Home>>கல்வி>>100ஆம் ஆண்டை கொண்டாடும் மன்னார்குடி நகராட்சி நடுநிலைப்பள்ளி
கல்விசெய்திகள்தமிழ்நாடு

100ஆம் ஆண்டை கொண்டாடும் மன்னார்குடி நகராட்சி நடுநிலைப்பள்ளி

1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கிய மன்னார்குடியில் உள்ள கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி சமீபத்தில் தனது 100ஆம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்த பள்ளி மன்னார்குடியின் பல நடுத்தர, ஏழைமக்களின் கேள்வியில் பெரும் பங்கு வகித்துள்ளது, வகித்து வருகிறது என்பதே உண்மை.

அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மா.தேவி அவர்கள் நம் திறவுகோல் இணையத்திற்கு தன்னுடைய பயணம், பள்ளியின் பயணத்தை பகிர்ந்து கொண்டார்கள். அவைகளை மன்னார்குடி மற்றும் பிற மக்கள் அறிந்துக்கொள்ள கீழே பகிர்ந்துள்ளோம்.


தங்களின் ஆசிரியர் பணியை பற்றி கூறுங்கள்?

1988ஆம் ஆண்டு துவங்கிய என்னுடைய ஆசிரியர் பணி இடைநிலை ஆசிரியராக 17 ஆண்டுகள் இருந்தது. அதன்பின் ஓராண்டு தமிழாசிரியர் பணி அதன் தொடர்ச்சியாக கடந்த 14 ஆண்டுகளாக தலைமையாசிரியர் பணியில் உள்ளேன்.


இப்பள்ளியில் பணியாற்றும் பிற ஆசிரிய சகோதர சகோதரிகள் பற்றி கூறுங்கள்?

இரா. புனிதவதி, சி.நீலாவதி, சந்தான கோபால. கிருஷ்ணன், இரா. இராணி, ந. அனுசுயா, செ. சாந்தி, இரா. உஷா, வே. புவனேஸ்வரி, செ. ஷியாமளா தேவி, க. மைதிலி, அ. ரேவதி என இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களின் தொடர்பு உழைப்பு, பல சவால்களுக்கு இடையில் இந்த பள்ளியை திறம்பட நிலைப்பெற செய்கிறது.


பணியில் உங்களுக்கு மன நிறைவை தருவது எது?

ஒவ்வொரு நாளும் மாணவர்களைப் பார்க்கும் போது அவர்களின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும்.

மழலைகள் கூடவே பணி செய்யும் போது இரட்டிப்பு மகிழ்ச்சி.

ஒரு நாள் பள்ளிக்கு விடுப்பு எடுத்தாலும் “நேற்று ஏன் மேடம் School க்கு வரல..
உடம்பு சரியில்லயா…
ஊருக்கு போயிட்டீங்களா..
என்று முழு அன்பும் அக்கறையும் கலந்து நம்மை நெகிழச் செய்யும் கேள்விகள்..

எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இந்த பிஞ்சுகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எல்லா நாளும் தோன்றிக் கொண்டே இருக்கும்.

அரசிடம் எதிர்பார்க்காமல் தன்னார்வ அமைப்புகள் மற்றும் எம் பள்ளி ஆசிரியர்களின் நிதி உதவியுடன் நகராட்சிப் பள்ளிகளிலேயே முதல் பள்ளியாக Smart class room 2017 ஆம் ஆண்டு தொடங்கினோம்.

அதே போல் அனைத்து வகுப்பறைகளையும் இந்த பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு Smart class room ஆக தயார் செய்ய வேண்டும் என்பதே என் தலையாய பணியாக நினைக்கிறேன்.


பெற்றோர்கள் பள்ளிக்கு ஏன் வர வேண்டும்?

பெற்றோர்கள் பள்ளிக்கு வரும் போது ஆசிரியர்களுக்கான பொறுப்புணர்வு கூடுவதோடு பலப்படுவதாகவும் நினைக்கிறேன்.

