திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உழவர் வாழ்வு உயர – வேளாண் நிலம் காக்க என்ற தலைப்பில் திருவாரூர் மாவட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர் சிறப்புக் கருத்தரங்கம் கடந்த 28/04/2023 மாலை நடத்தினர். இந்த கருத்தரங்கத்திற்கு மன்னார்குடி மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து வருகை தந்து இருந்தனர்.
திரு. மன்னை இராசசேகரன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.
தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன் “உயிர்ம வேளாண்மையும் செயற்கை அரிசியும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். காவிரி உரிமை மீட்புக்குழு பொருளாளர் ஐயா த. மணிமொழியன் அவர்கள் ” உழவர் உற்பத்திக்கு இலாப விலை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். ” வேளாண் மண்டலத்தில் தொழில் மண்டலம்” என்ற தலைப்பில் பொறியாளர் தி. செந்தில்வேலன், ஆரூர் கலைச்செல்வம், சூனா. செந்தில் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
“செறிவூட்டப்பட்ட அரிசியை தடை செய்ய வேண்டும்”, “100 நாள் வேலை திட்டத்தை வேளாண் பணிகளுக்கு விரிவு படுத்த வேண்டும்”, “உயிர்ம வேளாண் கொள்கையை செழுமை படுத்த வேண்டும்”, “நெல் குவிண்டாலுக்கு ரூ. 3000 வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகள் பேசப்பட்டது. அவை தீர்மானங்களாகவும் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக பைங்காநாடு க. மணிகண்டன் வரவேற்றார். இறுதியாக மன்னை ச. நிரஞ்சன் நன்றி கூறினார்.
இந்த கருத்தரங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளோம்.
தீர்மானம் – 1
இந்திய – தமிழ்நாடு அரசுகள், மக்களை வதைக்கும் செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டத்தைக் கைவிட வேண்டும்!
இந்திய அரசின் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு அரசு 2023 ஏப்ரல் முதல் அனைத்து ஞாயவிலைக் கடைகளிலும் விலையில்லா அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவது என்றும், குழந்தைகள் ஊட்டச்சத்து மையங்களிலும், சத்துணவுத் திட்டத்திலும் செறிவூட்டப்பட்ட அரிசியைப் பயன்படுத்துவது என்றும் முடிவு செய்து அறிவித்திருக்கிறது.
அரிசியைத் தூளாக்கி அதில் பெரஸ்-ப்யூமெரேட் என்ற இரும்புச்சத்து மருந்தையும், ஃபாலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகியவற்றையும் கலந்து மருந்துத் தொழிற்சாலைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்பட்டு 100 கிலோ சாதாரண அரிசிக்கு 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி என்ற விகிதத்தில் கலந்து வழங்கப்பட உள்ளது.
ஞாய விலைக்கடை அரிசி, சத்துணவுத்திட்டம், ஆகியவற்றைத் தொடர்ந்து நல்லெண்ணெய், கடலை எண்ணெய், பாமாயில், பால் ஆகியவற்றிலும் வைட்டமின் ஏ மற்றும் டி ஆகியவற்றைக் கலந்து செறிவூட்டல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரும்புச் சத்து குறைபாடு காரணமாக இரத்த சோகை ஏற்படுவதிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கும், கண்பார்வைக் குறைபாடு ஏற்படாமல் தடுப்பதற்கும் இந்த செறிவூட்டல் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதாக அரசு கூறுகிறது. தமிழ்நாட்டில் 100 க்கு 3 பேருக்குக் குறைவாகத்தான் இரும்புச் சத்து குறைபாடு போன்றவை உள்ளன. இதனைக் காரணமாகக் கூறி விலையில்லா அரிசி, சத்துணவு ஆகியவற்றில் செறிவூட்டப்பட்ட அரிசியை கட்டாயப்படுத்துவது தேவையற்றது.
அதுமட்டுமின்றி வறுமையின் காரணமாக ஞாயவிலைக் கடைகளையும் சத்துணவுத் திட்டத்தையும் சார்ந்திருக்கிற ஏழை எளிய மக்களின் உணவுத் தேர்வு உரிமையைப் பறிப்பதாகும்.
