Home>>செய்திகள்>>மன்னார்குடி வ.உ.சி. சாலை விபத்தில் பலியான பெண்மணி
செய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்துமன்னார்குடி

மன்னார்குடி வ.உ.சி. சாலை விபத்தில் பலியான பெண்மணி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் உள்ள வ.உ.சி. சாலையில் மழை நீர் தேங்கி இருந்ததால் சாலையின் பழுதை கவனிக்க இயலாமல் இரு சக்கரத்தில் வந்த பெண்மணி மற்றும் உடன் வந்த இருவரும் விபத்துக்கு உள்ளாகினர்.

அதில் பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துவிட்டார். இவர் மன்னார்குடிக்கு அருகே உள்ள உள்ளிக்கோட்டை சம்பட்டிக்குடிக்காடு குடியிருப்பை சேர்ந்த செல்வராசு மகன் சிவகுமாரின் மனைவி சத்யா என்பவர். இவருக்கு 10 வயதிற்குட்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. மேலும் உடன் வந்தவர் சிகிச்சைக்காக தற்பொழுது மருத்துவமனையில் உள்ளார்.

பல ஆண்டுகளாக மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சாலைகள் முறையாக போடப்படாமலும், பராமரிக்கப்படாமலும் உள்ளதால் சிறிய அளவு மழைபெய்தாலும் மழைநீர் தேங்கி போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது. இதற்கென சாலை ஓரங்களில் மழைநீர் வடிந்து செல்வதற்கு என்று கூட சரியான கட்டமைப்பு இல்லாத நகராட்சியாக மன்னார்குடி திகழ்கிறது. குறிப்பாக இங்கு நீர் மேலாண்மை, கழிவு மேலாண்மை, சாலை மேலாண்மை போன்றதெல்லாம் இங்கு மிக பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

ஒரு பெண்ணிற்கு கல்விக்கொடுத்தால் அந்த குடும்பத்திற்கே கல்விக்கொடுத்தது போன்று என்பார்கள் கல்வியாளர்கள், அரசியல்வாதிகள்.

  • இன்று ஒரு பெண்மணியின் உயிரை பறித்த இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பேற்க போகிறார்கள்?
  • யாரை இந்த அரசு தண்டிக்க உள்ளது?
  • அந்த பெண்மணியின் குடும்பத்திற்கு என்ன வகையான இழப்பீட்டை இந்த அரசு வழங்க உள்ளது?
  • இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்னமாதிரியான சட்டங்களை கொண்டு வரப்போகிறது அல்லது சட்டங்களை கடுமையாக்க போகிறது?
  • தலைக்கவசம் அணிய அறிவுறுத்தும் அரசு, வாகன ஓட்டிகள் செல்ல ஏற்றவாறு சாலைகள் உள்ளதா என்பதை ஏன் தொடர்ச்சியாக உறுதி செய்ய மறுக்கிறார்கள்?

இது போன்ற கேள்விகளை மக்கள் தரப்பில் எழுப்ப துவங்கியுள்ளார்கள்.

மேலும் இந்த சாலை விபத்திற்கான காரணங்களை கண்டறிய, அந்த துறையில் சரியாக செயல்படாமல் இருந்த அரசு பணியாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மற்றும் உரிய விசாரணயை துவங்க மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. TRB. இராஜா அவர்கள் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நீதியைப் பெற்று தருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இறுதியாக இது சாலை விபத்தல்ல, சாலையை முறையாக போடாமல், பராமரிக்காமல் நடைப்பெற்ற ஒரு கொலையே. இதற்கு இந்த அரசு விரைவில் சரியான தீர்வு தரும் என்று நம்புவோம்.


மன்னை செந்தில் பக்கிரிசாமி,
மற்றும் கி. மாணிக்கம்,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply