அவருக்கென்ன அவர் பையன் அமெரிக்கால வேலை பாக்குறான்! அவங்க பொண்ண அமெரிக்கால வேலை பாக்குற மாப்பிளைக்கு கட்டிக்கொடுத்துருக்காங்க. இப்படி பலர் பேச கேட்டுருக்கோம், அப்படி என்னதாங்க அமெரிக்காவுல இருக்குது.
என் பெயர் ஸ்ரீபிரியா சுந்தர், மேலே சொன்ன லிஸ்டுல நானும் ஒருத்தி. திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் அமெரிக்கா புறப்பட்டு வந்து இங்கு மிசௌரி மாநிலத்தில் ஒரு ஊரில் கடந்த 4 வருடங்களாக வசித்து வரேங்க. கம்ப்யூட்டரிலும், மொபைல் வால்பேப்பரிலும் பார்த்து ரசித்த அமெரிக்காவை நேரில் வந்து பார்த்தபோது ‘வாவ்’ என சொல்றமாதிரி இருந்தது.
சாலை விதிகள்
சாலை விதிகளை அவங்க கடைபிடிச்சி கார்களும் பேருந்துகளும் போகுற அழகே தனிதாங்க. ஒரு காருக்கும் அடுத்த காருக்குமான இடைவெளி, அவர்கள் செல்லும் அழகே தனி! ஏதோ வீடியோகேம்ல பாத்த மாதிரி அவ்வளவு அழகு. நம்ம ஊர்ல இடதுபக்கம் செல்வது சட்டம், அமெரிக்காவுல வலதுபக்கம் தான் சட்டம். கார்ல போறவங்க எல்லாரும் கண்டிப்பா சீட்பெல்ட் போடணும், அதை யாரும் மீறுவதில்லை. பிறந்த குழந்தைகளைக் கூட குழந்தைகள் இருக்கையில் தான் உட்காரவெச்சி பெல்ட் போட்டுதான் காரில் அழைத்துப்போகணும். எந்த குழந்தையும் அதற்காக அழுவதில்லை. சாலையில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி வந்தால் உடனே அதற்கு வழிவிட்டு பின்னர்தான் போவாங்க.
வார விடுமுறை
வாரக் கடைசி விடுமுறை நாட்களை நல்ல ஜாலியா அனுபவிக்கிறாங்க. இந்த விடுமுறையோடு பண்டிகை விடுமுறையும் சேர்ந்து வந்தால் குடும்பத்தோடு மூட்டை முடிச்சிய கட்டிக்கிட்டு சுற்றுலா தலங்களுக்கு கிளம்பிடுவாங்க. எந்த பொருள் வாங்க வேண்டுமானாலும் வரிசையில் நின்று வாங்குவது, அதே பழக்கத்தை குழந்தைகளுக்கும் சொல்லி வளக்குறாங்க.
முதியோர்கள் / மாற்றுதிறனாளிகள்
முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு முன்னுரிமை தராங்க. யாருடைய உதவியும் இல்லாமல் முதியோர் தன் வேலையை தானே செய்துக்கிறாங்க.
ஷாப்பிங்
எல்லாவகை காய்கறிகளும் பழங்களும் ஃபிரஸாக கிடைக்கிறது. நம் தேவைக்கு ஏற்ப நாமே எடுத்த பின் க்யுவில் நின்று பில் போடும். வீட்டு உபயோகப்பொருட்கள் நாம் வாங்கி வந்தபின் அது பிடிக்கலைன்னா 30 நாட்களுக்குள் ரிட்டன் பண்ணிவிட்டு முழுத்தொகையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த கான்செப்ட் நல்லா இருக்குல!
குழந்தை வளர்ப்பு
குழந்தை பிறக்க பிரசவ ஆஸ்பத்திரி போனால் 99% சுகப்பிரசவம்தாங்க. பிரசவ நேரத்தில் அருகில் கணவர் இருந்து பார்த்துக்கலாம். மனைவி பிரசவ வலியில் துடிப்பதைத் பார்த்து கணவர் கண்ணீர் விடுவதைக் காணலாம். குழந்தை பிறந்து 6 வது மாதம் முதல் தனியறையில் படுக்க வைக்கும்படி மருத்துவர் சொல்லுவார்.அந்த அறையில் குழந்தை அழுதால் உடனே தெரியுற மாதிரி மானிட்டர் ஒன்று வச்சிடுவாங்க. அந்த அறை முழுவதும் குழந்தைகளுக்கு பிடித்த வண்ணங்களும்,பொம்மை ஸ்டிக்கர்களும் ஒட்டிவிடுவாங்க. அதைப்பார்த்து குழந்தை வளரணும்ணு ஆசைப்படுவாங்க.