மேலும், இயல்பான உடல் நிலையில் உள்ளவர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியின் வழியாக தேவைக்கு அதிகமாக இரும்புச்சத்து உட்கொள்ளுவதினால் இரத்தக் கசிவு இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அண்மையில் குணமடைந்தவர்கள், டி.பி. நோய்க்கு மருந்து உட்கொள்ளுபவர்கள், சிலவகை இரத்த சோகை உள்ளவர்கள் ஆகியோர் செறிவூட்டப்பட்ட அரிசியைப் பயன்படுத்தக் கூடாது என இந்திய அரசின் உணவுத் தரக் கட்டுப்பாடு அமைப்பே எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
இந்த முக்கியமான தகவல் ரேசன் கடை ஊழியருக்கோ, பொதுமக்களுக்கோ தெரியாத நிலையில், அதுவும் வறுமையின் காரணமாக விலையில்லா அரசியைச் சார்ந்திருக்கும் நிலையில் அம்மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஏற்கெனவே, 2020 செப்டம்பர் முதல் 2022 மார்ச் முடிய திருச்சி மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தில் அறிமுகத் திட்டமாக (Pilot Scheme) செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டது என 28-1-2023 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி வெளியீடு தெரிவிக்கிறது.
விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் 2022 டிசம்பர் முதல் மதிய உணவுத் திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டதாக இதே அறிவிப்பு கூறுகிறது. இத்திட்டத்தின் பயனாக இரும்புச் சத்து குறைபாடு நீங்கியிருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா அல்லது இதன் காரணமாக மக்களுக்கு ஏதாவது நோய்கள் தாக்கியிருக்கிறதா என்று எந்த ஆய்வும் செய்து முடிவுகள் வெளியிடப்படவில்லை. இன்னுஞ் சொல்லப்போனால் இம்மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசிதான் வழங்கப்பட்டது என்பது கூடத் தெரியாது.
ஆனால் மறுபுறம், ஊட்டச்சத்து வல்லுநர்களும், மருத்துவ அறிஞர்களும் செறிவூட்டப்பட்ட அரிசி அனைவருக்கும் கட்டாயமாக வழங்கப்படும்போது அதை உட்கொள்ளுபவர்களுக்கு தொடர்ந்த வயிற்றுப் போக்கு, வயிற்று அழற்சி, ஒவ்வாமை போன்ற நோய்களும் உட்செரிக்க முடியாத வைட்டமின்கள் காரணமாக மிகை வைட்டமின் ஏற்றம் (hypervitominosis) என்ற சமநிலைப் பிறழ்வும் ஏற்படுவதாக எச்சரிக்கிறார்கள். (காண்க : அனுரா குர்பாத் மற்றும் ஹரீஸ் சச்தேவ் ஆய்வுக்கட்டுரை – டைம்ஸ் ஆஃப் இந்தியா 16-10-2021, சயந்தன் பேரா ஆய்வுக்கட்டுரை தி மிண்ட்.இன் 30.9.2021).
இன்னொருபுறம், செறிவூட்டப்பட்ட அரிசிதான் வழங்கப்பட வேண்டும் என்ற நிலை வரும் போது சிறு அரவை ஆலை உரிமையாளர்கள், சிறு பால் உற்பத்தியாளர்கள், உழவர்கள் ஆகியோருக்கு சந்தை இழப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது.
எனவே, செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டத்தை இந்திய – தமிழ்நாடு அரசுகள் கைவிட வேண்டும் என இந்த சிறப்புக் கருத்தரங்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!
தீர்மானம் – 2
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரிப்படுகையில் தொழில் திட்டங்கள் கூடவே கூடாது!
