Home>>இதர>>வீட்டில் குழந்தை பெற்றால் குற்றமா?
இதர

வீட்டில் குழந்தை பெற்றால் குற்றமா?

வீட்டில் குழந்தை பிறந்ததற்கு வழக்கு :
தமிழ்நாடு சுகாதாரத் துறையின் அடாவடிச் செயல்!
================================

தனக்கு எந்த மருத்துவ முறையில் சிகிச்சையளிக்க வேண்டும் என்பதை தேர்தெடுக்கும் உரிமை ஒவ்வொரு தனி மனிதருக்கும் உண்டு. இதை சட்டமும் உறுதி செய்கிறது. அந்த தனி மனித உரிமையை, அதை உறுதி செய்யும் சட்டங்களை தமிழ்நாடு சுகாதாரத்துறை ஏன் மதிப்பதில்லை?

கடந்த 04.10.2022 அன்று மதியம் சீர்காழி ஜான் – பெல்சியா தம்பதியனருக்கு இயற்கை முறையில் வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. திருமதி. பெல்சியா கருவுற்ற நாளிலிருந்து குழந்தை பிறக்கும் வரை ஆங்கில மருத்துவமுறையை பின்பற்றவில்லை.

குழந்தை பிறந்த தகவலறிந்து செவிலியர் உள்ளிட்ட மருத்துவக் குழு ஜான் – பெல்சியா தம்பதியினரின் வீட்டுக்கு வந்துள்ளது. தாயையும் சேயையும் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து சிகிச்சையளிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார்கள். உடனே அவசர ஊர்த்தியில் ஏறுங்கள் என வற்புறுத்தியுள்ளார்கள்.

குழந்தை பிறந்து விட்டது, நஞ்சுக் கொடி வந்துவிட்டது இயற்கை முறையிலான பிரசவத்தின் எல்லா நிலைகளும் முடிந்து விட்டன. எனக்கு ஆங்கில மருத்துவ முறையில் நாட்டமில்லை. நான் ஏன் ஆரம்ப சுகாதார நிலையம் உடனே வரவேண்டும். நீங்கள் கேட்கும் எல்லா தகவல்களையும் தருகிறேன் எனக் கூறியும் கையில் உறையை மாட்டிக் கொண்டு குழந்தையை தூக்குவதற்கு உள்ளே நுழைந்துள்ளார்கள்.

குழந்தை பிறந்து நான்கு மணி நேரமே ஆன தாய்க்கு மனதளவில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டிய நேரத்தில் மிகப்பெரிய மன நெருக்கடியை கொடுத்துள்ளார்கள். தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார்கள். தேடப்படும் ஒரு குற்றவாளியை பிடிப்பது போல் நள்ளிரவில் இரண்டு அவசர ஊர்திகள், சுகாதாரத்துறை, காவல்துறை என ஒரு கூட்டமே வந்து அவர்களை மிரட்டியுள்ளது கண்டிக்கத்தக்கது.

இவ்வளவையும் செய்துவிட்டு அந்த தம்பதியினர் மேல் வழக்கும் தொடுத்துள்ளார்கள்.

இது போன்ற நிகழ்வு அடுத்த நாள் சென்னையிலும் அரங்கேறியது. கோடம்பாக்கம் ரபெல்லா – ஐசுவர்யா தம்பதியினருக்கு 06.10.2022 அன்று காலை வீட்டிலேயே இயற்கை வழியில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை கருவுற்ற நாளிலிருந்து குழந்தை பிறக்கும் வரை ஆங்கில மருத்துவ முறையை பின்பற்றவில்லை. சுகாதாரத்துறை, இரண்டு அவசர ஊர்திகள் என வந்து குழந்தை பெற்ற தாயிடமும், அவர் இணையாரிடமும் உடனே ஆராம்ப சுகாதார நிலையத்திற்கு வரச்சொல்லி மிரட்டியுள்ளார்கள். வழக்கறிஞர் தலையிட்டு உரிமைகளை பேசிய பின் மிரட்டும் தொனியை மாற்றியுள்ளார்கள். ஆனால் தொடர்ந்து அங்கேயே இருந்து இருக்கிறார்கள்.

மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளிலும் மனித உரிமை மீறல் செய்த சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..

இன்றைக்கு ஆங்கில மருத்துவத்தில் முன்னணியில் உள்ள பெருபான்மை மருத்துவர்கள் வீட்டில் பிறந்தவர்கள் தானே. இன்றைக்கு அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்கள் வீட்டில் பிறந்தவர்கள் தானே. மனிதனை தவிர எல்லா உயிரினத்திற்கும் இது இயற்கையான நிகழ்வாகதானே உள்ளது.

ஆங்கில மருத்துவம் தோன்றிய மேற்கு உலக நாடுகளில் கூட இவ்வளவு சிசேரியன் பிரசவங்கள் கிடையாது. பெரும்பான்மையாக சுகப்பிரசவம் தான் நடக்கிறது. தமிழ்நாட்டில் எடுப்பதை போல அதிக எண்ணிக்கையில் ஸ்கேன் எடுப்பதில்லை. மருந்துகள் உட்கொள்வதில்லை.

தமிழ்நாட்டில் தான் பிரசவத்திற்கும் கருவுறுதலுக்கும் தவணை முறை கடன் திட்டங்கள் அதிகமாக விளம்பரபடுத்தப்படுகின்றன. தாயும் சேயும் உயிர்களல்ல அவர்கள் மருத்துவ வணிகத்தின் விற்பனை பண்டங்கள் என்றாக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் மற்ற மாநிலகளைவிடவும் தமிழ்நாட்டில் தான் அறுவை சிசிச்சை பிரசவங்கள் அதிக எண்ணிக்கையில் நடக்கிறது.

பகுத்தறிவு என்ற சொல்லாடல் அதிகமாக பேசப்படும் இந்த தமிழ்நாட்டில் தான் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து குழந்தையை எடுக்கும் சிசேரியன் பிரசவங்கள் பெருத்துள்ளன.

சிசேரியன் பிரசவத்திற்கு பின்னான தாயின் உடல் நலப் பாதிப்புகள் முறையாக பதிவு செய்யப்படுவதில்லை. பாதிப்புகளை பதிவு செய்ய, பெண்கள் முறையீடு செய்ய அதிகாரமுள்ள தனி நிர்வாக ஏற்பாடுகள் இல்லை. இது குறித்து ஆய்வு செய்ய நிதி ஒதுக்கீடு இல்லை. பெண் உடல் மீதான இந்த வன்முறை நிறுத்தப்பட வேண்டும்.

தமிழக அரசு மரபான வீட்டுப் பிரசவம் குறித்தும், சித்த மருத்துவம், ஓமியோபதி, அக்குபங்சர் – இப்படி மாற்று மருத்துவ முறைகளில் பிரசவம் செய்ய, தெளிவான அரசாணை வெளியிட வேண்டும். அதற்கு முன் எந்த மருத்துவ முறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற மக்களுக்குள்ள உரிமைக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். உரிமை மீறல் செய்த சுகாதாரத்துறை, காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


செ. முழுநிலவன்,
பொதுச்செயலாளர்,
தமிழ் கலை இலக்கிய பேரவை

==================================
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை
==================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www. fb. com/tamizhdesiyam
ஊடகம் : www. kannottam. com
இணையம் : www. tamizhdesiyam. com
சுட்டுரை : www. twitter. com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube. com/Tamizhdesiyam
==================================

Leave a Reply