Home>>அரசியல்>>பால் மானியக் கோரிக்கை, காதில் பூ சுற்றி, பட்டை நாமம் சாத்தி, அல்வா கொடுத்த அமைச்சர் நாசர்.
தமிழ்நாடு சட்டமன்றம்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

பால் மானியக் கோரிக்கை, காதில் பூ சுற்றி, பட்டை நாமம் சாத்தி, அல்வா கொடுத்த அமைச்சர் நாசர்.

பால் மானியக் கோரிக்கை, காதில் பூ சுற்றி, பட்டை நாமம் சாத்தி, அல்வா கொடுத்த அமைச்சர் நாசர் – பால் முகவர்கள் சங்கம் அறிக்கை.


தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் துறைக்கான தனி நிதி நிலை அறிக்கையில் பால் கொள்முதல் விலை மற்றும் ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படாமல், பால்வளத்துறைக்கென்று நிதி ஒதுக்கீடும் செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டது பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களை கடும் ஏமாற்றமடையச் செய்தது.

இருப்பினும் தமிழக நிதி நிலை அறிக்கை தாக்கலைத் தொடர்ந்து 05.04.2024 செவ்வாய்க்கிழமை அன்று பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது துறை சார்ந்த அமைச்சரான திரு நாசர் அவர்கள் அதற்கான அறிவிப்புகளை வெளியிடுவார் என மிகுந்த நம்பிக்கையோடு காத்திருந்த எங்களுக்கு அவரும் அதற்கான எந்த ஒரு அறிவிப்புகளையும் வெளியிடாமல் ஏமாற்றியிருப்பது பேரிடியாக அமைந்துள்ளது.

மேலும் திரு நாசர் அவர்கள் சட்டப்பேரவை பால் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது வெளியிட்டுள்ள 48அறிவிப்புகளில் கடலூர் மாவட்டத்தில் கால்நடை தீவன தொழிற்சாலை அமைப்பது, எருமை மாடுகள் வளர்ப்பை ஊக்குவிப்பதற்காக “எருமைக் கன்று வளர்ப்பு திட்டம்”, ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு “மின்னனு பால் அட்டை” வழங்குதல் உள்ளிட்ட ஒரு சில அறிவிப்புகளைத் தவிர மீதமுள்ள அனைத்து அறிவிப்புகளும் வெறும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளாகவும், “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பது போலவும் அமைந்துள்ளது.

ஏனெனில் பால் உற்பத்தி செய்கின்ற விவசாய பெருமக்களுக்கு அதற்குரிய செலவினங்களை ஈடுசெய்யக் கூடிய வகையில் ஏற்கனவே பாலுக்கான உரிய கொள்முதல் விலை கிடைக்காத சூழலில் நபார்டு வங்கியின் கிளை நிறுவனமான NABSanrakshan மூலம் “கடன் உத்தரவாத திட்டம்” வாயிலாக 2லட்சம் கறவை மாடுகள் வாங்கி அதன் மூலம் ஆவின் பால் பெருக்குத் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக கூறியிருப்பது பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களை மேலும், மேலும் துன்பத்திற்கே இட்டுச் செல்லும்.

அதுமட்டுமின்றி கடந்த 2021-2022, 2022-2023 நிதியாண்டுகளில் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் திரு நாசர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவை இதுவரை செயல்படுத்தப்படாத போது புதுப்புது அறிவிப்புகளை மட்டும் சட்டப்பேரவையில் வெளியிடுவதால் பால்வளத்துறைக்கு குறிப்பாக பால் உற்பத்தியாளர்களுக்கும், பால் முகவர்களுக்கும், நுகர்வோருக்கும் என்ன நன்மை நடந்து விடும் எனத் தெரியவில்லை.

