Home>>இந்தியா>>83 திரைப்படம் ஒரு பார்வை.

இது வெறும் எண் அல்ல. ஆகச்சிறந்த match “high(class)lights”

இந்தியாவில் கிரிக்கெட் என்பது மற்ற விளையாட்டுகளை போல சாதாரண நிலையிலிருந்து எப்படி ஒரு மதம் போல மக்களிடையே மாறியது என்பதை இன்றைய ஐபிஎல் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் படம்.
1983ல் முதன்முதலாக கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வென்ற அந்த அரிய நிகழ்வை அப்படியே நம் கண்முன் மீண்டும் கொண்டுவந்து இருக்கிறார்கள்.ஒரு கிரிக்கெட் வெற்றி, அது இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கங்கள், மக்கள் மனதில் உண்டாக்கிய மாற்றங்கள் இவற்றைப்பற்றி அனைவருக்கும் எடுத்துரைக்கும் நோக்கத்தில் கபீர் கான் இயக்கத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ள படம் “83”

இதுவரை உலக சினிமாவில் வராத கதை என்று சில படங்களை சொல்லலாம். ஆனால் ஊரறிந்த, உலகறிந்த ஒரு சம்பவத்தை, அடுத்த ஒவ்வொரு காட்சியும் என்னென்ன வரப்போகிறது என்று அனைவருக்கும் தெரிந்த ஒரு திரைக்கதையை மிக சுவாரசியமாகவும், உணர்வு பூர்வமாகவும் வழங்கியிருக்கிறார்கள். இது எப்படின்னா ஒரு அற்புதமான ஆட்டத்தை நேரடி ஒளிபரப்பில் பார்ப்பது எவ்வளவு ஆனந்தமோ அதேபோல அதன் தொகுப்பை (highlights) பார்ப்பதும் ஆனந்தமே.

இந்த படம் அந்த வகையை சேர்ந்தது.

45 வயதிற்கு மேற்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் யாராக இருந்தாலும் அவர்களால் மறக்க முடியாத ஒரு கிரிக்கெட் நிகழ்வு 1983 உலகக்கோப்பை மற்றும் கபில் தேவ் அடித்த 175 ரன்கள். அதான் 2007ல, 2011ல இந்தியா உலகக்கோப்பை வென்றதே. அப்படி என்ன 1983ல வாங்குன கோப்பையில் தனிச்சிறப்பு என்று இன்றைய IPL தலைமுறை ரசிகர்களுக்கு தோணலாம். ஆனால் அன்று இந்திய அணி இருந்த சூழல் வேறு.

1975 மற்றும் 1979 இந்த இரண்டு உலக கோப்பையிலும் இந்தியா பங்கேற்று மொத்தமாக வெற்றி பெற்றது ஒரே ஒரு ஆட்டம் தான். அதுவும் கிழக்கு ஆப்பிரிக்கா என்ற ஆக பலவீனமான ஒரு அணியை. அப்படி இருந்த ஒரு அணி உலககோப்பையை பெறுவது பெரிய அதிசயமே. இன்றைக்கு இந்திய கிரிக்கெட் அணி இருக்கும் நிலை வேறு. கிரிக்கெட் சூழல் வேறு. ஆட்ட விதிமுறைகள் வேறு. களம் வேறு. பந்துவீச்சாளர்கள் தரம் வேறு. ஆட்டக்காரர்களின் நிலை வேறு. ஆனால் அன்றைய சூழல் தற்போதுள்ள நிலைக்கு முற்றிலும் மாறுபட்டது.அதை தெள்ளத்தெளிவாக படம் பார்வையாளர்களுக்கு கடத்துகிறது.