காவிரிப்படுகையிலிருந்து மீத்தேன் உள்ளிட்ட ஐட்ரோ கார்பன் வளங்களை எடுப்பதற்கு எதிராக, ஐயா நம்மாழ்வார் அவர்கள் தொடங்கி வைத்த மிகப்பெரும் உழவர் போராட்டத்தின் காரணமாக, இன்றைக்கு காவிரிப்படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவ்வப்போது காவிரிப்படுகையில் தொழில் திட்டங்கள் அறிவிக்கப்படுவதும், பின்னர் உழவர்களின் எதிர்ப்பு காரணமாக அவை தள்ளி வைக்கப்படுவதும் நடக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசின் நிலக்கரிச் சுரங்கத்துறை ஏல அறிவிப்பு, காவிரிப்படுகையிலுள்ள கடலூர் – அரியலூர் – தஞ்சாவூர் – திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் கிழக்கு சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி மற்றும் வடசேரி ஆகிய மூன்று வட்டாரங்களில், எந்தெந்த கிராம விளை நிலங்களுக்குக் கீழே எவ்வளவு பழுப்பு நிலக்கரி இருக்கிறது, எவ்வளவு பரப்பளவில் இருக்கிறது, அவற்றையெல்லாம் தோண்டி எடுத்துச் செல்ல தொடர்வண்டிப் பாதை எவ்வளவு அருகில் உள்ளது என்பது உட்பட பல விவரங்களை அறிவிப்பாக வெளியிட்டது.
வடசேரி பழுப்பு நிலக்கரி வட்டாரம் (Vadaseri Lignite Block) எனப் பெயரிட்டு, அப்பகுதியில் நிலக்கரி திட்டத்திற்காக 66 ஆழ்துளை கிணறுகளும், அரியலூர் மாவட்டம் – உடையார்பாளையம் வட்டம் மைக்கேல்பட்டி நிலக்கரி வட்டாரத்தில், இத்திட்டத்திற்காக 19 ஆழ்துளை கிணறுகளும் அமைத்து இதற்காக ஆய்வுகள் செய்யப்பட்டன. இதில், நிலக்கரி மற்றும் மீத்தேன் எடுக்கத் தனியார் நிறுவனங்கள் ஏலம் கேட்க அழைப்பு விடுத்தது இந்திய அரசின் சுரங்கத்துறை! ஏலம் கேட்கக் கடைசி நாள் 2023 மே 30 என்று அறிவிக்கப்பட்ட நிலையில், காவிரி உரிமை மீட்புக் குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இதனைக் கடுமையாக எதிர்த்த பின், அந்த ஏல அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், காவிரிப்படுகையில் சுரங்கத் திட்டங்கள் முழுமையாகக் கைவிடப்படவில்லை.
இன்னொருபுறம், கடந்த 2023 மார்ச் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற வரவு செலவுக் கூட்டத் தொடரில், காவிரிப்படுகையில் 1000 கோடி ரூபாய் செலவில் வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்தும் தொழில்களுக்கான பெருந்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இது உழவர்களுக்கானது என தமிழ்நாடு அரசு சொல்லிக் கொண்டாலும், இதனால் பெரும் பயன்பெறப்போவது உழவர்கள் அல்ல – டாடா போன்ற பெருங்குழும நிறுவனங்களே ஆகும்!
தற்போது தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் செறிவூட்டப்பட்ட அரிசிக்கான தனியார் பெருங்குழும ஆலைகளும், பிற பொருட்களும் இங்கு தயாரிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே, காவிரிப்படுகையை முழுமையாக வேளாண் மண்டலமாகவே வைத்திருக்க வேண்டுமே தவிர, அதை இன்னொரு தொழில் மண்டலமாக ஆக்கக் கூடாது! தமிழ்நாடு அரசு, தன் போக்கைத் திருத்திக் கொண்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரிப்படுகைக்குள் தொழிற்சாலைகளையோ, சுரங்கத் திட்டங்களையோ எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது என இச்சிறப்புக் கருத்தரங்கம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது!
தீர்மானம் – 3
நூறு நாள் வேலைத் திட்டத்தை வேளாண் பணிகளுக்கு விரிவுபடுத்துக!
இந்திய அரசின் ”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்” கீழ் ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணி, குளம் வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பொதுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் கிராமங்களைச் சேர்ந்த உழவுப் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலை வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டம் பல்வேறு இடங்களில் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதில்லை.
