உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.
மிகச்சிறந்த தமிழறிஞரான முனைவர் தொ. பரமசிவன் அவர்கள் காலமான செய்தி தமிழ்கூறும் நல்லுலகுக்குப் பேரிழப்பாகும். தொன்மை வாய்ந்த தமிழர் சமுதாயத்தின் பண்பாடு, மானுடவியல், நாட்டார் வழக்காற்றியல், தமிழர் சமயங்கள் போன்ற துறைகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆழ்ந்து, ஆராய்ந்து ஆய்வு நூல்கள் பலவற்றைப் படைத்தவர்.
அடித்தள மக்கள் காலங்காலமாகக் காத்துவரும் பண்பாடுகளை அழியாமல் காக்கவேண்டியதின் இன்றியமையாமையைத் தமிழக மக்களுக்கு எடுத்துரைத்தவர். தமிழர் பண்பாட்டின் வேர்களை எடுத்துக்காட்டி தமிழர் பெருமையை உயர்த்தியவர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் தலைவராகத் திகழ்ந்து நூற்றுக்கணக்கான ஆய்வு மாணவர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.
தமிழாய்வு உலகில் முதன்மையான ஆளுமையாக விளங்கி எளிய மக்களுக்கும் புரியும் வகையில் ஆய்வு நூல்களைப் படைத்து மக்களுக்குத் தெளிவூட்டியப் பெருமைக்குரியவர். அவருடைய மறைவு உலகத் தமிழ்ச் சமுதாயத்திற்குப் பேரிழப்பாகும். அவருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
முகநூல் முகவரி: https://www.facebook.com/photo?fbid=4056498584384994&set=a.778475928853959
ஓவியம் வரைந்தவர்: மருது அவர்கள்.
செய்தி உதவி:
மருத்துவர் பாரதிச்செல்வன் இலரா,
மன்னார்குடி.