இந்த நாட்டுச் சட்டப்படி குழந்தைகளை பெத்தவங்களே கூட அடிக்கக் கூடாது, அப்படி அடித்து அந்த பிள்ளைகள் சைல்ட்கேர் எண்ணில் புகார் பண்ணிட்டாங்கனா பெத்தவங்க கம்பி எண்ணும். குழந்தைகளுக்கு பிளீஸ்,தேங்க்யூ போன்ற நல்ல பழக்கங்களை சொல்லி வளக்கறாங்க. வீட்டிலும் சரி, வெளியே சென்றாலும் சுத்தமாக இருப்பதோடு குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுவது,சாலையில் எச்சில் துப்பாமலும் சிறுநீர் கழிக்காமலும் நல்ல பழக்கத்தோடு வளக்கிறாங்க. குழந்தைகள் கீழே விழுந்தால் கூட தானே எழுந்திருக்கணும்ணு நினைப்பாங்க.
குடும்ப வாழ்க்கை
அமெரிக்கர்களின் பசங்க பள்ளி படிப்பு முடிச்சிட்டு கல்லூரிக்கு போகும்போது குடும்பத்தை விட்டு பிரிஞ்சி போய் ஏதேனும் பகுதி நேர வேலை பார்த்து அவங்க தேவைகளை அவங்களே பார்த்துக்கிறாங்க. முக்கிய பண்டிகை நாட்களான கிருஸ்துமஸ்,புது வருட பிறப்பு போன்ற நாட்களில் குடும்பத்தாருடன் இருந்து விருந்து சாப்பிட்டுவிட்டு ‘bye bye’ சொல்லிட்டு போயிடுவாங்க.
எளிய திருமணம்
திருமணம் எல்லாம் இங்கே ரொம்ப சுலபம், நம் ஊரில் நிச்சயம் பண்ணி 3 மாசம் கழிச்சி கல்யாணம் அதற்கு புடவை, நகை தேர்வு, பாத்திரங்கள் வாங்க அலைவதும் பத்திரிக்கை அடித்து உற்றார் உறவினர் அனைவருக்கும் வீட்டுக்குச் சென்று கல்யாணத்துக்கு அழைப்பது போன்ற வேலைகள்இருக்கும். இங்கு மின்னஞ்சலில் பத்திரிக்கை அனுப்பி வைத்து 10 முதல் 20 நாட்களுக்குள் சுலபமாக முடித்து விடுவார்கள். இங்க நெருங்கிய 10 உறவினர் நண்பர்களை வைத்து கல்யாணம் முடிச்சிடுறாங்க.
உணவு முறை
பெரும்பாலும் அமெரிக்கர்களின் உணவு பர்கர், கோழி வகைகள், பிரெஞ்ச் பிரைஸ் தான். ஆனால் மத்திய நாட்டு உணவான நூடுல்ஸ், பாஸ்தா, பிட்சானு அதையும் விரும்பி சாப்பிடுவாங்க. எல்லா வேலைக்கும் இயந்திரம் வந்ததால் பாதிபேர் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிச்சதாக கணிப்பு ஒன்று சொல்லுது.
மருத்துவம்
இங்க நம்ம ஊரப்போல நினைச்சவுடன் டாக்டரை பார்க்க முடியாது. இன்று அப்பாயின்மெண்ட் கேட்டால் பத்துநாள் கழிச்சிதான் கிடைக்கும். சிகிச்சை நல்லா இருக்கும். ஆனால் பெட்டில் சேர்ந்தால் சொத்தையே எழுதி வாங்கிடுவாங்க. இங்கு எல்லோருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் கட்டாயம்.
செல்ல பிராணிகள்
இந்த நாட்டில் செல்லபிராணிகளான நாய், பூனைகளை வீட்டில் குழந்தைகளைப் போல செல்லமாக வளர்ப்பர். குழந்தைகளுக்கு பழக்கப்படுவதுபோல அதுங்களுக்கும் தனியிடத்தில் மலம் கழிக்க பழக்கி விடுறாங்க. தெருக்களில் எந்த பிராணிகளையும் பார்க்கமுடியாது. நாய்,பூனைகளுக்கும் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்வர்.. அதுங்களுக்கென்றே துணி, டயாபர் விற்கும் கடைகளுண்டு.
இந்தியர்கள் பற்றி அமெரிக்கர்களின் பார்வை
நம் இந்தியர் பற்றி அமெரிக்கர்களின் பார்வை காரசார உணவு, அழகான ஆபரணங்கள், வெப்பமான ஊர், பிரமாண்ட திருமணங்கள், நம் குடும்ப கலாச்சாரம் இவைகளைப் பற்றி அதிசயமாக கேட்டறிவாங்க. நம் பெண்கள் புடவை கட்டி வந்தால் அருகில் வந்து ‘ஸோபியூட்டிபுல் டிரஸ்’ என சொல்லுவாங்க மற்றும் குழந்தைகள் அணியும் கொலுசு வளையல்களை பார்த்து அதிசயமாக ரசிப்பாங்க.
இதுதாங்க அமெரிக்கர்களின் வாழ்க்கை. பிரமிப்பாக உள்ளதா!
மீண்டும் சந்திப்போம்.
— ஸ்ரீ பிரியா சுந்தர்
(2050 தை மாத மின்னிதழிலிருந்து)