Home>>அரசியல்>>“இல்லம் தேடி கல்வித் திட்டம்” மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்றம்
அரசியல்இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடு

“இல்லம் தேடி கல்வித் திட்டம்” மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

“இல்லம் தேடி கல்வித் திட்டம்” மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஒன்றிய அரசின் வஞ்சகத் திட்டங்களை கைவிட்டு தமிழ்நாட்டின் சமூகநீதி வழங்கல் முறையை பாதுகாத்து, மேம்படுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுருத்தல்.

இல்லம் தேடி கல்விதிட்டம் விவகாரம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் தோழர் இரா.முத்தரசன் விடுத்துள்ள செய்தி பின்வருமாறு:

சமூக நீதி வழங்கலை உறுதி செய்யும் முறையில் தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் ‘சமச்சீர் கல்வித் திட்டம்’ கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார். இடையில் வந்த அஇஅதிமுக அரசு அதனைக் கிடப்பில் போட்டதும் தொடர்ந்து வந்த பாஜக ஒன்றிய அரசு ‘நீட்’ தேர்வு, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மாநில உரிமைகளை பறித்து, சமற்கிருதமயமாக்கல் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே ஆரம்பப் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு ‘திறனறியும் தேர்வு’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் ஒரு பகுதி மக்கள் கற்பதற்கான சக்தியற்றவர்கள் என ஒதுக்கி வைக்கும் வஞ்சகத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறது. இந்தத் திறனறியும் தேர்வுக்கு ‘மதிப்பெண்’ ஏதும் தருவதில்லை என்பதால் மாணவர்களை பாதிக்காது என்று கூறும் விளக்கம் ஏற்கத்தக்கதல்ல. இந்த நிலையில் ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ என்பது என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை அரசு ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும்.

இத்திட்டத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொண்டர்களும் மேற்கொள்வார்கள் எனில் இங்கே சாகாக்கள் நடத்தும் ‘சங்பரிவார்’ கும்பல் ஊடுருவி பிஞ்சுமனங்களில் மதவெறி நஞ்சு விதைக்கும் விபரீதம் ஏற்படும் என்பதை தமிழ்நாடு அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் தனித்துவத்தை அடிப்படையாகக் கொண்டு தனி கல்விக் கொள்கை உருவாக்க உயர்நிலை வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் உறுதியளித்த முதலமைச்சர், ஒன்றிய அரசின் வஞ்சகத் திட்டங்களை கைவிட்டு தமிழ்நாட்டின் சமூகநீதி வழங்கல் முறையை பாதுகாத்து, மேம்படுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.


செய்தி உதவி:
தோழர். கா. லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply