாடிப் போவோம். அரசு கொள்முதல் நிலையங்கள மூடிப்புடும்.. அப்பால, கொறைஞ்சபட்ச வெலைய அறிவிச்சாலும் அதுக்கு கட்டுப்படமாட்டான்.

கண்ணுச்சாமி:

இந்த சட்டப்படி, நாம இந்தியாவுல எங்கே வேணுமானாலும் நெல்லை கொண்டுபோயி வித்துக்கலாமாம். அப்ப நமக்கு அதிக வெலை கிடைக்குமே.

பொன்னுச்சாமி:

ஏ வேதனைய கெளப்புற கண்ணுசாமி. ஒரு மைல் தூரத்துல இருக்குற செண்டருக்கே நம்ம நெல்ல எடுத்துக்கிட்டுப் போக வழியில்ல. இதுல நாம வெளி மாநிலத்துக்கு கொண்டு போயி விக்கப்போறமா? இப்பவே நம்ம ஊரு யாவாரிங்க வெளி மாநில நெல்ல வாங்கிக் கொண்டுவந்து நம்ம ஊரு செண்டருல போடுறது தெரியாதா?

இந்த சட்டம் நமக்கோ நம்ம ஊரு யாவாரிக்கோ இல்ல. வடநாட்டு அதானி அம்பானிங்க நாடு பூரா எங்க வேணுமானாலும் அடிமாட்டு வெலைக்கு நெல்லை வாங்கத்தான்  இந்த சட்டம்.

அது மட்டுமில்ல, இந்த சட்டப்படி நெல்லோட தரம், வெலை, எத்தனை நாளில் பணத்த செட்டில் பண்ரது எல்லாமே யாவாரிதான் முடிவு பண்ணுவாரு. சொன்ன நாளில் யாவாரி பணம் குடுக்கலன்னாலோ, பேசுனதைவிட கொறைச்சு குடுத்தாலோ நாம உள்ளுர் அதிகாரிகிட்டயும், உச்சபட்சமா கலெக்டருகிட்டயும்தான் முறையிடமுடியும். நீதிமன்றம் போக முடியாது.

கண்ணுச்சாமி:

இந்த சட்டப்படி இடைத்தரகரே கெடையாது. உள்ளுர் யாவாரிகிட்ட கொறைஞ்ச வெலைக்கு விக்கவேண்டியதில்ல. வடநாட்டு பெரு யாவாரிகிட்ட நேரடியா வித்துக்கலாம். அப்ப இடைத்தரகருக்கு கெடைக்கிற இலாபம் நமக்கு கெடைக்குமுல்ல.

பொன்னுச்சாமி:

அப்ப அம்பானி, அதானியெல்லாம் யாரு? உண்மைய சொல்லப் போனா இவங்கதான் மிகப்பெரிய இடைத்தரகர்கள் இங்க. நாம நம்ம பொருள நேரடியா மக்களுக்கு விக்கிறதுக்கு பெயர் தான் வெயாபாரம், அப்ப தான் நமக்கு இலாபமும் கெடைக்கும்.

அப்பறம் நீ சொல்ற மாதிரியெல்லாம் நடக்காது கண்ணுச்சாமி..

பெரு யாவாரி இங்கேயிருந்து நெல்லை அவன் எடத்துக்கு எடுத்துக்கிட்டுப் போக, போக்குவரத்து செலவு ஆகுமில்ல. அதையெல்லாம் கழிச்சுத்தான்  நமக்கு வெலை குடுப்பான். அப்ப உள்ளூர் யாவாரிக்கு கெடைக்கிற இலாபம் பெரு யாவாரிக்குப் போகுமே தவிர நமக்கு வராது.இடைத்தரகரே இல்லாம அத்தனை ஊருலயும் பெரும் யாவாரி கொள்முதல் பண்ண முடியாது. இதெல்லாம் நம்ம காதுல பூ சுத்துற வேலை.

கண்ணுச்சாமி:

ஒப்பந்த பண்ணைய சட்டமுன்னு, இன்னொரு சட்டம் வந்திருக்கு. பெரிய பெரிய நிறுவனங்கள் நம்மளோட ஒப்பந்தம் போடும். அவுங்களுக்கு தேவைப்படுறத வெளைவிச்சு குடுக்கணும். வெலைய மொதல்லயே ஒப்பந்தத்துல குறிப்பிடுவாங்க. வெளைச்சல் நேரத்துல மார்க்கெட் விலை குறைஞ்சாலும் நமக்கு ஒப்பந்தப்படி நல்ல வெலை கிடைச்சுடும். நம்ம வருமானம் ரெண்டு மடங்கு அதிகரிச்சுடும் இது நல்லதுதானே பொன்னுச்சாமி..

