Home>>இந்தியா>>மேகதாது அணை விவகாரம் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினை
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

மேகதாது அணை விவகாரம் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினை

மேகதாது அணை விவகாரம் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினை: தமிழக அரசியல் கட்சிகள் வெகுமக்கள் விழித்திடுவார்களா?

கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வதில் பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது என்ற இடத்தில் தான் இந்த அணை அமைக்கப்பட உள்ளது.

இந்த அணை கட்டபடும் பட்சத்தில் காவிரி டெல்டா பகுதிகள் மேலும் தண்ணீர் பிரச்சினையை சந்திக்க வேண்டி வரும் என்பது நிதர்சனமான உண்மை. டெல்டா பகுதி மட்டுமல்ல தமிழகம் முழுவது உள்ள பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படவும் வாய்ப்புள்ளது

மேகதாது அணை கட்டும் திட்டத்தை ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. மேலும் இந்த புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அனுமதி கோரி கர்நாடக அரசு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதோடு காங்கிரஸ், பாசக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுமே கன்னட மக்களின் மொழி உணர்வை தூண்டி தமிழ் மக்களுக்கு எதிரான மலிவான அரசியலை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் இந்த விவகாரம் குறித்து சிலர் பேசி வந்தாலும் தமிழக அரசியல் கட்சிகள் ஒரணியில் திரள்வதாகவோ, ஆக்கபூர்வ நடவடிக்ககைள் தமிழகத்தில் நடைபெறுவதாக தெரியவில்லை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டபேரவை உறுப்பினர்கள் தளி டி.ராமச்சந்திரன், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து ஆகியோர் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதிகோரி இருந்தனர். ஆனால் இந்த விவகாரம் குறித்து பேசபடவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.

இந்த நேரத்தில் இங்கு ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஈழ இன படுகொலைக்கு பிந்தைய தமிழக அரசியல் வரலாற்றை பார்த்தால் எந்த ஒரு மக்கள் பிரச்சினையிலும் எந்த அரசியல் கட்சியும் வலுவான போராட்டத்தை முன்னெடுத்த மக்களை திரட்டி வென்று காட்டவில்லை மாறாக வெகுமக்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் குதித்து போராட்டம் நீடிக்கும் போது ஊடகங்கள் கவனத்தை ஈர்த்து அரசியல் கட்சிகள் வெகு மக்களின் போராட்டதை ஆதரித்து அது வெற்றி கண்டது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் கட்சிகளை பொறுத்தவரை அக்கரைக்கு இக்கரை பச்சை கதைதான். ஆகவே வெகுமக்கள் இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர வேண்டும். கர்நாடகத்தில் ஒவ்வொரு நாளும் இந்த பிரச்சினை தீவிரமடைகிறது. தமிழக ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இன்னும் சீமானை நக்கல் செய்வது, ராஜேந்திரபாலாஜி memes போடுவது, தமிழ்புத்தாண்டு தை 1, சித்திரை 1 என பட்டிமன்றம் நடத்துவது என மக்களை திசைதிருப்பி பொழுது போக்குகின்றனர்.

ஆகவே அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். வெகுமக்கள் அரசியல் கட்சிகளின் அறிவிப்புகாக காத்திருக்காமல் தன்னெழுட்சியாக களமிறங்க வேண்டும்.

தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பதால் பலன் இல்லை, காவிரி டெல்டாவில் விவசாயத்தையும் ஒட்டுமொத்த தமிழகத்தின் குடிநீருக்கான ஆதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருக்கும் உள்ளது.


செய்தி உதவி,
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply