Home>>கவிதை>>தேர்தல்…!
கவிதை

தேர்தல்…!

இதோ –

மீண்டும் ஒரு சதுரங்க ஆட்டம்! 

சிப்பாய்களைப்  பலிகொடுத்து

ராஜாவைக் காப்பாற்றும்

சகுனிகளின் சாதுர்யம்…!

 

புழு மாட்டிய

தூண்டில்களோடும், 

தானியங்கள் தூவிய

வலைகளோடும், 

காத்திருக்கின்றனர் –

காரியவாதிகள், 

எதிர்கால வருவாயைக் கணக்கிட்டு! 

அரசியல் பங்கு சந்தையில்

முதலீடு செய்யும் அரசியல் விற்பனர்கள். 

 

பணமூட்டைப்  பந்தியில்

பறிபோன கொள்கைகள்.

தன் சொகுசு வாழ்க்கைக்காக, 

எதிலும் சமரசமான

கூட்டணிகளின் கூடாரங்கள்! 

 

படித்தும் பாமரனாய், 

தெருத் தெருவாய் கொள்கை முழங்கும்  

அறியாமை தொண்டர்கள்! 

 

மக்களின் மறதியை

மந்திரமாய் கொண்டு

துண்டுகளை துணிந்து 

மாற்றிக்கொள்ளும் இரட்டை நாக்கு

நாயகர்கள்! 

 

எல்லா பிணந்தின்னி கழுகுகளும் 

வட்டமிட்டுக் குறிவைத்துக் காத்திருக்கின்றன, 

காசுக்கு விலை போனவனின்

காய்ந்த சதைகளை நோக்கி…! 

 

இந்த ஆட்டம் முடிந்தபின் –

வழக்கம் போல…

விலை போனவன் 

விலா எலும்பு 

முறிக்கப்படும்…! 

 

சீதைகள் இங்கே –

சிதைக்கப்படுவார்கள்…! 

 

கோப்புக்கள் எதுவும் காசின்றி நகராது…! 

 

ஓட்டுப் போட்ட 

விவசாயியின்

ஒட்டிய வயிறுகளில்

ஈரத்துணிகள் சுற்றப்படும்…! 

 

இந்த நாட்டின் எஜமானர்கள் குற்றவாளி

கூண்டில் அடைக்கப்படுவர்…!

வறுமையும் ஏழ்மையும்

இங்கே சாகா வரம் பெறும்..!

 

இப்போதாவது

விடியுமா என்ற நம்பிக்கையோடு, 

வாக்கு எந்திரத்தின் முன்னால், 

வெளிச்சத்தைத் தேடுகிறது 

பாவப்பட்ட ஒரு கூட்டம்….! 

 

 — முனைவர் சா சம்பத், மன்னார்குடி.

(2050  பங்குனி மாத மின்னிதழிலிருந்து)

 

Leave a Reply