Home>>அரசியல்>>தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மீது போட்டித் தேர்வு திணிக்கப்படுகிறது.
அரசியல்கல்விசெய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மீது போட்டித் தேர்வு திணிக்கப்படுகிறது.

மாணவர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“ஏணி தோணி அண்ணாவி நாரத்தை” என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். ஏணி என்பது அனைவரையும் மேலே ஏற்றி விட்டு, அதே இடத்தில் நின்று கொண்டிருக்கும். தோணி என்பது நீர் நிலைகளை கடக்க நினைக்கும் அனைவரையும் கரையேற்றி விட்டு, தண்ணீரிலேயே கிடக்கும். அதே போல் அன்னாவி, அதாவது ஆசிரியர் தம்மிடம் படிக்க வரும் மாணவர்களை உயர்ந்த இடத்திற்கு அனுப்பி விட்டு, அவர் மட்டும் அதே இடத்தில் இருப்பார். நார்த்தங்காய் வயிற்றுக்குள் சென்றால் மற்ற உணவுப் பொருட்களை செறிக்க வைத்து விட்டு, அது மட்டும் செறிக்காமல் வயிற்றில் இருக்கும். ஆசிரியர்கள் தான் அனைவரின் உயர்வுக்கும் காரணம் என்பதை 4 வார்த்தைகளில் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள். அது தான் ஆசிரியர் சமுதாயத்தின் தனிச்சிறப்பு ஆகும்.

இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களை இந்த சமுதாயம் போற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் நாள் என்பதை ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே கொண்டாடும் நிலையை மாற்றி ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடும் நிலையை உருவாக்க வேண்டும். அது தான் நமது சமுதாயத்தை வளர்ப்பதற்காக உழைக்கும் ஆசிரியர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும். ஆனால், ஆசிரியர்களும், ஆசிரியர்களாக தகுதி பெற்றவர்களும் இன்றைய நிலையில் மகிழ்ச்சியாக இல்லை.

8 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை; தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மீது போட்டித் தேர்வு திணிக்கப்படுகிறது; குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இன்றும் அதே நிலையில் தான் வாடுகின்றனர். அவர்களின் நிலை முன்னேற்ற வேண்டும். அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற பாட்டாளி மக்கள் கட்சி போராடும்; விரைவில் கண்டிப்பாக வெற்றி பெறும்.

அனைவரையும் உயர்த்தும் ஆசிரியர்களின் வாழ்க்கை நிலை உயர வேண்டும்; அதன் மூலம் அவர்கள் மாணவர்களை இன்னும் சிறப்பானவர்களாக மாற்ற அரசு உத்வேகம் அளிக்க வேண்டும். ஆசிரியர்கள், அவர்களால் மாணவர்கள், அவர்களால் இந்த சமுதாயம் முன்னேற வேண்டும்; அந்த இலக்கை நோக்கி உழைக்க ஆசிரியர்கள் நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.


மருத்துவர் அன்புமணி ராமதாசு,
மாநிலங்களவை உறுப்பினர்,
பாட்டாளி மக்கள் கட்சி.

Leave a Reply