ஏழைகளின் வாழ்வை முன்னேற்றும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டிய இத்திட்டத்தின் நோக்கத்தை, சரியாகப் புரிந்து கொள்ளாமல், மக்களை உழைப்பிலிருந்து வெளியேற்றும் வகையில் இத்திட்டம் தவறான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக, வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காத நிலையும் ஏற்படுகிறது.
இதனை சரி செய்யும் வகையில், கேரளாவில் தனியார் வேளாண் விளைநிலங்களில் நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்களை வைத்து பணிகளை மேற்கொள்ளவும், அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட தனியார்கள் அரசிடம் வழங்கும்படியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், தமிழ்நாட்டிலும் நூறு நாள் திட்ட பணியாளர்களை கொண்டு வேளாண் நிலங்களில் வேளாண் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்சிறப்புக் கருத்தரங்கம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது!
தீர்மானம் – 4
நீர்நிலைகளை நிலங்களை விழுங்கும் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்!
தமிழ்நாடு அரசு, கடந்த 21.04.2023 அன்று, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளில், தீய விளைவுகளை ஏற்படுத்தும் சூழல் அழிப்புச் சட்டம் ஒன்றை அவசரகதியில் நிறைவேற்றி இருக்கிறது. “தமிழ்நாடு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்புச் சட்டம் – 2023” (Tamilnadu Land Consolidation for Special Projects Act, 2023) என்ற ஒன்றை குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றி இருக்கிறது.
100 ஏக்கருக்கு மேல் நிலம் தேவைப்படும் சிறப்புத் திட்டங்களுக்கு, அதிலுள்ள மக்கள் பயன்பாட்டுக்கான வாய்க்கால்கள், ஓடைகள், குளம், ஏரி ஆகியவற்றையும் சேர்த்து தனியாருக்கு வழங்கலாம் என்று இச்சட்டம் கூறுகிறது. அந்த நீர் நிலைகளை அத்தனியார் நிறுவனங்களே பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் என்றும் இச்சட்டம் நம்பிக்கை தெரிவிக்கிறது.
உண்மையில், பெருங்குழும நிறுவனங்கள் நீர்நிலைகளையும் சேர்த்து, விழுங்கிக் கொள்ளலாம் என்பதற்கு அரசு வழங்கும் உரிமம் தான் இச்சட்டம்!
எடுத்துக்காட்டாக, பரந்தூர் பகுதி மக்கள் கிட்டத்தட்ட ஓராண்டாக விமான நிலைய விரிவாக்கத்திற்கு தங்கள் விளை நிலங்களையும், அங்கே பாசனத்திற்கும் குடிநீருக்கும் பயன்படும் நீர்நிலைகளையும் ஆக்கிரமிப்பதை எதிர்த்து வாழ்வா, சாவா போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்து ஊர்களில் இருந்துகூட இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் கூடிவிடாமல், காவல்துறை முற்றுகையில் அக்கிராமங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்தக் கொடிய அடக்குமுறைக்கும், இருட்டடிப்புக்கும் இடையிலும் அம்மக்கள் விடாப்பிடியாக மண் காப்புப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம், இதுகுறித்து ஆய்வுக் குழு அமைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தமிழ்நாடு அரசு, இப்போது நிறைவேற்றி இருக்கிற நில ஒருங்கிணைப்புச் சட்டத்தின் வழியாக பரந்தூர் பகுதியிலுள்ள நீர் நிலைகள் உள்ளிட்ட நிலங்களைப் பறிப்பதற்கான சூதான திட்டம் தீட்டியிருக்கிறது.
இதுமட்டுமின்றி, இனி எந்த நிலப்பறிப்பையும், நீர்நிலை ஆக்கிரமிப்பையும் “சிறப்புத் திட்டம்” என்ற பெயரால், தமிழ்நாடு அரசின் உதவியோடே தனியார் பெருங்குழுமங்கள் செய்ய முடியும்.