மாணவர்களின் பள்ளி இணை செயல்பாடுகள், தனி நபர் முன்னேற்றம், ஒழுக்கம் சார்ந்த தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க ஏதுவாகிறது.

பள்ளிக்கும் பெற்றோர்களுக்குமான தொடர்பை சமூகம் சார்ந்ததாகவே நினைக்கிறேன்.


இதுவரை பள்ளி மாணாக்கர்கள் பெற்றுள்ள பரிசுகள், விருதுகள் பற்றி கூறுங்கள்?

தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற கோபாலசமுத்திரம் பள்ளி மாணவி.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டமான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு முடிய மாதம் ரூபாய் 1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூபாய் 48000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் நாள் நாடு முழுவதும் நடந்த இத் தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் பங்கேற்று 6695 பேர் உதவித்தொகை பெற தேர்வு பெற்றுள்ளனர்.

மன்னார்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் பள்ளியில் எட்டாம் நிலை பயிலும் செல்வி PK. இசையாள் இத்தேர்வில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்ததை அடுத்து இன்று (24.07.20) வட்டாரக்கல்வி அலுவலர்கள் திரு.P.அறிவழகன், திரு.பாலசுப்ரமணியன், திரு.ராமசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி மா.தேவி மற்றும் பயிற்சி அளித்த ஆசிரிய ஆசிரியைகள் ஆகியோர் மாணவிக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர்.

தேசியத்திறனறித் தேர்வில் 3வது முறையாக கோபால சமுத்திரம் பள்ளி மாணவர்கள் வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது.

***

மன்னார்குடி கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவிகள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி வென்று சாதனை.

இந்த ஆண்டு காரைக்காலில் VRS இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் அகாடாமி நடத்திய தேசிய அளவிலான ஓபன் கராத்தே போட்டி காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பல பள்ளிகளில் இருந்தும், கல்லூரியில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதில் கட்டா, குமித்தே, கொபுடோ ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

பல்வேறு வயது மற்றும் எடை பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் நமது பள்ளி மாணவிகள் கார்த்திகா மற்றும் யோகப்பிரியா இருவரும் தங்கப் பதக்கங்ளையும், சுஜி வெள்ளிப் பதக்கத்தினையும் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

பரிசு பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த பயிற்றுநர்கள் திரு.ராஜகோபால், ஆகாஷ், பத்மாவதி, ஆகியோரையும் வட்டாரக் கல்வி அலுவலர்கள்.

திரு.அறிவழகன், திரு.பாலசுப்ரமணியன், திரு.இராமசாமி, ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் மற்றும் என்னுடைய தரப்பில் இருந்தும் அனைவரும் பரிசு பெற்றவர்களையும், பயிற்றுநர்களையும் வெகுவாக பாராட்டினோம்.


அரசிடம் இருந்து பள்ளிக்கான உதவிகளாக நீங்கள் எதிர்பார்ப்பவைகள் என்னென்ன?

இத்தனை பெரிய பள்ளிக்கு நிரந்தர தூய்மைத் தொழில் செய்யும் பணியாளர்கள் அரசால் நியமனம் செய்யப்படவில்லை. அதற்குரிய பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.

தற்காலிகமாக நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டதன் பேரில் தெருவை சுத்தம் செய்யும் பணியாளர்களே பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்து தருகின்றனர்.

இதற்கென அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் பணியில் தொய்வு ஏற்பட காரணமாக உள்ளது.

வருடம் ஒருமுறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது பள்ளிக்கு வண்ணம் பூசுதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேமம்படுத்துதல் போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளையும் நிலைப்பெற செய்ய உதவும்.

****

ஒவ்வொரு அரசு பள்ளியின் குறிப்பிட்ட எல்லைக்குள் புதியதாக தனியார் பள்ளிகள் துவங்க அனுமதி வழங்க கூடாது. இதை அரசு தன்னுடைய கவனத்தில் கொள்ள வேண்டும் மற்றும் செயல்படுத்த வேண்டும்.


