Home>>அரசியல்>>ஒத்திகைக்களமா கதிராமங்கலம்?
அரசியல்கட்டுரைகள்தமிழ்நாடு

ஒத்திகைக்களமா கதிராமங்கலம்?

– இராசசேகரன், மன்னார்குடி
(2048 ஆடிமாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)


கதிராமங்கலம் கம்பர் வளர்ந்த ஊர், கம்பரை வளர்த்த சடையப்ப வள்ளல் பிறந்து வளர்ந்து வாழ்வாங்கு வாழ்ந்த ஊர், அம்பிகாபதி அமராவதியின் காதல் கனிந்த ஊர், கோவலனும் கண்ணகியும் பூம்புகார் நோக்கி கடந்து சென்ற ஊர்.

குலோத்துங்கனின் மகனான விக்ரமன் காவிரியை வடக்கு நோக்கி பாயச்செய்த ஒரே பண்பட்ட ஊர்.

ஒரு பக்கம் விக்ரமன் ஆறு, மறுபக்கம் காவிரி ஆறு, நடுவே நடுவளியாக உள்ள ஊர், இன்று நருவெளி என திரிந்த ஊர்.

இதனாலேயே விக்ரம ஆறு, வடகாவிரி என்று பாடல் பெற்ற ஊர். யானைக்கட்டி போரடித்த சோழமண்டலத்தில் களம் கொள்ள கதிர்களை கொண்டதால் கதிர்வேய்ந்தமங்கலம் என அறியப்பட்ட ஊர்.

அக்காலம் முதல் இக்காலம் வரை பசுமை போர்த்திய பரந்த நிலப்பரப்பை கொண்ட ஊர் இன்று ONGC அரக்கனால் பாலைவனமாவதை தடுக்க அறப்போராட்டம் நடத்தும் அற்புத ஊர்.

காவிரிப்படுகையில் பல ஆண்டுகளாக ONGC யால் எண்ணெய் எடுக்கிறோம் என்று பாழ்படுத்தப்பட்ட பல பகுதிகளில் கதிராமங்கலமும் ஒன்று இதனாலேயே இப்பகுதியின் நிலத்தடி நீர் உப்பாகி பயன்பாடற்று போனது தண்ணீரின் தன்மையே கெட்டுப்போனது நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விவசாயம் செய்ய வழியற்ற நிலமாக மாறிவருகிறது.

ONGC கோபுரத்திலிருந்து வெளியேற்றப்படும் எரிவாயுக்களால் செயற்கையான மழை மறைவு பிரதேசமாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது கதிராமங்கலம்.

மேலும் எண்ணெய் எரிவாயு துரப்பண பணியானது மக்கள் குடியிருப்பு பகுதியில் இருக்க கூடாது என்ற விதி இருந்தாலும் ஊரின் மையப்பகுதியில் கடைகள் வீடுகள் உள்ள மக்கள் புழக்கம் அதிகம் உள்ள பகுதியிலேயே பணி நடந்து கொண்டிருக்கிறது.

ஊரில் வயல்கள், வாய்க்கால்கள், ஆறுகளின் குறுக்கே என்று எங்குமே எரிவெளி சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல எரிவாயு குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பல முறை விபத்து ஏற்பட்டு தீயணைப்பு வாகனங்களால் தீயை அணைக்க முடியாமல் துரப்பனபணி நடக்கும் இடத்தில்  வாயு வரும் வழியை ONGC ஊழிகர்கள் வந்து அடைத்து பாதிப்பு ஏற்பட்ட குழாயை சரி செய்த பிறகே தீயை அணைக்க முடிகிறது.

இதே போன்று முன்னொரு முறை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூதாட்டி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் இதனாலேயே அம்மக்கள் எந்த நேரத்தில் என்ன ஆபத்து வருமோ என்ற அச்சத்திலேயே வாழ்க்கையை கழிக்க வேண்டியுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தான் ONGC நிறுவனம் பராமரிப்பு வேலை என்று கூறி கனரக வாகனங்கள் எந்திரங்கள் என கூடியதால் மக்கள் அச்சமுற்று தங்களின் எதிர்ப்பையும் ONGC வேலையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.

மே 19 அன்று வட்டாச்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ONGC நிறுவனம் வேலையை உடனே நிறுத்த வேண்டும் மேலும் தரையில் செல்கின்ற எரிவளிக்குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன் வைத்தனர்.

அதற்கு ONGC நிறுவனம் இனி வேலையை தொடங்கமாட்டோம் என்றும் குழாய்கள் நான்கு அடி ஆழத்தில் தான் செல்கிறது அதனால் பாதிப்பு இல்லை என்றும் கூறினார்கள்.

ஆனால் குழாய்கள் தரையில் குடியிருப்பு பகுதியில் செல்வதை ஊரின் இளைஞர்கள் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவவிட அதிர்ச்சியான ONGC நிர்வாகம் உடனே அக்குழாய்களை அப்புறப்படுத்தி சாட்சிகளை அழிக்கும் வேலையை தொடங்கியது அதையும் கதிரை இளைஞர்கள் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் துணை மாவட்ட ஆட்சியர் இனி இங்கே ONGC நிர்வாகம் எந்த பணியும் செய்யாது சென்று உறுதி கூற மக்கள் சற்று அயர்ந்தனர்.

