Home>>அரசியல்>>கூத்தாடிகளின் அரசியல் நாடகங்கள்
அரசியல்இதர

கூத்தாடிகளின் அரசியல் நாடகங்கள்

கூத்தாடிகளின் மோசடி அரசியல்…

நீண்ட காலமாக சினிமாவில் நடித்து அதன் மூலம் பேரும் புகழும் பெற்று அந்த பெயரை தக்க வைத்துக்கொள்ள அல்லது பயன்படுத்திக் கொள்ள அதுவரை தன் நடிப்பிற்கு ரசிகர்களாக இருந்தவர்களை தொண்டர்களாக மாற்றி மாபெரும் வெற்றி பெற்ற முதல் தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் .

அதன்பின் அவரைப் போலவே பெரும் புகழும் ,பணமும் பெற்ற நடிகர்கள் அவரைப்போலவே அரசியலில் வெற்றிப்பெற வேண்டும் என்ற வேட்கையில் அரசியல் வாழ்க்கையில் நுழைகின்றனர்.

இதுவரை பெரிய தவறு எதுவும் இல்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் எந்த கட்சியும் ஆதரிக்கலாம் எந்த கட்சியும் தொடங்கலாம். அதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.

ஆனால்,

அவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட ஒரு கட்சியை ஆதரித்தோ அல்லது அந்த கட்சியில் போய் சேர்ந்தோ அரசியல் பணி செய்தால் அதை அவர்கள் தனிப்பட்ட விருப்பமாக தான் நாம் பார்க்க முடியும். அதற்கு பேருதாரணம் இளையராஜா அவர்கள். அவர் தனக்கு பிடித்த ஒரு கட்சியை தான் நம்பும் ஒரு கட்சியை ஆதரிக்கிறார். அதன் மூலம் கிடைக்கும் வசவு, புகழ் எல்லாமே அவரையே சாரும். ஆனால் அது அவர் தனிப்பட்ட விருப்பம் என்ற முறையில் அவருடைய விருப்பத்திற்கு நாம் மதிப்பு கொடுத்தாக வேண்டும்.

அதேபோல நீண்ட காலமாக அரசியலுக்கு வருவேனா மாட்டேனா என்று ரசிகர்களை போட்டு குழப்பி இன்று அரசியலை விட்டு ஒதுங்கி நிற்கும் ரஜினிகாந்தையும் அவரின் இந்த முடிவுக்காக வாழ்த்தலாம். எவ்வளவு காலம் தான் ரசிகர்களை ஏமாற்றி பிழைப்பது?? இப்போதாவது புத்தி வந்ததே என்று அவரை வாழ்த்தலாம்.

ஆனால் இவர்களை விட எல்லாம் மிக மிக மோசமான முன்னுதாரணமாக விளங்குபவர்கள்,

விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன்.

அரசியலில் இவர்கள் இருவரும் கடந்த பாதை ஏறக்குறைய ஒரே மாதிரி தான் இருக்கிறது.
இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் திமுக அதிமுக கட்சிகளுக்கு ஒரு மாற்று சக்தியாக உருவெடுத்தவர்கள் .

இவர்களுக்கென்று தனித்த கொள்கைகள் கிடையாது. ஊழலை ஒழிப்போம் என்ற பொதுவான கருத்தை மட்டுமே வைத்துக்கொண்டு கட்சியை தொடங்கியவர்கள்.இதுவரை தமிழ்நாட்டில் ஆண்ட கட்சிகள் ஊழல்வாதிகள் என்றும் அவர்களுக்கு மாற்றாக நாங்கள் தான் ஊழற்ற நிர்வாகத்தை கொடுப்போம் என்றும் முழங்கியவர்கள்.

ஆனால் ஒன்று இரண்டு தோல்விகள் இவர்கள் பாதையை மாற்றிப் போடுகிறது.
2006 தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் முதன்முதலாக தேர்தல் அரசியல் போட்டியிட்ட விஜயகாந்த், கணிசமான வாக்குகளை பெற்றார். அதை வைத்து பின் 2009இல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார். இன்னும் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.ஆனால் வெற்றி பெற முடியவில்லை.

பின் உடனே 2011 சட்டமன்ற தேர்தலில் தான் எந்த நோக்கத்திற்காக கட்சியை தொடங்கினோமோ அந்த நோக்கத்தை முற்றிலுமாக அழித்துவிட்டு அதிமுகவோடு கூட்டணி வைத்தார். அதனால் பெரும் பலனும் பெற்றார். இறுதியில் அவர் கட்சி தொடங்கியது தங்கள் கட்சியை வளர்க்க மட்டுமே மக்களுக்கான சேவை இல்லை என்பதை நிரூபித்து விட்டார். அப்படி மக்களை இழிவாகவும் ,முட்டாள்களாவும் நினைத்த விஜயகாந்தின் கட்சி இன்று இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.

