Home>>கல்வி>>மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு
கல்விசெய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு

மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு சிபிஐ (எம்) வரவேற்பு!

சமூக நீதிக்கான போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி!!

மருத்துவப் படிப்பில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் குறிப்பிட்ட சதவிகித இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கிட வேண்டும். இந்த நடைமுறை நீண்ட நாட்களாக அமலில் உள்ளது. இத்தகைய இடங்களை ஒதுக்கீடு செய்யும் போது அந்த இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கடந்த 16 ஆண்டுகளாக இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கு ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வந்துள்ளது.

இதனை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்த நிலையில், உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என உத்திரவிட்ட அடிப்படையில் அனைத்து கட்சிகள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த சூழ்நிலையில் இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்கலாம் என இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இத்தீர்ப்பின் மூலம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலிருந்தும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் இட ஒதுக்கீடு இடம்பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. சமூக நீதியை உறுதி செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதுடன் வரவேற்கத்தக்கதாகும். இந்த நீண்ட நெடிய போராட்டத்தில் தமிழகத்திலுள்ள கட்சிகளோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து இந்த வழக்கை நடத்தி தற்போது வெற்றி பெற்றிருப்பது பெருமை அளிக்கிறது.

சமூக நீதியை உறுதி செய்திடும் வகையில் இக்கோரிக்கையினை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய நீண்ட போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கும், நீதிமன்ற நடவடிக்கைகளில் உரிய பங்களிப்பை மேற்கொண்டு உதவியவர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.


திரு. கே. பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
சிபிஐ (எம்),
தமிழ்நாடு.

Leave a Reply