தமிழக அரசு தரப்பில் தங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய உதவியாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?

பொருளாதார ரீதியாக கல்வித்துறை 5 நாட்களும் முட்டையுடன் கூடிய மதிய உணவு, கொண்டை கடலை, பச்சைப்பயிறு போன்ற இணை உணவுகள், 4 செட் சீருடைகள், காலணிகள், மிதிவண்டிகள், புத்தகப்பை, பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், ஜாமென்ட்ரி பாக்ஸ், கல்வி உதவித்தொகை போன்ற எண்ணற்ற உதவிகளை செய்து வருகின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை.


உங்கள் பள்ளி எதிர்க்கொள்ளும் சவால்கள்?

ஒரு அரசுப் பள்ளியை சுற்றி பல தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வழங்கி வருகிறார்கள். இதனால் எத்தனையோ அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பள்ளியின் மாணாக்கர்கள் சேர்க்கைக்கு மிக பெரிய அளவில் போராட வேண்டியுள்ளது. மாணாக்கர்கள் சேர்க்கைக்கு தனியார் பள்ளிகள் தொலைக்காட்சி, இணையம், சமூக ஊடகம் என்று பல வழிகளில் விளம்பரம் செய்து மாணாக்கர்களை சேர்க்கிறார்கள். ஆனால் அரசுப் பள்ளிகளுக்கு இதற்கு இடையில் சேர்ப்பது மிக பெரும் சவாலாக உள்ளது.

எங்கள் பெற்றோர்கள் பெரும்பாலும் மண் வெட்டுதல், கூடை முடைதல், பூப் பறித்தல் & கட்டுதல், குறி சொல்லுதல் போன்ற தினசரி சம்பளத்தின் அடிப்படையில் வேலை செய்யும் தொழில்களில் ஈடுபடுபவர்களாக உள்ளதால் பெற்றோர் ஆசிரியர்கள் கூட்டங்களில் இவர்களை சந்திக்கவே முடியாது.

இதனால் மாணாக்கர்களைப் பற்றிய தகவல்களை, அவர்களின் முன்னேற்றத்தை அவர்களிடம் கொண்டு சேர்ப்பது மிக மிக கடினமாக உள்ளது. பல நேரங்களில் இயலாமலே போய்விடுகிறது.

பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நிலை இதுவாகவே இருக்க முடியும்.

எனவே அது மாதிரியான சூழல்களில் ஆசிரியனாக மட்டுமல்லாமல் ஒரு பெற்றோராகவும் அவனது உயர்வு, தாழ்வுகளில் நாங்களே பங்கேற்கிறோம்.


இந்த நேரத்தில் நீங்கள் யாருக்கெல்லாம் நன்றி கூற விரும்புகிறீர்கள்?

நல்லாசிரியரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான திருமதி.வீ.மீரா மணியனுடன் இணைந்து பணியாற்றிய ஆசிரிய, ஆசிரியைகள்

திரு. அருணகிரி,
திருமதி. மலர்க்கொடி,
திருமதி. சுந்தராம்பாள்,
திருமதி. யோகாம்பாள்,
திருமதி. மோகனாம்பாள்,
திருமதி. சந்தோசம்,
திருமதி. உஷா,
திருமதி. அன்புச்செல்வி,
திருமதி. மனோன்மணி,
திருமதி. ரெங்கநாயகி

ஆகியோர் இப்பொழுதும் எங்கள் பள்ளியின் ஒவ்வொரு நிகழ்விலும், வளர்ச்சியிலும் தவறாது பங்குபெற்று எங்களின் வழிகாட்டிகளாக விளங்குவதோடு மட்டுமல்லாமல், அனைத்து ஆசிரியர்களின் நல்லாசிகள் எம் பள்ளி மென்மேலும் சிறப்புற காரணமாக விளங்குகிறது என்பதை உளப்பூர்வமாக பகிர்கின்றேன்.

Leave a Reply