ஏறக்குறைய அதே போல ஒரு பயணம் தான் கமல்ஹாசனின் பயணம். ஊழலை ஒழிப்பேன், அதிமுக ,திமுக போன்ற கட்சிகளுக்கு மாற்று சக்தியாக வந்தவன் நான் என்று சொல்லிக்கொண்டு,2019& 2021 தேர்தலில் கிடைத்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்போது நடைபெறயுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணியை ஆதரிக்கும் நிலைக்கு போய்விட்டார்.

தாங்கள் என்ன நோக்கத்திற்காக கட்சி தொடங்கினோம் என்பதை மறந்துவிட்டு முற்றிலுமாக தன் அடிப்படையை கொள்கையை துறந்து விட்டு இவர்கள் இது போல கூட்டணி வைப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம்.
சினிமாவில் எத்தனை தோல்விகள் வந்தாலும் அது தாங்கிக் கொண்டு தொடர்ந்து சீராக பயணிக்கும் இவர்கள், அரசியலில் ஒன்றிரண்டு தோல்விகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் இவர்கள் அரசியலுக்கு தகுதியற்றவர்கள். தனிக்கட்சி தொடங்க அருகதை அற்றவர்கள் திராணியற்றவர்கள்.

இந்த முடிவுகளை ஏதோ இளையராஜா எடுத்தது போன்று அவர்கள் தனிப்பட்ட முடிவு என்று நாம் ஒதுக்கி விட முடியாது.
இளையராஜா என்றுமே யாருக்குமே வழிகாட்டியாக அரசியலில் இருந்ததில்லை.
யாருக்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்கு கேட்டதும் இல்லை. தனிக்கட்சி தொடங்கி நானே மாற்று என்று சொன்னதும் இல்லை.

ஆனால் விஜயகாந்த் கமல்ஹாசன் போன்றோர் செய்த மாபெரும் தவறு என்னவென்றால்,

காலங்காலமாக திமுக அதிமுக கட்சிகளின் மீது வெறுப்புணர்ச்சியில் இருந்தவர்கள், யாரேனும் ஒரு மாற்று அரசியல்வாதி வந்து விட மாட்டாரா என்று பலர் ஏங்கி தவித்த நிலையில், இவர்களை ஒரு மாற்றாக கருதி தான் பலர் வாக்களித்தனர்.

இவர்கள் இப்படி மக்களை மோசம் செய்தால் மக்களின் நம்பிக்கைகளை சிதறடித்தால், நாளை புதியதாக வரும் ஒரு நல்ல மாற்று சிந்தனை உள்ள கட்சியையும் மக்கள் ஆதரிக்க தயங்குவார்கள். எங்கே இவர்களும் நாளை திமுக அதிமுகவோடு கூட்டணியில் கரைந்து விடுவார்கள் என்று அவநம்பிக்கை தான் கொள்வார்கள்.
இது அவர்கள் மக்களின் உளவியலுக்கு செய்த மாபெரும் நம்பிக்கை துரோகம்.

இப்படி ஒரு கேவலமான பிழைப்பு பிழைப்பதற்கு நீங்கள் சினிமாவிலேயே தொடர்ந்திருக்கலாம். தயவு செய்து இனி ஒரு நடிகர் கட்சி ஆரம்பிக்க போறேன் என்று சொல்லி மக்களின் நம்பிக்கையை கழுத்தறுக்க வேண்டாம்.
இதுவே இறுதியாக இருக்கட்டும் இவர்களோடு கூத்தாடிகளின் அரசியல் முடிந்து போகட்டும்.

திரைக்கவர்ச்சி ஒன்று மட்டுமே அரசியலுக்கு தகுதி என்ற முட்டாள்தனமான சிந்தனையோடு வரும் இவர்களுக்கு மக்கள் நல்ல பாடத்தை புகட்டி விடுவார்கள். இனி மாற்று சிந்தனை கட்சியாக வருபவர்கள் நல்ல கொள்கைகளை முன்வைத்து மட்டுமே அரசியலுக்கு வர வேண்டும். அப்படிப்பட்டவர்களை மட்டுமே மக்கள் ஆதரிக்க வேண்டும்.

மற்றபடி இந்த கூத்தாடிகளின் மோசடி அரசியலை மக்கள் புறந்தள்ள வேண்டும்.

-மன்னை செந்தில் பக்கிரிசாமி

Leave a Reply