Home>>சுற்றுசூழல்>>கச்சா எண்ணெய் கசிவுக்கும், பாதிப்புகளுக்கும் சி.பி.சி.எல் நிறுவனமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்!
சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடு

கச்சா எண்ணெய் கசிவுக்கும், பாதிப்புகளுக்கும் சி.பி.சி.எல் நிறுவனமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்!

டிசம்பர் 4ம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பெரும்பாலான இடங்கள் தொடர் மழை காரணமாக வெள்ளக்காடானது.

இந்நிலையில், மணலியில் செயல்பட்டு வரும் சிபிசிஎல் நிறுவனத்தில் கன மழை காரணமாக, சுத்திகரிப்பு நிலையத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த எண்ணெய் கழிவுகள் மழைநீரில் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்தது.கடுமையான துர்நாற்றமும் வீசி தொற்று ஏற்படவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வடசென்னையில் எண்ணுார், மணலி புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கச்சா எண்ணெய் கசிவு பரவியது. இதனால், ஒன்பது மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 10,000த்திற்கும் மேற்பட்ட வீடுகளில் எண்ணெய் கழிவு படிந்துள்ளது.

இதனால், குடியிருப்பு வாசிகள் வெளியேற முடியாமல் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியானது. இதுகுறித்து பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கோர்லபாடி அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

சென்னை எண்ணுாரில், மழைநீரில் கச்சா எண்ணெய் கழிவு கலந்ததற்கு, மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் என்ற, சி.பி.சி.எல்., நிறுவனமே காரணம்’ என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்ற, போர்க்கால அடிப்படையில் சி.பி.சி.எல்., நடவடிக்கை எடுக்க வேண்டும்; தங்கள் நிறுவனத்தில் எண்ணெய் கழிவு கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதனால், ஏற்படும் பாதிப்புகளுக்கு நிறுவனம் தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டது.

ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு நடத்தியதில் கொசத்தலை ஆறு முதல் காசிமேடு வரை 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு கச்சா எண்ணெய் பரவி விட்டது தெரியவந்தது. இது ஒரு பேராபத்து ஆகும். இந்த வழக்கு 9.12.2023 அன்றுமீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நிறுவனங்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம், சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்படவில்லை.வேறு ஏதாவது நிறுவனத்தில் இருந்து ஏற்பட்டிருக்கலாம். இருந்தாலும், எண்ணெய் அப்புறப்படுத்துவதற்கான உபகரணங்கள் கொண்டு கச்சா எண்ணெய் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இது அப்பட்டமான பொய். சி.பி.சி.எல் நிறுவனத்தின் உள்ளே கச்சா எண்ணெய் கழிவுகள் இருப்பு பற்றி பார்க்க ட்ரோன் பயன்படுத்தி ஆய்வு செய்ய CPCL நிறுவனம் அனுமதி மறுத்துவிட்டது. அது அனுமதிக்கப்பட்டிருந்தால், மொத்த பொய்களும் அம்பலமாகி சி.பி.சி.எல் முழுமையான குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருக்கும்.

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கச்சா எண்ணெய் கழிவுகள் கடலில் இருந்து அப்புறப்படுத்தப்படும் என்று உறுதிமொழி கொடுக்கப்பட்டிருந்தாலும், வாளி, குவளை, அட்டைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவுமே இல்லாமல், ஏராளமாக மீனவர்களையும் தொழிலாளர்களையும் பயன்படுத்தி கச்சா எண்ணெய் அள்ளப்படுகிறது. புற்றுநோய் உள்ளிட்டு பல்வேறு நோய்களால் அவர்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயம் இருக்கிறது.

இந்த கச்சா எண்ணெய் பரவலால் ஏற்படக்கூடிய அத்தனை பாதிப்புகளுக்கும் சி.பி.சி.எல் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும். ஆகும் செலவையும், பாதிப்புகளுக்கான ஈட்டு செலவையும் சிபிசிஎல் நிறுவனம் ஏற்க வேண்டும். தக்க பாதுகாப்போடு கழிவுகளை வைக்க முடியாவிட்டால் சிபிசிஎல் நிறுவனத்தை நிரந்தரமாக மூடிவிட்டு வெளியேற வேண்டும். இதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

2022 ஆம் ஆண்டு ஆந்திராவில் கிழக்கு-மேற்கு கோதாவரி மாவட்டங்களில் நிலம், நீர், காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுத்திய குற்றத்திற்காக ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு ரூபாய் 22.77 கோடி அபராதம் விதித்து, சென்னை தேசிய பசுமை தீர்ப்பாய நீதியரசர் கே. ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சைபால் தாஸ்குப்தா ஆகியோர் உத்தரவிட்டதை தமிழ்நாடு அரசுக்கு நினைவூட்டுகிறோம்.

கழிவுகள் அகற்றப்பட்டாலே போதும் என்று கருதாமல் தமிழ்நாடு அரசு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


பேராசிரியர் த.செயராமன்,
தலைமை ஒருங்கிணைப்பாளர் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு.

Leave a Reply