நீர்நிலைகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கென்று தமிழ்நாட்டில் செயலிலுள்ள எந்தச் சட்டமும் இனி இவ்வாறான சிறப்புத் திட்டப் பகுதிகளில் செல்லாது. நீர்நிலைகளை பாழாக்கி, சுற்றுச்சூழலைக் கெடுத்து, புவி வெப்பமாதலைக் கூடுதலாக்குவதற்கு இவ்வாறான சட்டங்களைப் போட்டுக் கொண்டே சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு தனி ஆய்வுக்குழு அமைத்திருப்பதாக “திராவிட மாடல்” மு.க. ஸ்டாலின் அரசு நாடகமாடுகிறது.
மக்கள் வாழ்விடத்தையும், வாழ்வுரிமையையும் நில உரிமையையும் பறிக்கிற, சுற்றுச்சூழலை நாசமாக்கிற இச்சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என இச்சிறப்புக் கருத்தரங்கம் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!
தீர்மானம் – 5
தமிழ்நாடு அரசு, பயிர்க் காப்பீட்டு நிறுவனம் உருவாக்கி தமிழ்நாட்டு உழவர்களை அதில் இணைக்க வேண்டும்!
உழவர்கள் கணக்குப் பார்த்தால், உழக்கு கூட மிஞ்சாது என்பார்கள். அந்தளவிற்கு பெரு நட்டத்திலும் உழவர்கள் வேளாண் தொழில் செய்து மக்களுக்கு உணவளித்துவரும் பெருங்கடமை ஆற்றி வருகின்றனர். இதில் இலாபம் ஏதுமில்லை எனினும், குறைந்தபட்சம் உழவுத் தொழிலில் போட்ட முதலீட்டையாவது எடுத்துவிட வேண்டுமென உழவு செய்பவர்களே அதிகம்.
அரசாங்கம், உழவர்களின் விளை பொருட்களுக்கு இலாப விலை அளிக்காத நிலையில், பேரிடர்களின் போதும், பருவமழைப் பொய்ப்பின்போதும் பயிர்க்காப்பீட்டுத் திட்டமே உழவர்களுக்குக் கை கொடுக்கிறது. அதிலும், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் வெளிப்படைத்தன்மையற்ற முறையில் காப்பீட்டைக் குறைக்க பல்வேறு வழிகளைக் கையாள்கின்றனர்.
எனவே, உழவர்களின் இந்தத் துன்பங்களைக் கணக்கில் கொண்டு, தமிழ்நாடு அரசு தானே ஒரு பயிர்க் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடங்கி, அதில் தமிழ்நாட்டு உழவர்களை பெருவாரியாக இணைக்க வேண்டும் என இச்சிறப்புக் கருத்தரங்கம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது!
தீர்மானம் – 6
உயிர்ம வேளாண்மைக் கொள்கையை செழுமையாக்கி தமிழ்நாடு அரசு அதனை தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும்!
தமிழர்களின் மரபான வேளாண்மையான “இயற்கை வேளாண்மை”யை ஐயா கோ. நம்மாழ்வார் அவர்கள் தமிழ்நாடெங்கும் பரப்பி, பல்வேறு இடங்களில் இயற்கை வேளாண்மை விரிவாவதற்குக் காரணமாக விளங்கினார்.
தற்போது, இதனை அரசின் திட்டங்களோடு இணைத்து மேலும் விரிவாக்க வேண்டுமெனக் கோரி, தமிழர் மரபு வேளாண்மைக் கூட்டியக்கம் தொடர்ந்து செயலாற்றி, போராட்டங்கள் நடத்திய நிலையில், தமிழ்நாடு அரசு இயற்கை வேளாண்மைக் கொள்கையை முதல் முறையாக வெளியிட்டுள்ளது.
“அங்கக வேளாண்மைக் கொள்கை” என்ற வடமொழிச் சொல்லாடல்களில் தான் இந்த முதல் உயிர்ம வேளாண்மைக் கொள்கையை தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும், எடுத்த எடுப்பிலேயே ஆரிய பராசர முனிவர் உயிர்ம வேளாண்மைக்கு முன்னோடி என்பதுபோல் சித்தரித்திருப்பது மகத் தவறானது. கீழடியும், அதற்குப் பிந்தைய சிந்துவெளியும் தமிழர்கள் தான் முன்னோடியான வேளாண்மைச் சமூகம் என்பதற்கு சான்று சொல்லிக் கொண்டிருக்கும் போது,
தி.மு.க. அரசின் உயிர்ம வேளாண்மைக் கொள்கை இவ்வாறு தவறான வரலாற்றைச் சொல்வது வருத்தமளிக்கிறது.
