நாகப்பட்டினம் முக்கிய சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்துகளும் நடக்கின்றன. இதுபற்றி ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நகராட்சி ஆணையரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கக் கூறினேன்.
இதையடுத்து சாலைகளில் சுற்றித்திரிந்த கால்நடைகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. அதன் பிறகும் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவது முடிவுக்கு வரவில்லை.
இது குறித்து கேட்டபோது, நாகப்பட்டினம் நகராட்சியில் கால்நடைகளை பராமரிப்பதற்கான வசதிகள் இல்லாததாலும், வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாலும் அன்றாடம் கால்நடைகளை பிடிப்பதில் சிக்கல் நீடிப்பதாக விளக்கமளித்தனர். எனினும், பொது மக்களின் நலன் கருதி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்தினேன்.
இதற்கிடையில், இன்று நாகூர் நாகை சாலையில் ஏற்பட்ட விபத்தில், நாகூரை சார்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜஹபர் சாதிக், நிகழ்விடத்திலேயே பலியாகியுள்ளார். இது மிகவும் வேதனை அளிக்கிறது. ஏழ்மை நிலையிலுள்ள அவரது குடும்பத்தினருக்கு இது பேரிழப்பு. எனவே, இது குறித்து விசாரணை நடத்தி, பலியானவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளேன்.
சாலைகளில் கால்நடைகளை சுற்றித் திரிய விடும் உரிமையாளர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். பொறுப்பற்றவர்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்பட வேண்டும். சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் உடனடியாக பிடிக்கப்பட்டு, பராமரிப்புக் கூடத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
—
திரு. ஆளூர் சா நவாஸ்,
சட்டமன்ற உறுப்பினர்,
நாகப்பட்டினம்.