அறிவியல் ரீதியாக சூரிய வெளிச்சத்தின் ஆளுமை புரட்டாசி மாதம் குறைந்து காணப்படும் என சொல்லப்படுகிறது. மேலும், சூடாக இருந்த பூமி மெல்ல குளிர்நிலைக்கு மாறிவரும் இந்த காலகட்டத்தில் அதிக உடல் உழைப்பில் ஈடுபடாதவர்கள் மட்டும் சற்று அசைவ உணவை தவிர்ப்பது என்பது இந்தியா போன்ற பூமத்தியரேகைக்கு அருகில் உள்ள வெப்பம் மிகுந்த நாடுகளுக்குப் பொருத்தமாக இருக்கும். ஏனையோர் இதுகுறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
மனிதனுக்குச் சிறந்த உணவு சைவ உணவா, அசைவ உணவா என்னும் விவாதம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மனித குல வரலாற்றில் ஆதிமனிதன் பழங்கள், கிழங்குகள், காய்கள், கொட்டைகள் போன்றவற்றை சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. நெருப்பின் பயனை கண்டறிந்த பின்னர்தான் மாமிச உணவுகளை உண்பவனாக மாறினான் மனிதன் என்று அறியப்படுகிறது. நாடெங்கிலும் உணவுப்பழக்கம் மனிதருக்கு மனிதர் எப்போதும் மாறுபடும் தன்மை நிறைந்ததாக இருக்கிறது.
நவீன வாழ்க்கை முறையில் மனிதன் மூளையைக் கொண்டு அதிகம் உழைப்பது அதிகரித்து விட்டது. கூடவே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் முறைகளும் பழைய உடல் உழைப்பை எளிதாக்கி விட்டன. இந்த நிலையில் அதிக கொழுப்புச்சத்து நிறைந்த அசைவ உணவு வகைகளை பெருமளவு நுகர்வது என்பது உடலுக்குக் கேடு தரும் ஒன்றாகும். அதேவேளையில், அதிகப்படியாக உடம்பில் தேங்கும் கொழுப்பைக் குறைக்கவல்ல போதுமான உடல் உழைப்பும் உடற்பயிற்சியும் தொடர்ந்து விடாமல் மேற்கொள்ளும் நபர்கள் அசைவ உணவு வகைகளை வழக்கம் போல் எடுத்துக் கொள்வதில் தவறொன்றும் இல்லை என்பது பல்வேறு உணவியல் நிபுணர்களின் அறிவுரையாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அசைவ உணவு வகைகளில் புரதச் சத்து அதிகம் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
உடலின் இயக்கம் சீராக நடைபெறுவதற்கு புரதத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. விலங்குகளில் உள்ள புரதங்களில் அனைத்து விதமான அமினோ அமிலங்களும் இருப்பதால் அவை உடலுக்கு முழுமையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்கின்றன. ஆனால் தாவரங்களில் இருந்து கிடைக்கும் புரதங்களில் அவற்றின் அளவு குறைவாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மனித உடலில் புரத பற்றாக்குறை ஏற்படும்போது உடல் பலவீனம், கவனக்குறைவு போன்ற பிரச்சினைகளும் வளர்ச்சி தடைபடுதல் மற்றும் வளர்சிதை மாற்றமும் பாதிப்புக்குள்ளாவதாகக் காரணங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. ஆதலால், உடலுக்கு தேவையான புரதம் கிடைப்பதற்கு அசைவ உணவு சாப்பிடுவது அவசியமானது என்று வலியுறுத்தப்படுகிறது.
பொதுவாகவே, உணவுப் பழக்கவழக்கத்தில் யாரையும் கட்டுப்படுத்துவதும் கட்டாயப்படுத்துவதும் நல்லதல்ல. அதுபோல் மற்றவர்களின் உணவுப் பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தும் நோக்கும் போக்கும் மிகவும் கண்டிக்கத்தக்கது. அவரவர் உடலுக்கு ஊறுவிளைவிக்காத உகந்ததை விருப்ப உணவாக எடுத்துக் கொள்வது தவறில்லை. இதே காலகட்டத்தில் புரட்டாசி விரதம் கடைபிடிக்காதோர் வழக்கம் போல் எடுத்துக் கொள்ளும் அசைவ உணவுகளால் பல்வேறு வழக்கத்திற்கு மாறான சிரமங்களை எதிர்கொண்டதற்கு போதுமான புள்ளிவிவரங்கள் இங்கு எதுவுமில்லை. சைவ உணவையே உட்கொள்ள வேண்டும் என்பது தனிமனித உணவு சுதந்திரத்தின் மீது தொடுக்கப்படும் நாகரிக வன்முறைகளுள் ஒன்றான உணவியல் மீதான உளவியல் தாக்குதலாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாட்டைத் தவிர இந்திய ஒன்றியத்தின் பிற பகுதிகளிலும் எண்ணற்ற உலக நாடுகளிலும் புரட்டாசி மாதத்தில் காய்கறி உணவே கடைபிடிக்கப்படுகிறது என்பதற்கு போதிய சான்றுகள் காணக்கிடைப்பதாக இல்லை. எனவே, உண்ணும் உணவில் வலியுறுத்தப்படும் தீட்டு அரசியலும் சைவம் தவிர்த்த பிற உணவுகள் குறித்த பயமுறுத்தல்களும் அமைதியும் இணக்கமும் சகோதரத்துவமும் தழைத்தோங்கி வளர்ந்த தமிழ்நாடு சூழலில் தவிர்க்கப்படுதல் நல்லது.
‘என் உணவு என் உரிமை’ என்பது ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை பிறப்புரிமை ஆகும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுவதே சாலச்சிறந்தது.
—
முனைவர். மணி கணேசன்,
ஆசிரியர்,
மன்னார்குடி.