இந்து அறநிலையத் துறை தொடங்கும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்கள் தேவை! என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அறிக்கைவிடுத்துள்ளார். அதனை தங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளோம்.
இந்து அறநிலையத் துறையைச் சேர்ந்த திருக்கோயில்களில் கூடுதலாக உள்ள நிதியைப் பயன்படுத்தி புதிய கல்லூரிகளும், மருத்துவமனைகளும் நிறுவிடத் தமிழ்நாடு அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
சென்னை அருள்மிகு கபாலீசுவரர் கலை-அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரி இன்று (8.10.2021) செய்தி ஏடுகளில் விளம்பரம் வந்துள்ளது. அதில் பி.காம். (B.Com.), பி.சி.ஏ. (B.C.A.), பி.பி.ஏ.(B.B.A.), பி.எஸ்.சி.(B.Sc.) கணிப்பொறிப் படிப்பிற்கான விண்ணப்பம் கோரப்படுள்ளது.
அதில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் படிப்புகளுக்கான வகுப்புகள் இல்லை. ஒரு வேளை இவ்விரு தலைப்புகளில் பட்டப் படிப்பு படிக்க மாணவர்கள் சேர மாட்டார்கள் என்று அரசு கருதி இப்படிப்புகள் சேர்க்கப்படவில்லையோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.
அவ்வாறு மாணவர்களிடையே இவ்விரு பட்டங்களுக்கான ஆர்வம் இல்லை என்றாலும், அவர்களை ஆர்வப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. கூடுதல் உதவித் தொகை – பணி அமர்த்தத்தில் இப்படிப்புப் படித்தோர்க்கு சிறப்பு முன்னுரிமைகள் போன்ற ஊக்கங்களை அளித்து – அவற்றை அறிவித்துதான் விண்ணப்பங்கள் கோர வேண்டும்.
அடுத்து இப்பொழுது விண்ணப்பங்கள் கோரப்படுள்ள பட்டப் படிப்புகளில் தமிழ்ப் பயிற்று மொழி உண்டா என்ற விவரமும் விளம்பரத்தில் இல்லை. தமிழ்ப் பயிற்று மொழிப் பாடப் படிப்புகள் கட்டாயத் தேவை. தமிழ்ப் பயிற்று மொழிவழி படித்தோர்க்கு வேலை வாய்ப்பில் தமிழ்நாடு அரசு 20 விழுக்காடு ஒதுக்கியுள்ளதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
எனவே, இந்து அறநிலையத் துறையின் சார்பில் இயங்குகின்ற மற்றும் தொடங்கப்பட உள்ள கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்களும், தமிழ்ப் பயிற்று மொழி ஏற்பாடும் வேண்டும் என்பதைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
—
செய்தி உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
—
செய்தி சேகரிப்பு:
மன்னை செந்தில் பக்கிரிசாமி.