அந்த சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி சூன் 2 திகதி ஒரு காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 4 துணைக்கண்காணிப்பாளர்கள் 9 ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வளர்கள் வட்டாச்சியர் கிராம நிர்வாக அலுவலர்கள் இணைந்து ஊரில் முகாமிட்டு இரண்டு வீட்டிற்கு ஒரு காவலர் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களை ஊரில் அமர்த்தி மக்கள் எங்கும் நடமாடமுடியாத வகையில் கட்டுக்குள் கொண்டு வந்து அடக்குமுறையை ஏவ முயற்சி செய்தனர்.

இச்செய்தியை கேள்விப்பட்டு கதிராமங்கலத்திற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன் மற்றும் கூட்டமைப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மக்களின் நியாயத்தை அவர்களின் அச்சத்தை போக்க அதிகாரிகளிடம் பேச வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

நிலைமையை உணர்ந்த கதிராமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் கரிகாலன் ஊர் மக்கள் ஆயிரம் பேரை திரட்டி போராட முனைந்த போது அவர்களும் கைது செய்யப்பட்டனர் எல்லாம் மூன்று மணி நேரத்தில் நடந்து ஊரே அமைதியாகி ONGC வேலையை தொடங்க ஏதுவான நிலையை காவல்துறையினர் ஏற்படுத்திக்கொடுத்தனர்.

பெண்கள் குழந்தைகள் வயதானவர்கள் என்று அனைவரையும் மண்டபத்தில் அடைத்து சரியான உணவு கூட கொடுக்காமல் இரவு ஒன்பது வரை வைத்திருந்து விடுதலை செய்தனர்.

பேராசிரியர் செயராமன், வழக்கறிஞர் கரிகலான் உள்ளிட்ட கூட்டமைப்பினர் பத்து பேரின் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து குடந்தை கிளைச்சிறையில் அடைத்தனர்.

இதனால் பெருங்கோபம் கொண்ட மக்கள் சூன் 3 ம் திகதி ஊரில் உள்ள 93 கடைகளையும் அடைத்தும் சூன் 4 ம் திகதி அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடியேற்றியும் போராட்டத்தை முன்னெடுத்தனர் ஆனால் காவல்துறையும் அடக்குமுறையை குறைக்கவில்லை ONGCயும் வேலையை நிறுத்தவில்லை.

அதே நேரத்தில் வெளியில் நடமாடும் ஆண்களை அச்சுறுத்துவது இளைஞர்களை மிரட்டுவது பெண்களின் முந்தானையை இழுத்து அசிங்கப்படுத்தியது மாற்றுத்திறனாளி ஒருவரை தாக்கி வாகனத்தில் ஏற்ற ஊர் கூடி எதிர்த்ததால் அவரை விட்டனர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்க்கொள்கிறார் இப்படி அட்டூழியங்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தது.

இவ்வளவு அடக்குமுறையில் சிக்கி இருக்கும் மக்களை பார்த்து ஆறுதல் கூற சென்ற காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் பாரதிசெல்வன், அயனாபுரம் முருகேசன், திருவாரூர் கலைச்செல்வம், குடந்தை விடுதலை சுடர், மற்றும் காவரி உரிமை மீட்பு குழு தோழர்கள் கும்பகோணத்தை அடுத்த கருப்பூரிலேயே தடுத்து கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர் அந்த மூன்று நாட்களும் கதிராமங்கலம் செல்லும் அனைத்து பாதைகளும் துண்டிக்கப்பட்டு வெளித்தொடர்பற்ற தீவாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனால் சூன் 5 ம் திகதி ஊரைவிட்டு காவல்துறையும் ONGC நிறுவாகமும் வெளியேற வேண்டும் என்று கூறி மக்கள் ஊரிலிருந்து வெளியேறி முள்ளுகுடியில் கூடி போராடத்தொடங்கினர்.

சூன் 7 ம் திகதி பேராசிரியர் செயராமன் உள்ளிட்ட தோழர்களுக்கு வழக்கறிஞர்கள் தஞ்சை நல்லதுரை,  கதிரை கார்த்திகேயன் மற்றும் 25 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் குழுவின் கடுமையான வாதத்தில் நிபந்தனையுடன் கூடிய பிணையில் வெளியே வந்தனர்.

அதற்குள் ONGC நிறுவனம் தனது பணிகளை முடித்த காரணத்தால் காவல்துறையினர் திரும்ப பெறப்பட்டனர் இருந்தும் துரப்பனபணி நடக்கும் இடம் மற்றும் ஊரின் முக்கிய பகுதிகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் இருக்கின்றனர் இந்த நொடி வரை கதிராமங்கலம் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது இளைஞர்கள் மக்கள் கூடி பேச முடியாத அளவிற்கு அச்சுறுத்தப்படுகின்றனர்.