இந்த வேளாண்மைக் கொள்கை உழவர்களை உயிர்ம வேளாண்மையில் ஈடுபடுமாறு விழிப்புணர்வூட்ட பரப்புரை ஆவணமாக இருக்கிறதே அன்றி, அரசுப் பொறுப்பெடுத்துக் கொண்டு உயிர்ம வேளாண்மையை வளர்ப்பதற்கான எந்தவகை உறுதியான திட்டத்தையும் முன்வைக்கவில்லை!
“பசுமைப் புரட்சி” என்ற பெயரால் திணிக்கப்பட்ட இரசாயன வேளாண்மையின் தீமைகளை எடுத்துக்காட்டியுள்ள இந்தக் கொள்கை அறிக்கை, இரசாயன வேளாண்மை உழவர்கள் உயிர்ம வேளாண்மைக்கு மாறுவதற்கான எந்தவகை ஊக்குவிப்புத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை.
தமிழ்நாட்டில் உழவர்களின் சராசரி நிலவுடைமை 1 எக்டேர். அதாவது, இரண்டரை ஏக்கர் ஆகும்.
மிகப் பெரும்பாலான உழவர்கள் 5 ஏக்கருக்கும் குறைவான நிலமுள்ளவர்கள்தான். மீண்டும் மீண்டும் இரசாயன வேளாண்மையில் ஈடுபட்டு ஈடுபட்டு கடனாளியாகிக் கொண்டிருக்கும் இவர்கள், உயிர்ம வேளாண்மைக்கு மாறுவதன் தேவையை உணர்ந்தே இருக்கிறார்கள்.
ஆயினும், இராசயன வேளாண்மையிலிருந்து உயிர்ம வேளாண்மைக்கு மாற விரும்பும் உழவர்கள் மண்ணின் நுண்ணுயிரிகளை மீட்டு, மண்ணின் உயிர்ப்புத் தன்மையை மீட்பதற்குக் குறைந்தது மூன்றாண்டுகள் தேவைப்படுகின்றன. இரசாயன வேளாண்மையிலிருந்து உயிர்ம வேளாண்மைக்கு மாறும் இந்த மூன்றாண்டு காலத்தில், எந்தவகை இலாபத்தையும் இவ்வுழவர்கள் பெற முடியாது.
அதனால்தான், தொழில் வழியாகவோ வேலை வாய்ப்பின் வழியிலோ வேறு வருமானம் இல்லாத உழவர்கள் உயிர்ம வேளாண்மைக்கு மாறத் தயங்குகிறார்கள். இந்த சிறு நடுத்தர உழவர்களுக்கு ஏற்படும் இழப்பை முழுமையாக ஈடுசெய்யக் கூடிய வகையில், சிறப்புப் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தையோ நேரடி நிவாரணத் திட்டத்தையோ அரசு செயல்படுத்தாமல் பெரும்பாலான உழவர்களை உயிர்ம வேளாண்மைக்கு மாற்ற முடியாது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசின் உயிர்ம வேளாண்மைக் கொள்கையில் ஒரு செய்தியும் இல்லை.
தமிழ்நாட்டின் ரேசன் கடைகளிலும், மருத்துவமனைகளிலும், அரசு விடுதிகளிலும் குறிப்பிட்ட விழுக்காடாவது உயிர்ம வேளாண்மை விளைபொருள்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அதற்குத் தகுந்தாற் போல உயிர்ம வேளாண்மை விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். உறுதியான சந்தை வாய்ப்பை அதுதான் ஏற்படுத்தும்.