“80 களில் இந்திய கிரிக்கெட் நிலை”

இந்தியா அரையிறுதி கூட செல்லாது என்ற நம்பிக்கையில்தான் ஒட்டு மொத்த ஊடகங்கள், ரசிகர்கள், இவ்ளோ ஏன் BCCI, ஆட்டக்காரர்கள் உட்பட யாருமே நம்பவில்லை. ஏதோ ஒரு சுற்றுலா போல் தான் விளையாட செல்கிறார்கள் திருமணமான ஆட்டக்காரர்கள் தேனிலவுக்கு சென்றது போல் செல்கிறார்கள். இறுதிப் போட்டி நடக்கும் லார்ட்சு மைதானத்திற்குள் நுழைய அனுமதி அட்டை இந்திய அணிக்கு மறுக்கப்படுகிறது நீங்கள் இறுதிப்போட்டிக்கு வந்தால் வழங்குகிறோம் என்று அவமானப்படுத்துகிறார்கள்.

இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் அழுக்கான சீருடையை laundryக்கு கொடுத்து துவைப்பதற்கு கூட காசு இல்லாமல் தானே துவைக்கும் நிலையில் தான் அன்றைய கிரிக்கெட் வீரர்களின் பொருளாதாரம் இருந்தது. அதே பொருளாதாரத்தை காரணம் காட்டி உலக கோப்பை போட்டியில் ஆடும் வேகப் பந்துவீச்சாளர் பல்விந்தர் சாந்துவின் திருமணம் தடைப்படுகிறது. “நான் ஒரு மருத்துவராகவோ இல்ல, பொறியாளராகவோ இல்லியே. நான் வெறும் கிரிக்கெட் தானே ஆடுறேன்”ன்னு அந்த நேரத்தில் அவர் பேசும் வசனம் நமக்கு நம்ப முடியாத வியப்பைதான் வழங்குகிறது.

கோப்பையை வென்ற அன்று மகிழ்ச்சியில் சாம்பெயின்களை குடித்து மற்றவர்கள் கொண்டாடிக் கொண்டு இருக்கும் வேளையில், யார் இதுக்கெல்லாம் பணம் தருவார் என்ற மனக்கவலையில் இருந்த கபில் தேவ். (சுத்தமாக கையில் பணமே இல்லாத நிலை).

அதே போல இங்கிலாந்து சென்ற இந்திய அணியையும், ஆங்கிலம் சுமாராக பேசும் கபில் தேவையும் ஆரம்பத்திலிருந்தே மட்டம் தட்டும் ஆங்கில ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி வர்ணனையாளர்கள்.
இப்படி ஒரு அசாதாரணமான சூழலில் இருந்த இந்திய அணி முடிவில் கோப்பையை வென்றது பெரும் சாதனை.
இந்த சாதனைக்கு முதுகெலும்பாக இருந்த ஒரு நபர் கபில்தேவ்.

ஒட்டுமொத்த அணியும் உலககோப்பை வெல்வோம் என்ற நம்பிக்கை துளியும் இல்லாத போது அனைவருக்கும் உத்வேகம் அளித்து இறுதிவரை மன உறுதியுடன் தன்னம்பிக்கையோடும் இருந்து அணியை திறம்பட வழிநடத்திய ஒரு அசாத்தியமான அணியின் தலைவன் என்பதை தாண்டி ஒரு பொதுவான தலைவன் என்பதற்கு உதாரணமாக இருந்து இருக்கிறார். குறிப்பாக கிரிக்கெட் உள்ளவரை ரசிகர்களால் மறக்கமுடியாத அந்த 175 ரன்கள்.

மிக இக்கட்டான சூழலில் கபில் அடித்த அந்த ஆட்டம் இன்றளவும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கெடுவாய்ப்பாக மைதானத்தில் இருந்தவர்கள் தவிர வேற யாரும் பார்த்ததில்லை. BBC போராட்டப் பிரச்சினையில் அந்த ஆட்டம் ஒளிப்பரப்பப்படவில்லை. இந்த படம் மூலமாக அந்த வரலாற்று நிகழ்வை நமக்கு வழங்கியுள்ளனர். இன்னும் கூட சிறப்பாக அதன் முக்கியத்துவத்தை காட்டியிருக்கலாம்.

