Home>>இந்தியா>>காலநிலை பருவ மாற்றத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடு

காலநிலை பருவ மாற்றத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலநிலை பருவ மாற்றத்தை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் சூரிய மின்சார உற்பத்தி, நீர் மின்சார உற்பத்தி, காற்று மின்சார உற்பத்தியை அதிகரிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

காலநிலை பருவ மாற்றம் பற்றிய நாடுகளுக்கு இடையிலான குழுவின் கூற்றுப்படி, புவிவெப்பமாதலைக் கட்டுப்படுத்த சராசரி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள்ளாகத் தக்கவைக்க வேண்டும். அதற்கு, அனைத்து நிலக்கரி மின்நிலையங்களுமே 2040-க்குள் கைவிடப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
காலநிலை பருவ மாற்றம் குறித்து ஐ.நா-வும், பல்வேறு நாட்டு ஆய்வாளர்களும், சுற்றுச்சூழல் நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதால், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இச்சூழலை காரணம் காட்டி, இந்தியா முழுவதும் அதிகப்படியான நிலக்கரியை எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கை சூற்றுச்சூழலுக்கு பெரும் அளவை ஏற்படுத்துவதோடு, காலநிலை பருவ மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

முக்கியமாக நாம் தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 70 விழுக்காடு நிலக்கரி சார்ந்த அனல்மின் நிலையங்களை நம்பியே இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இதுபோததென்று, தற்போது 6.50 ஜிகாவாட் மின்னுற்பத்திக்கான நிலக்கரி சார்ந்த அனல் மின்நிலையங்களைப் புதிதாக உருவாக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதே வேளையில், தமிழ்நாட்டிலுள்ள நிலக்கரி சார்ந்த மின்னுற்பத்தி நிலையங்கள், 20 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானவை என்றும் அவை அதிகம் மாசுபடுத்துபவையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே, உலக நாடுகள் 2050-க்குள் பசுமையான, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கு முற்றிலும் மாறுவதற்கான திட்டங்களை வகுத்து வரும் நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நிலக்கரி சார்ந்த அனல் மின்சார நிலையங்களை கைவிட வேண்டும்.

அதற்கு மாற்றாக, சூரிய, காற்று மின் உற்பத்தியை அதிகரிக்க ஒன்றிய, மாநில அரசுகள் முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

முக்கியமாக, ஏற்கனவே தமிழ்நாட்டின் சூரிய மின்னுற்பத்தித் திறன் 17 ஜிகாவாட், காற்று மின்னுற்பத்தித் திறன் 103 ஜிகாவாட் இருக்கும் நிலையில், அந்த உற்பத்தி திறனை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசும் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

நவம்பர் மாதம் 1ஆம் தேதி ஸ்காட்லாண்டில் உள்ள கிளாஸ்கோ நகரில், காலநிலை மாற்றம் தொடர்பாக நடைபெற இருக்கும் பன்னாட்டு உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி அவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. இதில், காலநிலை நியாயமான பங்கு, காலநிலை இலட்சியம், காலநிலை நிதி, இழப்பு மற்றும் சேதம் மேம்பாடு மற்றும் கார்பன் சந்தைகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
பிரதமர் மோடி இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்பு, பருவநிலை மாற்றத்தால் இந்தியா எதிர்நோக்கியுள்ள ஆபத்து குறித்து, அனைத்து மாநில முதல்வர்கள், ஆய்வாளர்கள், சுற்றுச்சூழல் நிபுணர்களிடம் ஆலோசிக்க வேண்டும். அதோடு, சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும், வனப்பாதுகாப்பு சட்டத்திருத்தம், நிலக்கரி சுரண்டல், துறைமுக விரிவாக்கம் உள்ளிட்ட நாசக்கார திட்டங்களை கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.


திரு. தி. வேல்முருகன்,
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.

Leave a Reply