தஞ்சையில் பச்சைக்கொடி பேரணியை தொடங்கி வைத்து சட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி பேட்டி.
டெல்கியில் போராடும் உழவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், சர்ச்சைக்குரிய 3 உழவர் ஒழிப்பு சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் இன்று தஞ்சாவூரில் பச்சைக் கொடி பேரணி நடைபெற்றது.
இதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி கள ஆதரவை அளித்திருந்தது. உழவர் சங்கங்களை சேர்ந்தவர்கள், சமூக நீதி உணர்வாளர்கள், விவசாய ஆதரவாளர்கள் என பலரும் வாகனங்களில் அலை அலையாக உணர்வுப்பூர்வமாக வந்திருந்தனர்.
காவிரி உரிமை மீட்பு குழு தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் பச்சைக் கொடி பேரணியின் நோக்கத்தை விளக்கி பேசினார்.
தொல்காப்பியர் சதுக்கம் அருகில் எழுச்சியோடு திரண்டிருந்தவர்களை பேரணி குழுவினரும், மஜக விவசாய அணியினரும் ஒழுங்குப்படுத்தியவாறு இருந்தனர். காலை 10 மணி முதலே காவிரிப்படுகை மாவட்டங்களை சேர்ந்த மஜக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் வாகனங்களில் வந்து அப்பகுதியில் குழுமினர்.
மஜக மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மஜக மாநில உழவர் அணி செயலாளர் அப்துல் சலாம் ஆகியோர் வருகை தந்த மஜகவினருக்கு வழிகாட்டல்களை வழங்கியவாறு இருந்தனர். 11.30 மணி அளவில் பேரணியை தொடங்கி வைத்து மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பேசினார்.
அப்போது கடந்த 10 நாட்களாக பெய்த தொடர் மழையால் உழவு நிலங்கள் மூழ்கி உழவர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். அந்த இழப்பு மற்றும் சோகத்தையும் கடந்து பல்லாயிரக்கணக்கானோர் இங்கு திரண்டுள்ளனர். இது தமிழக மக்களின் உணர்வை வெளிக்காட்டுகிறது.
மத்திய அரசு சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை 18 மாதங்கள் நிறுத்தி வைக்கிறோம் என சொல்கிறது.
இது போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் தந்திரமாகும். சர்ச்சைக்குரிய 3 வேளாண் (உழவர் ஒழிப்பு) சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என்று அவர் பேசினார்.
தஞ்சையில் இதுவரை இல்லாத அளவில் தொடர்வண்டி நிலையம், பழைய பேருந்து நிலையம் வழியாக பேரணி செல்ல அனுமதிக்கப்பட்டதால், வழியெங்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி நின்று ஆதரவளிக்கும் வகையில் கைகளை அசைத்து பேரணியினரை உற்சாகப்படுத்தினர்.
தொடர்வண்டி நிலையம் அருகே திருச்சி மாவட்ட மஜக பொறுப்பாளர் மெய்தீன் தலைமையில் உழவர் அணியினர், பேரணியில் வந்தவர்களுக்கு தண்ணீர், பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கினர். ஆற்றங்கறை பள்ளி அருகில் தஞ்சை மாநகர் மாவட்ட மஜக செயலாளர் அகமது கபீர் தலைமையில் மஜக உழவர் அணியினர் மோர் வினியோகித்தனர்.
நிறைவாக மாமன்னர் இராஜராஜ சோழன் சிலை அருகில் பேரணி மதியம் 1.30 அளவில் வந்து சேர்ந்தது.
அப்போது தாமதமாக வந்த நாகை மாவட்ட உழவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காவிரி தனபாலன் தலைமையில் வந்து சேர்ந்தனர்.
காவிரி உரிமை மீட்பு குழு தலைவர் பெ.மணியரசன், மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி (சட்டமன்ற உறுப்பினர்), காவிரி தனபாலன், மருத்துவர் பாரதிச்செல்வன், மஜக துணைப் பொதுச் செயலாளர் மன்னை.செல்லச்சாமி, தமிழ் விடுதலை புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் கி.வெங்கட்ராமன் உள்ளிட்ட தலைவர்கள் அடுத்தடுத்து உரையாற்றினர்.
மஜக தகவல் தொழில்நுட்ப அணியினர் பேரணியின் நிகழ்வுகளை ஆங்காங்கே நேரலை கொடுத்தவாறு இருந்தனர்.
நிறைவாக மதியம் 2.15 மணி அளவில் பேரணி நிறைவுப்பெற்றது. அப்போது திலகர் திடலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் திரும்பி புறப்படவிருந்தவர்களுக்கு, மஜக சார்பில் மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இதை பார்த்து உழவர்கள் நெகிழ்ந்து போய் நன்றி கூறினர்.
3 மணி நேரம் டெல்கி திரும்பி பார்க்கும் வகையில் முழக்கங்களோடு அதிர்ந்த பேரணி அமைதியாக நிறைவுற்றது.
இன்றைய நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர்கள் நாகை முபாரக், நெய்வேலி இப்ராகிம், MJVS தலைவர் யூசுப் ராஜா, மருத்துவ சேவை அணி மாநில துணைச் செயலாளர் மஹ்ரூப் ஆகியோரும் வருகை தந்து பங்கேற்றனர்.
திருவாரூர், நாகை,தஞ்சை மாநகர்,தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, திருச்சி, புதுக்கோட்டை மேற்கு, புதுக்கோட்டை கிழக்கு, கடலூர் தெற்கு, மதுரை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட மஜகவினர் திரளாக வந்திருந்து விவசாயிகளுடன் கைக்கோர்த்து அணிவகுத்தனர்.
டிவிட்டரில் #DefeatAntiFarmerLaws என்ற ஹேஸ்டேக்குடன் உலகமெங்கும் உள்ள தமிழர்களால் பெருமளவில் பகிரப்பட்டது.
இன்றைய பச்சைக் கொடி பேரணியை ஊடகங்கள் பல நேரலை செய்து முக்கியத்துவம் கொடுத்ததும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
தகவல்,
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
காவிரிப்படுகை மாவட்டங்கள்.
—
முகநூல் பதிவு முகவரி: https://www.facebook.com/796023993773620/posts/5062687563773887/