இந்த மாதிரியான அடக்குமுறை இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19 மக்களுக்கு வழங்கும் அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை எழுத்துரிமை சுமூகமாக வாழ்கின்ற உரிமை என அனைத்தையும் மறுக்கும் செயலாகும்.

இது கதிராமங்கலத்திற்கு மட்டுமான பிரச்சனையன்று காவிரிப்படுகை எங்கும் ONGC நிறுவனம் மீத்தேனோ, ஷெல் எரிவாயோ, ஹைட்ரோ கார்பனோ எடுக்க நினைக்கும் அனைத்து பகுதிகளுக்கும் நாளை இதே நிலை தான்.

அதுவும் இவர்களின் அடக்குமுறையில் ஒரு காதணிவிழா நிறுத்தப்பட்டுள்ளது, திருமணத்திற்கு மணப்பெண்ணை அழைத்து செல்ல அனுமதிக்காமல் தடுக்க மாப்பிள்ளை வீட்டார் தங்களின் குடியுரியமை ஆவணங்களை காட்டி பெண்ணை அழைத்து சென்றுள்ளனர் இது அவர்களுக்கு எவ்வளவு மனவேதனையை ஏற்படுத்தி இருக்கும்.

இதுபோன்ற செயல்களே மக்களை உணர்ச்சிக்குள்ளாக்கி அறப்போராட்டத்தின் போக்கையே மாற்றம் பெற செய்கிறது இதில் மக்களுக்கு சரியான வழிக்காட்டுதல் இல்லையெனில் வன்முறையாக மாறி அறப்போராட்டக்களம் முழுமையாக அதிகாரத்தின் கட்டுப்பாட்டிற்கு சென்றிருக்கும்.

தற்போது கூட சட்டமன்றம் கூடியுள்ள நிலையில் ஆளுங்கட்சியானது ஐயா.நம்மாழ்வரின் போராட்டத்தால் மறைந்த முதல்வர் செயலலிதா அமைத்த வல்லுனர் குழுவின் பெயரில் மீத்தேன் திட்டம் மக்களுக்கு ஆபத்தானது அதை தமிழகத்தில் செயல்படுத்த கூடாது என்று வெளியிட்ட அரசாணையை குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு இந்திய ஒன்றியத்திற்கும் ONGC க்கும் சேவகம் செய்கிறது எதிர்கட்சி இப்பிரச்சனை என்னவென்றே தெரியாததை போல நடிக்கிறது மொத்ததில் கதிராமங்கல மக்கள் அரசியல் அனாதைகளாக உள்ளனர்.

ஆட்சியாளர்கள் உதவி இல்லை அதிகாரிகளின் ஆதரவுமில்லை* யார் தான் இவர்களை காப்பது நாம் தான் காக்க வேண்டும் நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும்.

கதிராமங்கலத்தை தனித்தீவாக்கியவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்து நாம் நம்மை காத்துக்கொள்ள வேண்டும்…

ONGC க்கு எதிராக தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறித்தி தைப்புரட்சியை போன்று மண்மீட்பு புரட்சிக்கு வித்திடவில்லையென்றால் ஆறு மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் அழியும் 19 மாவட்ட மக்களின் குடிநீராதாரம் சிதையும்…

இது கதிராமங்கலத்திற்கான பிரச்சனை மட்டுமல்ல தமிழர்நாட்டிற்கான பிரச்சனை தமிழர் வாழ்விடத்திற்கான பிரச்சனை தமிழர் குடிநீருக்கான பிரச்சனை….

மனிதர்கள் குடிநீரை புட்டியில் வாங்கி குடிக்கலாம் ஆடு மாடுகள் எந்த கடையில் தண்ணீர் வாங்கி குடிக்கும்…

மேலும் வாழுமிடம் சிதைந்து போனால் சந்ததிகள் எங்கே வாழ்வார்கள்…

பிள்ளைகளுக்கு நல்ல படிப்பை தர நினைக்கிறோம் நல்ல துணி கொடுக்க நினைக்கிறோம் நல்ல உணவு கொடுக்க நினைக்கிறோம் நமது வருமானம் எதிர்காலம் அனைத்தையும் அவர்களை மையப்படுத்தியே கட்டமைக்கிறோம்…

ஆனால் அவர்கள் வாழ பாதுகாப்பான நிலம் வேண்டாமா தூய்மையான காற்று வேண்டாமா துத்தமான குடிநீர் வேண்டாமா வெறும் பணத்தையும் சொத்தையும் வைத்துக்கொண்டு வாழ்ந்து விட முடியுமா?

நமது முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக நமக்கு பாதுகாத்து கொடுத்த நிலத்தை நமது சந்ததிகளுக்கு பாதுகாப்பாக கொடுக்க வேண்டியது நமது கடமையில்லையா? நமக்காக நாம் போராடாவிட்டால் வேறு யார் வருவார்கள் நமக்காக போராட…

ஆகவே சந்ததிகள் வாழ வேண்டுமென்றால் இன்றே இணைய வேண்டும் இனம் காக்க போராட வேண்டும் மண்மீட்க களம் காண வேண்டும்.

Leave a Reply