தெலுங்கானா மாநில அரசு, திருப்பதி லட்டு விற்பனை உள்ளிட்ட ஆலய உணவு வழங்கல்களில் உயிர்ம வேளாண்மை விளைபொருட்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது. ஒரிசா, சார்க்கண்ட் அரசுகள் இரசாயன வேளாண்மையிலிருந்து உயிர்ம வேளாண்மைக்கு மாறும் உழவர்களுக்கு நேரடி ஊக்குவிப்புத் தொகை வழங்குகின்றன. இவற்றையெல்லாம் தமிழ்நாடு அரசு, முன்னெடுத்துக்காட்டாகக் கொண்டு கொள்கையில் சேர்க்க வேண்டும்.
நகர்ப்புற மகளிர் குழுக்களையும், உயிர்ம வேளாண்மை உழவர் குழுக்களையும் ஒருங்கிணைத்து, அதற்குரிய செயலிகளின் வழியாக சந்தை வாய்ப்பை விரிவுபடுத்தித் தர வேண்டும்.
நாட்டின ஆடு – மாடு வளர்ப்பையும், கோழி – தேனீ வளர்ப்பையும் ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தாலும், அதற்கான உறுதியான செயல்திட்டங்கள் அறிவிப்பில் இல்லை.
ஆடு – மாடு மேய்க்கும் கிடைக்காரர்கள் அவற்றில் கிடைக்கும் சாண எருவை நம்பியே வாழுகிறார்கள். சாண எரு தான் உயிர்ம வேளாண்மைக்கு முதன்மையான இடுபொருள். கிடைக்காரர்களையும், உயிர்ம வேளாண்மை உழவர்களையும் ஒருங்கிணைக்க நிறுவன வழிப்பட்ட திட்டங்களுக்கான எந்த அறிவிப்பும் இக்கொள்கை அறிக்கையில் இல்லை.
தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு நிறுவப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது. மாறாக, தற்சார்பான உயிர்ம வேளாண்மை வாரியம் அமைப்பது தான், உயிர்ம வேளாண்மையை நிலைத்த வழியில் கொண்டு செல்ல உதவி செய்யும்.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உயிர்ம வேளாண்மை (அங்கக விவசாயம்) கொள்கை அறிக்கையில், மேற்சொன்ன திருத்தங்களையும் மேற்கொண்டு, ஒருங்கிணைந்த வகையில் உயிர்ம வேளாண்மையை முன்னெடுத்துச் செல்ல உறுதியாகச் செயல்பட வேண்டுமென காவிரி உரிமை மீட்புக் குழு, இச்சிறப்புக் கருத்தரங்கம் வாயிலாகத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது!
தீர்மானம் – 7
தமிழ்நாடு அரசு, 12 மணி நேர வேலைக்கான சட்டத்திருத்தத்தை நிறுத்தி வைத்திருப்பது போதாது! முழுமையாகக் கைவிட வேண்டும்!
ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தூக்கம் என்றிருப்பதே சரியென வகுத்து, அதற்காக சட்டங்களும் திட்டங்களும் போட்டு மனித சமூகம் முன்னேறிக் கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் 6 மணி நேர வேலை சட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு காலத்தை பின்னோக்கி இழுத்துச் சென்று, தொழிலாளர்களின் உழைப்பைக் கசக்கிப் பிழியும் வகையில் 12 மணி நேர வேலைச் சட்டத்தை செயல்படுத்தத் துணிந்தது. இதனைக் கண்டித்து, உழைப்பாளர்களும், சனநாயக ஆற்றல்களும் கடுமையாகக் குரல் கொடுத்தபின், அச்சட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நிறுத்தி வைத்திருப்பது வரவேற்கத்தக்கதே எனினும், அச்சட்டத்தை முழுவதுமாகத் திரும்பப் பெறுதலே சரியான நடவடிக்கையாகும். எனவே, தமிழ்நாடு அரசு 12 மணி நேர வேலை உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் தொழிற்சாலை சட்டத்தின் 65A என்ற சட்டத்திருத்தத்தை முற்றிலும் திரும்பப் பெற வேண்டும் என இச்சிறப்புக் கருத்தரங்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!
—
செய்தி உதவி:
திரு. ச. நிரஞ்சன்,
மன்னார்குடி.