குறைந்தபட்சம் அவர் என்ன சாதனை செய்தார் எவ்வளவு அடித்தார் என்பதை தெளிவாக எழுத்து மூலம் காட்டி இருக்கு வேண்டும். 138 பந்துகளில் 175 ஓட்டங்கள் என்பது அந்த காலகட்டத்தில் எவ்வளவு பெரிய சாதனை. ஆனால் அதை ஆங்கில வர்ணனை மூலமே சொன்னது பலருக்கு தெரியாமல் போய்விட்டது. அதே போல பல முக்கியமான இடங்களில் ஆங்கில வர்ணனையை பயன்படுத்தியதும் காட்சியின் தீவிரத்தை பார்வையாளர்களுக்கு உணர்த்த முடியாமல் போய்விட்டது. அதை தவிர்த்து இருக்கலாம்.

படத்தில் கபில் தேவை தவிர யசுபால் சர்மா, மதன் லால், சிறிகாந்த், அமர்நாத், சாந்து, சந்தீப் பாட்டில் இவர்கள் கதாபாத்திரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இருப்பது சிறப்பு. இப்படித்தான் ஒரு அணியாக விளையாடி கோப்பையை வென்றுள்ளனர் என்பது தெரிகிறது.

கபில் தேவாக ரன்வீர் சிங் வாழ்ந்து இருக்கிறார். பத்மாவதியின் அலாவுதீன் கில்ஜியாகவே வாழ்ந்து நடிப்பால் நம்மை மிரட்டியவர் இதில் கபில் தேவை நம் கண் முன்னே காட்டியுள்ளார். குறிப்பாக அவர் பந்துவீசும் பாணி மற்றும் அந்த நடராஜா shot. அதே போல சீவா, கிருட்டிணாணமாச்சாரி சிறிகாந்தை கண்முன்னே நிறுத்துகிறார்.

அதே போல நடித்த ஒவ்வொருவரையும் சொல்லலாம். மொகிந்தர் அமர்நாத் தந்தை லாலா அமர்நாத் பாத்திரத்தை உண்மையான மொகிந்தர் அமர்நாத் செய்திருப்பது அந்தக்கால கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு இனிய ஆச்சர்யம்.

படத்தின் கத்தரிப்பு பணி அற்புதம். ஏறக்குறைய ஒரு கைலைட்சு தொகுப்பது போலத்தான். ஆனால் ஆட்டம் நடக்கும் போது திரைப்படத்தையும், உண்மை சம்பவத்தையும் அவ்வப்போது ஒருங்கே மிக அழகாக இணைத்துக் காட்டியது அபாரம். அருமையான கத்தரிப்பு பணி. அதே போல ஒளிப்பதிவும் சரி கலை இயக்கமும் சரி. அபாரமான வேலையை செய்துள்ளனர். இறுதிப்போட்டி நடக்கும் லார்ட்சு மைதானத்தையும் அதன் பிரம்மாண்டத்தையும் கண் முன்னே நிறுத்திவிட்டார்கள். குறிப்பா லார்ட்ஸ் மைதானம் பால்கனியை காட்டும் அந்த wide angle shot, வெற்றிக்களிப்பில் மைதானம் முழுவதும் வெறித்தனமாக ஓடும் மக்களை கழுகுப்பார்வையில் காட்டும் அந்த shot ஆகட்டும். கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அப்படியே உண்மையான கிரிக்கெட் போட்டியை பெரிய திரையில் பார்ப்பது காண்பது போல ஒரு தோற்றத்தை மிக தத்ரூபமாக உருவாக்கிய அனைத்து தொழில்நுட்ப வல்லுர்களுக்கும் பாராட்டுகளை சொல்லலாம்.

