Home>>அரசியல்>>வேலையில்லாத பட்டதாரிகளின் வேலைவாய்ப்புக் கனவை நாசப்படுத்தியதற்கு சமம்.
தமிழ்நாடு சட்டமன்றம்
அரசியல்கல்விசெய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

வேலையில்லாத பட்டதாரிகளின் வேலைவாய்ப்புக் கனவை நாசப்படுத்தியதற்கு சமம்.

வெந்த புண்ணில் எத்தனை முறைதான் வேல் பாய்ச்சுவீர்கள்?

ஆசிரியர்களின் பணிஓய்வு வயதை 58 இலிருந்து 60 ஆக உயர்த்தியது என்பதே வேலையில்லாத பட்டதாரிகளின் வேலைவாய்ப்புக் கனவை நாசப்படுத்தியதற்கு சமம். இந்த நிலையில் நடப்பு ஜூன் மாதம் பணிநிறைவு செய்யவிருக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு மேலும் ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்குதல் என்பது வெந்த புண்ணில் மேலும் வேல் பாய்ச்சுவது போலாகும்.

இந்த நடைமுறை காரணமாக நியாயமாக கிடைக்கப்பெற வேண்டிய இளையோருக்கான பதவி உயர்வு மேலும் ஓராண்டு காலம் வாய்ப்பு தள்ளிப்போகும். அதுதவிர, படித்த இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகள் மேலும் காலதாமதம் அடையும் அவலநிலை. இந்த பணி நீட்டிப்புக் காரணமாக அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமை உண்டாகும். அதாவது, புதிய பதவி உயர்வு மற்றும் வேலைவாய்ப்புகளால் உண்டாகும் மாதாந்திர செலவினத்தைக் காட்டிலும் பணி நீட்டிப்பு காலத்தில் வழங்கவிருக்கும் மாத ஊதியம் என்பது மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகம். மேலும், தற்போது ஓய்வு பெறும் நிலையில் இருப்போர் சராசரியாக 35 ஆண்டுகள் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்தவர்கள் ஆவர்.

இவர்களால் கல்விப்பணி பாதிக்கப்படக் கூடும் என்பதே ஏற்கமுடியாத வாதமாகும். பொதுவாகவே, 60 வயதைக் கடந்தவர்கள் உடலாலும் மனத்தாலும் பல்வேறு மருத்துவ காரணங்களாலும் அதிக வேலைப் பளுவை எதிர்கொள்ளவும் கற்பித்தல் பணியினைத் திறம்பட மேற்கொள்ளவும் இயலாத இயலாமையை யாரும் மறுக்க இயலாது. மேலும், பணி நீட்டிப்புப் பெற்றோர் எஞ்சிய காலம் முழுவதும் முழுப் பணித்திறம் மிக்கோராக விளங்கிடுவர் என்று கூற முடியாது. ஏனோதானோ என்று தான் மிச்ச காலம் பள்ளியில் கழியும். சக ஆசிரியர்களிடமும் பணிக்காலத்தில் காட்டிய பணிவும் தலைமைக்குக் கீழ்ப்படிதல் போக்கும் பணி நீட்டிப்பு காலத்தில் முழுமையாக இராது. இதற்கு உரிய காலத்தில் பணி ஓய்வு பெற்றுச் செல்வதே சரியும் முறையும் ஆகும்.

ஓராண்டு கால பணி நீட்டிப்பால் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள பணி ஓய்வு பெறுவோர் உரிய, உகந்த, உன்னத பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்கள் மற்றும் கணிசமான ஓய்வூதியம் பெறுவர். புதிய ஓய்வூதியத் திட்டத்தில்கீழ் பணிபுரிந்து பணிநிறைவு அடைந்தவர்களுக்கு அவரவர் தம் மாத ஊதியத்தில் ஒரு பகுதியாக சேமித்து வைத்த பங்களிப்பு ஓய்வூதிய நிதியுடன் அரசின் பங்களிப்பு நிதியையும் இணைத்துப் பெறுவது நடப்பாகும்.

அதேவேளையில், படித்த, தகுதி வாய்ந்த இளைஞர்களின் புதிய வேலைவாய்ப்பு என்னும் பெருங்கனவு நனவாவது சிதைக்கப்படுவதுடன் மேலும் ஓராண்டு காலத்திற்குத் தள்ளிப்போகும் கொடுமை மன்னிக்க முடியாத வேதனையாகும். ஊதியம் மற்றும் பணிக்காலம் அனைத்தும் ஓராண்டு தள்ளிப்போகும். அதாவது, ஓராண்டு காலம் இவர்களுக்கு மனித ஆக்க பேரிடர் காலமாகக் கழியும்.

புதிதாக வேலையில் சேர்வோருக்கு மன உளைச்சல் மிக்க தேவையற்ற தகுதி தேர்வுகள். தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மிகச் சொற்ப மாத ஊதியம். அதற்கும் ஓராண்டு காலம் காத்திருப்பு ஒவ்வொருவருக்கும் கட்டாயம் என்பது வெந்த புண்ணில் ஒரேயடியாக ஆயிரம் கூரான ஈட்டிகள் பாய்ச்சுவதற்கு ஒப்பானது. தமிழக அரசு படித்த தகுதி வாய்ந்த இளைஞர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற முன்வர வேண்டும். இதற்கு மன நிறைவுடன் பணிநிறைவு பெற்றிருக்கும் அனைவரும் ஒத்துழைப்பது மிக மிக அவசியம். ஆசிரியர் சங்கங்கள் உட்பட.


முனைவர். மணி கணேசன்,
மன்னார்குடி.

Leave a Reply