குறிப்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் தாக்கல் செய்துள்ள 2023ம் ஆண்டிற்கான பால்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் 2022-2023ம் ஆண்டுக்கான பால் கூட்டுறவுகளின் தணிக்கை இயக்ககத்தின் தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவுகளோ, ஆவினின் லாப, நஷ்ட கணக்கு விபரங்களோ, அதில் உள்ள கடுங்குறைகள் குறித்த அறிவிப்புகளோ, கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 236 பேரில் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள 201பேரைத் தவிர மீதமுள்ள இணையத்தில் பணியில் உள்ள 35 பேர் மீதான நடவடிக்கை குறித்தும், 236 பேரை முறைகேடாக பணியமர்த்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் அதில் தொடர்புடைய அப்போதைய ஆவின் நிர்வாக இயக்குனர் திரு. நந்தகோபால் ஐஏஎஸ், ஆவின் திட்டமிடுதல் பிரிவு அதிகாரிகள், தேர்வுக்குழு உறுப்பினர்கள், அந்தந்த ஒன்றியங்களின் பொது மேலாளர்கள், நிர்வாக மேலாளர்கள், மாவட்டப் பதிவாளர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அறிவுப்புகளோ இடம் பெறாததும், 143வெட்டுத் தீர்மானங்களுக்கு பதில் செல்லப்பட்டதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கூறியது மிகுந்த ஏமாற்றமளிக்கக் கூடியதாக இருப்பதோடு பால் உற்பத்தியாளர்களையும், பால் முகவர்களையும் மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அதுமட்டுமின்றி 27ஒன்றியங்களின் வாயிலாக நாளொன்றுக்கு சுமார் 37லட்சம் (37,38,457) லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாகவும், 27ஒன்றியங்கள் மற்றும் இணையத்தின் வாயிலாக நாளொன்றுக்கு சுமார் 29.13லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

நாளொன்றுக்கு 27ஒன்றியங்களில் இருந்து சுமார் 37லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, அதில் தமிழகம் முழுவதும் சுமார் 29லட்சம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுமானால் மீதமுள்ள 9லட்சம் லிட்டர் பாலில் இருந்து ஆவின் நிலைப்படுத்தப்பட்ட மற்றும் நிறைகொழுப்பு பால் உற்பத்திக்கு தேவையான வெண்ணெய், SMP (Skimmed Milk Powder) ஆவின் பால் பண்ணைகளிலேயே தயாரித்துக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி ஆவின் நெய் உற்பத்திக்கு தேவையான வெண்ணையும் தயாரித்து தமிழகம் முழுவதும் ஆவின் பால், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களை தடையின்றி, தட்டுப்பாடின்றி ஆவின் நிர்வாகத்தால் விநியோகம் செய்திருக்க முடியும், அத்துடன் கூடுதலாக பல நூறு டன் பால் பவுடரும் (SMP) கையிருப்பு இருந்திருக்க வேண்டும்.

