Home>>கட்டுரைகள்>>தமிழ்க்கொலு… கொலு – தெய்வீகயிருப்பு
இங்கர்சால் நார்வே
கட்டுரைகள்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

தமிழ்க்கொலு… கொலு – தெய்வீகயிருப்பு

கொலு தமிழர் முறையா அல்லது ஆரியர் முறையா என்ற கேள்வி ஒவ்வொரு வருடமும் நான் எதிர்கொண்டு வருகிறேன். எனது பார்வையில் அது தமிழ்ச் சமூகத்தில் நெடுங்காலமாக இருக்கும் ஒரு வாழ்வியல் முறை. சமைக்கும் முறை யாருடைய முறை என்பதைவிட அதில் என்ன சமைக்கிறோம் என்பதில் இருக்கிறது அது யாருடைய உணவு என்று. தமிழர்கள் நாம் கொலுவில் தமிழர்களின் அடையாளங்களால் அலங்கரித்தால் அது 100% தமிழர்களுடையதாகிவிடும்.

கொலு நிகழ்வை நாம் சரியாக பயன்படுத்தி நமது வரலாற்றை நமது அடையாளங்களை நமது பிள்ளைகளுக்கு மிக எளிமையாக எடுத்துரைக்கலாம், அதே போல நம்மை சுற்றி இருக்கும் பிறருக்கும் இதனை விளக்கலாம், வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தாங்கள் யார் என்பதை பிற நாட்டினருக்கு மிக எளிமையாக புரிய வைக்க இது உதவும், இதனை இயன்றவர்கள் தொடங்கலாம். ஒருசில உயர்தட்டுகளிடம் மட்டுமே இருந்த இந்த பழக்கத்தை அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.

முதல் வரிசையில் பெருந்தெய்வங்கள் சிலைகளும் அதாவது தமிழ்த்தாய் மாயோன் சேயோன் வேந்தன் வருணன் கொற்றவை சிவன் போன்ற சிலைகளும். இரண்டாம் படியில் ஐய்யனார் மதுரைவீரன், கருப்பன், கருப்பசாமி, முனீசுவரன் போன்ற சிலைகளும், மூன்றாம் படியில் தமிழ் வளர்த்த #சித்தர்களும் புலவர்களும் இருக்கும்படியாக வள்ளுவர் முதல் வள்ளலார் வரை உள்ள சிலைகளும். நான்காம் படியில் நம்மை ஆண்ட அரசர்கள் சிலையும், நம்மை காத்து நின்ற வீரர்களின் சிலைகளும், அதாவது தமிழர் போர்க்கருவிகள் ஏந்திய வீரர்கள் சிலை, நடுகல் முதல் புலிகள் வரை சிலைகளாக அமைக்க வேண்டும் ஐந்தாம் படியில் இசைக்கருவிகள் வாசிக்கும் சிலைகள் அமைக்க வேண்டும் ஆறாம் படியில் அன்றாட வாழ்வில் உழைக்கும் உழைப்பாளிகளின் சிலைகள், உழவன் குயவன் அனைவரையும் சிலையாக அமைத்தல் வேண்டும்.

ஏழாவது படியில் நமக்காக வாழும் விலங்குகள், பசு, ஏறுதழுவுதல் காளை, நாய் போன்ற அனைத்தையும் அமைக்கவேண்டும். இதில் ஏதாவது விடுபட்டிருந்தால் அதனை நீங்கள் ஒன்பது படிவரிசை என்ற அடிப்படையில் இன்னும் இரண்டு படிகள் அமைத்து அதில் சிலையாக வைக்கலாம். இது ஒரு பரிந்துரை. இந்த வரிசை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளுங்கள். ஏன் இவர்? ஏன் இந்த படி? என்ற கேள்வி கேட்டு கருத்தை குழப்ப வேண்டாம்.

கொலு என்றால் அழகு என்று பொருள்.கொலு என்பது நவராத்திரியை முன்னிட்டு பொம்மைகளை வைத்து செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். இப் பண்டிகை பொதுவாக தமிழ் மாதமான புரட்டாசியில் வரும் அமாவாசையை அடுத்து வரும் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஒற்றைப்படையில் அதாவது, ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகள் வைத்து கொலு வைக்கப்படும்.

கொலுவில் கடவுள் சிலைகளுடன், மனிதனின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சித்தரிக்கும் பொம்மைகளும் இடம் பெறுகின்றன. புராணங்களைச் சித்தரிக்கும் பொம்மைகள், தேரோட்டம், கடவுளர்களின் ஊர்வலம், அணிவகுப்பு, திருமண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் பொம்மைகள், சிறிய அளவிலான சமையலறை சொப்பு சாமான்கள், விலங்குகள், மரங்கள் மற்றும் பறவைகள் பொம்மைகளும் இடம் பெறுகின்றன.

கொலுவில் மரப்பாச்சி பொம்மை முக்கிய இடம் வகிக்கிறது. இவை சந்தன மரம் அல்லது தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் உருவ பொம்மைகளாகும். ஒவ்வொரு வருடமும் இந்த பொம்மைகளை புது துணிகளைக் கொண்டு மணமகன்-மணப்பெண் ஒப்பனையில் அலங்கரித்து கொலுவில் வைப்பார்கள்.

தென்னிந்திய திருமண சடங்கின் போது மரப்பாச்சி பொம்மைகளைத் தாய்வீட்டு சீதனமாக கொடுக்கும் வழக்கம் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. இப் பொம்மைகள் வழிவழியாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கொலுவில் முக்கிய பொம்மைகளாக இருப்பது மரப்பாச்சி பொம்மை தலையாட்டி பொம்மை இவை தமிழர்களின் அடையாளம் என்பதை அடிப்படையாக வைத்து இதனை நாம் முழுவதும் நமதாக்குவோம்.
கோயில் கோபுரங்களே ஒருவகை கொலுவே.


கட்டுரை:
திரு. இங்கர்சால்,
வள்ளுவர் வள்ளலார் வட்டம்,
நார்வே

Leave a Reply