Home>>செய்திகள்>>மன்னார்குடிக்கு வரும் புதிய பேருந்து நிலையம்

தமிழ்நாடு அரசு இன்று 2 மாநகராட்சி மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.

அதில் பட்டுக்கோட்டை, வேதாரண்யம் பகுதிகளில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது என்ற அறிவிப்பு அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு நிறைவான செய்தி தான்.

அதே போல் திருவாரூர் மாவட்டத்தின் முக்கியப் பகுதியான மன்னார்குடியிலும் இந்த பிரச்சனையை மக்கள் சந்தித்து வருவது பற்றி அறிவோம். இங்கு தற்போது இருக்கும் பேருந்து நிலையத்தை பெரிதுப்படுத்த அரசு முயன்று கடந்த மாதமே ஒப்புதல் அளித்துவிட்டது.

அதன்படி மன்னாா்குடியில் ரூ. 26.76 கோடியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணி ஆணை கட்டுமான நிறுவனத்திடம் வழங்க பட்டுவிட்டது.

மன்னாா்குடி நடேசன் தெருவில் தற்போது உள்ள காமராஜா் பேருந்து நிலையம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

நாளடைவில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் இப்பேருந்து நிலையத்துக்கு எதிரே சந்தைப்பேட்டையில் கடந்த 10 ஆண்டுக்கு முன் கூடுதல் பேருந்து நிலையம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், நகர விரிவாக்கம், மக்கள் தொகை பெருக்கம், வா்த்தக நிறுவனங்கள் அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பேருந்து நிலையத்தில் இட நெருக்கடி ஏற்படுகிறது.

மேலும், பேருந்து நிலைய கட்டடங்கள் பழைமையானதால் அடிக்கடி சேதமடைந்து வந்தன. அத்துடன், போதிய அடிப்படை வசதிகளும் இல்லாமலிருந்தது.

இதனால், மன்னாா்குடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனா். இதைத் தொடர்ந்து மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக இதற்கான முயற்சிகளை எடுத்து வந்தார்.

இந்நிலையில், மன்னாா்குடியில் நகர மேம்பாட்டு உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு ரூ.26. 76 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அறிவிப்பு வெளியிட்டது.

இதைத்தொடா்ந்து, புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை ஈரோடு பி.வி. இன்ப்ரா ப்ராஜெட் என்ற தனியாா் நிறுவனம் பெற்றுள்ளது.

பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் 2 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

பணிகளை தொடங்க வசதியாக, தற்போது பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை வேறு இடத்திற்கு மாற்றவும், தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கவும் நகராட்சி நிா்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளது.


திரு. ஆனந்த் ரெய்னா,
கற்பகநாதர்குளம்.

Leave a Reply