முக்கியமாக படத்தின் இயக்குனர் கபீர் கான். பல வருடங்கள் வணக்கம் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். குறிப்பாக கதாபாத்திரத்தேர்வு. கபில்தேவை மட்டுமே வைத்து அவர் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதற்கு பொருத்தமான ஒரே ஒரு ஆளை தேர்வு செய்தால் போதும் ஏனென்றால் அவர் வாழ்க்கையில் உள்ள மற்றவர்களை பற்றி நமக்கு தெரியாது. எனவே அது சற்று எளிது. ஆனால் இது முழுக்க முழுக்க உலக கோப்பையை வென்ற ஒரு அணியை பற்றிய வரலாறு.

எனவே அதில் நடிக்கும் ஒவ்வொருவரும் பொருத்தமாக இருக்கவேண்டும். அவர்களுக்கு சிரிக்கெட் ஆடவும் தெரிஞ்சுருக்க வேண்டும். மிகக்கடினமான ஒரு வேலையை செய்துள்ளார். ஆடும் 11 பேர் மட்டுமன்றி ராணி எலிசபெத், இந்திரா காந்தி மற்றும் 10 வயது சச்சின் முதற்கொண்டு கதாபாத்திரத்தேர்வு மிகச்சிறப்பாக அமைந்தள்ளது. மிகக் கடினமான ஒரு படத்தை மிக அற்புதமாக நமக்கு வழங்கியுள்ள இயக்குனருக்கு நிச்சயம் நம் பாராட்டுக்களைத் தெரிவித்தேயாக வேண்டும்.

பூலான் தேவி சரண், மாருதி கார் அறிமுகம், தொலைபேசி இணைப்பிற்காக 18 வருடம் காத்திருத்தல், தூர்தர்சனில் ஒளிபரப்பாகும் கிரிக்கெட் போட்டியை காண ஆண்டனாவை அங்குமிங்கும் திருப்பிய அந்த 80 களின் உலகத்தை நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளார். குறிப்பாக நவாப்பூரில் நடந்த மதக் கலவரத்தை கட்டுப்படுத்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகளை முதன் முதலாக தூர்தர்சனில் நேரடி ஒளிபரப்பு செய்ய இந்திரா காந்தி எடுத்த அந்த நடவடிக்கை, அதன் மூலம் ஒரு கிரிக்கெட் விளையாட்டு எப்படி ஒரு மதக் கலவரத்தை பணிய வைக்க உதவியது என்பதும் வியப்பான தகவல்.

இந்தியாவின் வெற்றியை மக்கள் எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதையும் சிறப்பாக காட்டியுள்ளனர். குறிப்பாக ராணுவத்தில் போடு விமானத்தில் அந்த வெற்றி எவ்வாறு கொண்டாடப் பட்டது என்பதை பார்க்கும்போது நமக்கு மெய்சிலிர்க்கிறது.

இந்தியாவுக்குப் போய் வெற்றி பெறவே பெறாது, அப்படி வெற்றி பெற்றால் தான் எழுதிய அந்த நாளிதழை நானே தின்கிறேன் என்று சவால் விட்ட ஒரு புகழ் பெற்ற இங்கிலாந்து பத்திரிக்கையாளர் சொன்னதுபோலவே அதை செய்துள்ளார் என்பதும் நல்ல தகவல்.

மொத்தத்தில் இந்த 83 படம் இன்று 45 வயதுக்கு மேலே உள்ளவர்களுக்கு தங்களது இனிமையான சிறு வயது நினைவுகளை அசைபோட ஒரு அற்புதமான பயணமாக அமையும்.

40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கிரிக்கெட் என்றால் என்ன அது எப்படி இந்தியாவில் இந்த அளவுக்கு புகழ் பெற்றுள்ளது என்ற வரலாற்றை அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பமாக அமையும். கிரிக்கெட் பற்றி தெரியாதவர்களுக்கு இந்த படம் அவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது கடினமே.

83 உலக கோப்பையை தவற விட்டவர்களுக்கு ஒரு அரிய மறு வாய்ப்பு விட்டு விடாதீர்கள்.


மன்னை செந்தில் பக்கிரிசாமி

Leave a Reply