திசம்பர் 8 அன்று நடக்கும் விரிவுரையாளர் தேர்வில் வெளி மாநிலத்தவர் படையெடுக்காமல் தடுக்க தமிழ்த் தேர்வைக் கட்டாயமாக்க வேண்டும்! என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அவர்கள் அறிக்கை!
வரும் 2021 திசம்பர் 8 முதல் 12 வரை நடைபெறவுள்ள – அரசு பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் வெளி மாநிலத்தவர் பெருமளவு பங்கேற்கவுள்ள நிலையில், தமிழ்த் தாளைக் கட்டாயமாக்கும் அரசாணை எண் 133 – இத்தேர்வுக்கு நிபந்தனையாக்கப்படவில்லை. எனவே, தமிழ்நாடு அரசு அத்தேர்வை ஒத்தி வைத்து, அரசாணை 133ஐ இத்தேர்வுக்கும் பொருந்துமாறு செய்து மறு அறிவிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
ஆசிரியர் பணித்தேர்வு வாரியம் (Teachers Recruitment Board – TRB) நடத்தவுள்ள இத்தேர்வு, வெளி மாநிலத்தவர் பங்கேற்பால் ஏற்கெனவே இரத்தாகி, இரண்டாம் முறையாக நடைபெறுகின்றது. கடந்த 2017இல் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அத்தேர்வில் வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், தி.மு.க. அரசும் அதேபோல் வாய்ப்பளித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கடந்த 2017இல் இதே பணியிடங்களுக்காக நடந்த தேர்வில், தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர் பெருமளவில் தேர்வானதை வெளிப்படுத்தி 10.11.2017 அன்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் அறிக்கை வெளியிட்டார். இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினரும் அதனைக் கண்டித்த நிலையில், வெளி மாநிலத்தவரை நீக்கிவிட்டு புதிய பட்டியல் வெளியிடாவிட்டால், வெற்றி பெற்றோருக்கு 23.11.2017இல் நடைபெறவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பை முற்றுகையிட்டுத் தடுப்போம் என்று ஐயா மணியரசன் அவர்கள் அறிவித்தார். இதனையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு அரசாலேயே ஒத்தி வைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இதில் தலையிட்டு, அத்தேர்வை இரத்து செய்ததுடன் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 27.11.2019 அன்று, இதே 1060 பணியிடங்களுக்கான மறுத்தேர்வு அறிவிப்பு (அறிவிப்பு எண் – 14/2019) வெளியிடப்பட்டது. தமிழ் தெரியாதோரும் இத்தேர்வை எழுதலாம் என்று கடந்த முறை (2017) அறிவிப்பு வெளியிட்டதால்தான் வெளி மாநிலத்தவர் இத்தேர்வில் பங்கேற்று முறைகேட்டில் ஈடுபட்டனர் என்ற நிலையில், 2019இல் வெளியிடப்பட்ட அறிவிப்பும் அதே விதியைக் கொண்டிருந்தது. எனினும் தேர்வு நாள் அறிவிக்கப்படவில்லை.
கொரோனா முடக்கம் காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக நடைபெறாத அத்தேர்வு, கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டு, பின்னர் ஒத்திவைக்கப்பட்டு, இப்போது திசம்பர் 8 முதல் 12 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய அறிவிப்பின்படியே இத்தேர்வு நடைபெறவுள்ளதால் மீண்டும் இத்தேர்வில் தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்கும் நிலை உள்ளது. வெளி மாநிலத்தவர்கள் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகத் தேர்வானால், கிராமப்புறங்களில் தமிழ்வழியில் படித்துவிட்டு பல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேரும் தமிழ் மாணவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவர். தமிழ் மாணவர்களின் வேலை வாய்ப்பும் பறிபோகும்!
தமிழ்நாட்டு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர் சேர்வதைத் தடுக்கும் வகையில் பணித்தேர்வுகளில் தமிழ் மொழித் தாளைக் கட்டாயமாக்கி கடந்த 03.12.2021 அன்று தி.மு.க. அரசு புதிய அரசாணை (எண் – 133) வெளியிட்டுள்ளது. ஆயினும், வரும் திசம்பர் 8 அன்று நடைபெறவுள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வில் தமிழ் மொழிப் பாடமே இல்லை! இந்த அரசாணை இத்தேர்வுக்கு பொருத்தப்படவில்லை.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக திசம்பர் 8 அன்று நடைபெறவுள்ள தேர்வுக்கான அறிவிப்பை இரத்து செய்துவிட்டு, தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கி மறுத்தேர்வு அறிவிப்பை வெளியிடுவதுடன், தேர்வர்களின் வசிப்படச் சான்று (Nativity Certificate) போன்ற சான்றுகளின் வழியே வெளி மாநிலத்தவர் இத்தேர்வில் பங்கேற்பதற்குக் கடும் வரம்பு கட்ட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
—
செய்தி உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.