ஆனால் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக ஆவின் வெண்ணெய், நெய் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லல்பட்டு கொண்டிருந்ததோடு பால் உற்பத்திக்கான SMP மற்றும் வெண்ணெய் தேவைக்கு வடமாநிலங்களில் கையேந்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது ஏன்?, குறிப்பாக கோவை, மதுரை, ஈரோடு, திருச்சி, சேலம், நெல்லை, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஒன்றியங்களுக்கும், இணையத்தில் உள்ள அம்பத்தூர், மாதவரம், சோழிங்கநல்லூர் பால் பண்ணைகளுக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான டன் பால் பவுடர் மற்றும் வெண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டது ஏன்..? என்பது புரியாத புதிராக இருப்பதால் அதற்கான விடை அமைச்சரின் கொள்கை விளக்க குறிப்பில் இடம்பெறும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அது குறித்த எந்த ஒரு தகவல்களும் இடம்பெறாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்குவதற்காகவும், விற்பனையை அதிகரிக்கவும் 17ஒன்றியங்களாக இருந்ததை கடந்த அதிமுக ஆட்சியில் 25ஒன்றியங்களாக மாற்றியமைக்கப்பட்ட போதும் கூட எதிர்பார்த்த அளவு அதில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கி இரண்டு புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டதால் ஆவின் நிறுவனத்திற்கு கூடுதலாக நிதியிழப்பு ஏற்பட்டதே தவிர பால் கொள்முதலோ, விற்பனையோ பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏற்கனவே உள்ள பல ஒன்றியங்கள் நீண்ட வருடங்களாகவே வளர்ச்சி இல்லாமல் இருக்கும் நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை உள்ளடக்கி காஞ்சிபுரம் ஒன்றியம், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்களை உள்ளடக்கி திருவாரூர் ஒன்றியம் என தற்போதுள்ள ஒன்றியங்களை பிரித்து இன்னும் கூடுதலாக இரண்டு ஒன்றியங்களாக அதிகப்படுத்துவதால் ஆவின் வளர்ச்சியின்றி வீழ்ச்சியையே சந்திக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஏனெனில் தமிழகத்தில் முதன் முதலில் 1949லேயே உருவாக்கப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு அமைப்பான “நாஞ்சில் நாடு பால் வழங்கு சங்கம்” பின்னர் நாஞ்சில் நாடு பால் வழங்கல் கூட்டுறவு ஒன்றியமாக உயத்தப்பட்டு, 1982ல் கன்னியாகுமரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியமாக மாற்றம் கண்ட பழமை வாய்ந்த கூட்டுறவு ஒன்றியம் தற்போது வரை நாளொன்றுக்கு சுமார் 38ஆயிரம் லிட்டர் கொள்முதல் என்கிற நிலையை தாண்டவில்லை என்பதும், இதே போன்று விருதுநகர், ராஜபாளையம், ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள பால் வழங்கு சங்கங்களை இது நாள் வரை பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களாக மாற்ற முடியாத பால் பண்ணை மேம்பாட்டுத் துறைக்கு 28 துணைப் பதிவாளர்கள், அலுவலகங்கள் என்பதும், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு பல ஆயிரம் லிட்டர் பால் கொண்டு செல்லப்படும் போது அதனை ஆவின் ஒன்றியங்களுக்கு கொண்டு வரும் பணிகளை செய்யாமல் வெறும் ஒன்றியங்களை பிரித்து தங்களின் ஆதாயங்களுக்காக அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதும், மேலும் நீலகிரியில் ஏற்கனவே NDDB மூலமாக இருந்த பாலாடைக்கட்டி ஆலையை முறையாக பாதுகாக்காததாலும், போதிய பால் கொள்முதல் இல்லாததாலும் அந்த பால் பண்ணை மூடப்பட்டு விட்ட நிலையில் நீலகிரியில் மற்றொரு 1மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட பாலாடைக்கட்டி ஆலை தொடங்கப் போவதாகவும் கூறுவது “அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்தெட்டு அரிவாள்” என்கிற சொலவடையை நினைவூட்டுவதாக இருப்பதோடு, பால் உற்பத்தியாளர்களின் தாய் வீடான ஆவின் மீதும், பால்வளத்துறை மீதும் அக்கறை கொண்டோரை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் ஆவினில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தங்களின் ஓய்வூதியத்தில் 1000ம் ரூபாய் கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை நீண்ட காலமாக அரசுக்கு முன் வைத்து கொண்டிருக்கும் வேளையில் அதற்கு செவிமடுக்காமல் இணையம் மற்றும் ஒன்றியங்களில் கருணை ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்து தனி நிதி (Corpus Fund) உருவாக்கி அதன் மூலம் கருணை ஓய்வூதியதாரர்கள் இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க “ஆவின் ஓய்வூதிய குடும்ப பாதுகாப்பு நிதி” உருவாக்கப்படும் என்கிற அறிவிப்பானது “கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக” இருக்கிறது.

மொத்தத்தில் 2023-2024 பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் திரு நாசர் அவர்கள் அவரது பேச்சாலும் (05.11.2002ல் ஸ்டாலின் அவர்கள் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3.00ரூபாய் உயர்த்தி வழங்கினார், தூத்துக்குடியில் 50 லட்சம் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட பால் பண்ணை, சேலத்தில் தினசரி பால் கொள்முதல் 5.60லட்சம் லிட்டர் என்கிற நிலையில் அம்மாவட்டத்தில் 300மெட்ரிக் டன் பால் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை இது போல இன்னும் நிறைய), செய்கையாலும் அனைவரது காதிலும் பூ சுற்றி, நெற்றியில் பட்டை நாமம் சாத்தி, அல்வா கொடுத்திருக்கிறார் என்பதே 100% உண்மை.


திரு. சு.ஆ.பொன்னுசாமி,
நிறுவனத் தலைவர்,
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

அலைபேசி :- 9600131725
கட்செவி அஞ்சல் (WhatsApp) :- 9566121277
06.04.2023 / பிற்பகல் 1.30மணி.

Leave a Reply