Home>>ஆன்மீகம்>>பாடத் திட்டத்தில் தேவாரம் திருவாசகம் கற்றுத் தரப்பட வேண்டும்.
ஆன்மீகம்கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

பாடத் திட்டத்தில் தேவாரம் திருவாசகம் கற்றுத் தரப்பட வேண்டும்.

மன்னார்குடி சிவனடியார் திருக்கூட்ட 61ஆம் ஆண்டு விழா முப்பெரும் விழாவாக திருவாசகம் முற்றோதல், முதுபெரும் அடியார்க்கு விருது வழங்குதல் மற்றும் திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் எனக் கொண்டாடப்பட்டது.

திருக் கூட்டப் புலவர் குடவாசல் இராமமூர்த்தி முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் ஸ்ரீ பைரவ நிலையம் தவத்திரு பைரவ சுவாமிகள் கலந்து கொண்டு விருது மற்றும் பரிசுகள் வழங்கி ஆசியுரை வழங்கினார்.

அவர் தன் உரையில் குறிப்பிட்டதாவது. பன்னிரு திருமுறைகளில் எட்டாவது திருமுறை மிகவும் சிறப்பு வாய்ந்தது. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் மாணிக்க சொற்களால் ஆனது. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமுறைகளை மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் பாடத்திட்டத்தில் வைத்து மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால் திருமுறைகள் பிறந்த இம்மண்ணில் இந்த வாய்ப்பு இல்லை. பாடத்திட்டத்தில் தேவாரம் திருவாசகம் கற்றுத் தரப்பட வேண்டும். அதற்கு இத்தகைய திருக் கூட்டங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மன்னார்குடி சிவனடியார் திருக்கூட்டத்தினர் அண்மையில் நடத்திய திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டியில் மன்னார்குடி நகர அளவிலேயே 18 பள்ளிகளில் இருந்து 320 மாணவர்கள் பங்கு கொண்டார்கள் என்பது அறிந்து மிகவும் மகிழ்ச்சி யடைந்தேன். தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் நடத்த பெற்று இளம் தலைமுறையினர் நமது சமயம் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று பேசினார்.

தொடர்ந்து திருவாவடுதுறை ஆதின சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு சிதம்பரம் மைய அமைப்பாளர் சீனு. அருணாசலத்திற்கு சிவம் பெருக்கும் சீலர் என்கிற விருதும் மன்னார்குடி சிவனடியார் திருக் கூட்ட செயலாளர் ஆ. சீனிவாசனுக்கு சிவநெறிச்செல்வர் என்கிற விருதும் வழங்கப்பட்டது.

திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக முதல் 3 இடங்களைப் பெற்ற 21 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மற்ற பங்கேற்ற 299 மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்களும் பலன் தரும் பதிகங்கள் என்கிற புத்தகமும் ஆறுதல் பரிசாக வழங்கப்பட்டன.

தூய வளனார் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பிரதீக்ஷா, தர்ஷினி, அபிதா, ஆர்த்தி, நிஷாந்தினி, வைஷ்ணவி ஆகியோர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ரதிமீனா, அனுதிகா, ஸ்ரீகா ஆகியோர் அசோகா சிசு விஹார் பள்ளி அனன்யா, ஹேமவர்ஷினி, ஹத்தீஜாபீவி, உதயநிதி, ஹரினிதா ஆகியோர் ஸ்ரீ பாரதி வித்யாலயா தமிழ்க் குமரன் பிரியாஞ்சலி ஆகியோர் நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி தீபக் சந்தோஷ் சிவன் நகராட்சி மாடல் நடுநிலைப்பள்ளி கிருத்திகா பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி யாழரசி தேசிய மேல்நிலைப்பள்ளி மாதேஷ் ஆகியோர் பரிசு பெற்றனர்.

விழாவில் சிவனடியார் திருக் கூட்டத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


செய்தி உதவி:
திரு. என். இராஜப்பா,
ஆசிரியர்,
தேசிய மேல்நிலைப் பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply