தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் இனி அரசு வேலை! அரசாணையை வரவேற்கிறோம்!
தமிழ்நாட்டில் தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இனி தமிழ்நாட்டு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில்
01.12.2021 அன்று வெளியிடப்பட்ட தமிழ்நாட்டு அரசின் ஆணையை தமிழ் மண் தன்னுரிமை இயக்கம் மற்றும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வரவேற்கின்றன!
தமிழ்நாடு அரசின் அரசாணை எண் 133 கடந்த 01.12.2021 அன்று வெளியிப்பட்டது. இனி தமிழ்நாட்டு அரசின் அனைத்து போட்டித் தேர்வுகளிலும், அரசு வேலைவாய்ப்புகளுக்காக நடத்துகிற தேர்வுகளிலும், 10ஆம் வகுப்பு அளவிலான தமிழ் மொழித் தாளில் ஒருவர் கட்டாயம் 40% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலைகளில் தமிழ் தெரிந்தவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தாள் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இது சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பைப் பெற முடியாது. அவ்வாறெனில், 100% வேலைகளும் தமிழ் நாட்டவர்களுக்கே கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசு பணியில் அமர இத்தேர்வில் வெற்றி பெறுவது முன்நிபந்தனையாக ஆக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்தாலும் எனக்கு தமிழ் தெரியாது என்று கூறிப் பெருமைப்படுகிறார்கள் அரசுப்பணி பெற இனி வாய்ப்பு இல்லை.
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், கிராமப்புறங்களிலிலிருந்து, எளிய குடும்பங்களிலிருந்து வரும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் இதனால் விரிவடையும்.
அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு முன்னுரிமை, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்குஇட ஒதுக்கீடு, ஆகியவற்றோடு, தமிழில் ஒரு தாளில் 40% பெற்று தேர்ச்சி பெற்றால்தான் அரசுப்பணி என்று அரசாணை வெளியிட்டு இருப்பது சமூக நீதியை மேலும் வலுப்படுத்தும். தமிழ்நாடு அரசைப் பாராட்டுகிறோம்.
இதேபோன்று, தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் அத்தனையிலும், தனியார் நடத்தும் அத்தனை நிறுவனங்களிலும், தமிழ் மொழி அறிந்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்ற நிலையை உருவாக்க, தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டு அரசுக்கு பாராட்டுக்கள்!.
—
பேராசிரியர் த. செயராமன்,
தலைமை ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு,
நெறியாளர்,
தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்.