பொன்னுச்சாமி:

ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதையால்ல இருக்கு. ஒப்பந்தமெல்லாம் சரிதான். ஒப்பந்தப்படி பெருநிறுவனங்கள் நடக்கலேன்னா நம்ம அரசாங்கம் நமக்கு கிடைக்கவேண்டிய வெலைய வாங்கிக் கொடுக்குமா? சின்னச் சின்ன கரும்பு ஆலை மொதலாளிகள் கிட்டேயிருந்து நிலுவைத் தொகைய கரும்பு வெவசாயிக்கு வாங்கிக்குடுக்க முடியாத அரசாங்கமா பெரிய பெரிய பணமுதலைகளான அதானிக்கிட்டயும், அம்பானிக்கிட்டயிமிருந்து நமக்கு நாயம் வாங்கிக் கொடுக்கப்போறாங்க. அடப் போவியா?

ஒனக்கு உண்மை தெரியுமா? நிறுவனம் கொடுக்கிற வெதையைத்தான் வெதைக்கணும். அவன் குடுக்கிற உரம். பூச்சிக்கொல்லி தான் பயன்படுத்தணும். அவன் சொல்லுற இயந்திரங்களத்தான் பயன்படுத்தணும். இத்தனைக்கும் ஆகிற செலவு , ஒத்துக்கிட்ட வெலைய விட அதிகமாச்சுதுன்னா நாமதான் கம்பேனிக்கு பணம் கொடுக்கணும். அப்புறம் நம்ம குடும்பமே கம்பேனிக்கு கொத்தடிமையா வேலை பார்க்கணும். மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்த சொல்லுவான். அதற்கு நெறையா தண்ணி தேவைப்படும். பூமிக்குள்ள இருக்கிற தண்ணி எல்லாத்தையும் இதுக்கே உறிஞ்சிப்புட்டோமுன்னா, நம்ம அடுத்த தலைமுறைக்கு குடிக்கக்கூட தண்ணி கெடைக்காது. அதிகம் ஒரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்த கட்டாயப்படுத்துவான். அஞ்சு ஆண்டுக்குப்பிறகு மண்ணு எதுக்கும் பயன்படாத மலடாகிப்போகும். ஒப்பந்தம் முடிஞ்சி நெலத்த நாம திருப்பினாலும், அதுல வெள்ளாமை பண்ணமுடியாது.

ஒரு கட்டத்துல நம்ம நெலத்த கம்பேனிக்கு வித்துப்புட்டு டவுனுக்கு கூலி வேலைக்கு போக போகவேண்டியதுதான்.

இந்தியா முழுக்க கொள்முதல் பண்ணி, பெருமளவு பதுக்கி வச்சு பிறகு விலைய ஏத்தி விப்பாங்க. நெல்ல வித்த நாமளே அரிசிய அதிக விலைக்கு வாங்கவேண்டி இருக்கும். நாய விலைக் கடைகளை மூடிப்புடுவாங்க.ஏழை பாளைக்கு அரிசி கெடைக்காம பட்டினி கெடந்து சாகப்போவுது பாவிசனம்.

இப்ப புரியுதா? இந்த சட்டங்களெல்லாம் வெவசாயிக்கா? கார்ப்பரேட் மொதலாளிக்கா?

நான் சொன்னதையெல்லாம் வீட்டுக்குப்போயி நல்லா யோசிச்சுப் பாரு கண்ணுசாமி. நான் சொன்னது சரின்னு பட்டா  பக்கத்து வீட்டுக்காரன், எதுத்த வீட்டுக்காரன், மாமன், மச்சான், அண்ணன், தம்பி, தெரு சனம் எல்லாருக்கும்  வெளக்கி சொல்லி எல்லாரையும் ஒன்னா திரட்டு. ஒரு நாள், பத்தாயிரம் பேர் திரண்டு நம்ம கலெக்டர் ஐயா கிட்ட மொறையிடுவோம். எப்புடியாவது இந்த சட்டங்களை தடுத்தே ஆவனும்  இல்லன்னா அடுத்த தலைமுறை நம்மள காறித்துப்பும்.

கண்ணுச்சாமி:

தம்பி! நாம எல்லாரும் கிராமத்த காலிபண்ணிட்டு நகரத்துக்கு போயிட்டோமுன்னா நம்ம நெலம்,நம்ம ஊரு,நம்ம தமிழ்நாடு அப்புடீங்கிற பிடிப்பு சுத்தமா போயிடுமே. டவுனுக்கு போயிட்டொமுன்னா, நம்ம பசங்க தமிழ உட்டுட்டு, அதிகமா இங்கிலீசும்,இந்தியும் படிக்கும், பேசும். நம்ம மொழி காணாமப் போகும். நம்ம வீட்டு பொண்டுக வீட்டுக்கு வந்தவுங்களுக்கு தாகத்துக்கு தண்ணீ வேணுமான்னு இப்ப கேக்குறாங்க. இனிமே அந்தப் பழக்கமும் பண்பாடும் இல்லாமப்போயிடுமே! எதிர்காலத்த நெனைச்சா ரொம்ப கவலையா இருக்கு பொன்னுச்சாமி.

பொன்னுச்சாமி:

கவலைப்படாத கண்ணுச்சாமி. நாம ஒன்னா போராடுனா கட்டாயம் நம்ம நெலத்தையும், தலைமுறையையும் காப்பாத்தலாம்.


மருத்துவர் பாரதிச்செல்வன்,
காவிரி உரிமை மீட்புக்குழு,
திருவாரூர் மாவட்டம்.

Leave a Reply