Home>>திரை விமர்சனம்>>பர்ஹானா – திரை விமர்சனம்
திரை விமர்சனம்

பர்ஹானா – திரை விமர்சனம்

 

 

பர்ஹானா – பெரிதாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்குகளில் வந்த இந்த படம் பெரிய அளவில் மக்களை ஈர்க்கவில்லை. இசுலாமிய மத நம்பிக்கைக்கு விரோதமான படம் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டு சிலரால் எதிர்க்கப்பட்டது.

ஆனா சமீபத்தில் Sony Liv OTT தளத்தில் வெளியாகியுள்ளது. உண்மையிலேயே ஒரு மிகச்சிறந்த படம், பெரும்பான்மையான மக்களால் கவனிக்கப்படாமல் போனது வருத்தமே.

அரைச்ச மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் ரொம்ப ரொம்ப புதிதாக ஒரு கதை. இதுவரை இப்படி ஒரு கதை களத்தில் எந்த ஒரு படமும் வந்ததாக ஞாபகம் இல்லை .

ஆச்சாரமான ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் உள்ள ஒரு குடும்பத் தலைவி பர்ஹானா குடும்ப வறுமைச் சூழ்நிலை காரணமாக, தன் அப்பாவின் எதிர்ப்பையும் மீறி தன் கணவனின் ஆதரவோடு ஒரு கால் சென்டர் வேலைக்கு செல்கிறாள்.அன்றாடம் நமக்கு கிரெடிட் கார்டு வாங்க சொல்லி, வங்கிக்கடன் வாங்கச் சொல்லி வரும் அந்த அழைப்புகளைச் செய்யும் அந்த வேலையைத்தான் செய்கிறார். அதில் ஓரளவுக்கு நல்ல வருமானம் வருகிறது. அவர்கள் குடும்ப நிதி நெருக்கடியும் ஓரளவுக்கு சரியாகிறது.

ஆனால் இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவல் அவளை அதே நிறுவனத்தில் உள்ள வேறு ஒரு வினோதமான வேலைக்குத் தள்ளுகிறது. அதாவது friends chat எனப்படும் ஒரு app உள்ளது. அது விருப்பப்பட்டவர்கள் பணம் செலுத்தி ஏதேனும் ஒரு பெண்ணிடம் பேசிக் கொள்ளலாம்.

அவ்வாறு பேசும் வாடிக்கையாளர்களிடம் அதிக நேரம் பேசும் பெண்களுக்கு அவர்கள் பேசும் நேரத்தை பொறுத்து சம்பளம் அதிகம் கொடுக்கிறார்கள்.

அப்படி ஒரு வேலைக்கு தான் அவர் சொல்கிறார். ஆரம்பத்தில் ரொம்ப கடினமாக இருக்கிறது. ஆனாலும் குடும்பச்சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்த வேலையை தொடர்கிறார். அப்பொழுது அவளுக்கு வரும் ஒரு அழைப்பு மூலமாக ஏற்படும் தொடர்புகள் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் அவற்றை எப்படி சமாளித்தார் என்பதுதான் படத்தில் கதை.

பொதுவெளிக்கு வரும் பெண்களுக்கு சில நேரத்தில் பல பிரச்சனைகள், பாலியல் தொந்தரவுகள் இருக்கின்றன. அதே நேரத்தில் சில சமயம் பெண்களும் மனம் தடுமாற வாய்ப்புள்ளது. அப்படி ஒருவேளை அது போன்று ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டால், குடும்பத்தையோ கணவனையோ நினைத்து பயந்து மேற்கொண்டு தவறு மேல் தவறு செய்து தன் வாழ்க்கையை அழித்துக் கொள்ளாமல் தைரியமாக உங்கள் கணவரிடம் மனம் விட்டு பேசி உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் என்ற அற்புதமான கருத்தை முன் வைத்திருக்கிறது இந்த படம்.

கதையாகவும் கதைக்களமாகவும் ரொம்ப புதுமையாக உள்ள படம் திரைக்கதை வாயிலாகவும் படம் ரொம்ப விறுவிறுப்பாகவே உள்ளது. படம் முழுக்கவே ஒரே நேர்கோட்டில் நூல் பிடித்தாற் போல ஒரு அற்புதமான திரைக்கதையை அமைத்திருக்கிறார் நெல்சன் வெங்கடேசன்.

ஐஸ்வர்யா ராஜேஷ் படம் முழுக்கவே ஒற்றை ஆளாக தாங்கிப் பிடித்து இருக்கிறார். அதேபோல படத்தில் செல்வராகவன் நடிப்பும் மிகச் சிறப்பாக உள்ளது. அவருடைய குரல் அவருக்கு ரொம்ப பெரிய பிளஸ். சுருக்கமாக சொன்னால் இந்த படத்தில் அவருடைய குரல் ரொம்ப சிறப்பாக நடித்திக்கிறது.

ஜித்தன் ரமேஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் கணவனாக வருகிறார். நடிப்பதற்கு அவருக்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும் படத்தைப் பார்த்த அனைத்து பெண்களுக்கும் அவரைப் போன்ற ஒரு கணவர்தான் நமக்கு இருக்க வேண்டும் என்ற உணர்வு நிச்சயம் ஏற்படும்.

படத்தின் கதை இசுலாமிய குடும்பத்தில் நடப்பதாக இருக்கிறது மற்றபடி இஸ்லாமிய மத நம்பிக்கைக்கும் இதற்கு எந்த சம்பந்தமும் இல்லை. இன்றைய சமூகச் சூழ்நிலையில்
அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படம் தான்.குறிப்பாக பெண்கள் தவறவே விட கூடாத ஒரு நல்ல படம்.

குறை என்று பார்த்தால்,

என்னதான் படத்துக்கு தேவையான காட்சியாக இருந்தாலும் படத்தின் முதல் காட்சியை இந்த அளவுக்கு ஆபாசமாக எடுத்து இருக்க வேண்டியதில்லை. அனைவரும் முகம் சுளிக்காமல் பார்க்க வேண்டிய இந்த படத்திற்கு ஒரு திரூஷ்டி பொட்டாக அமைந்துள்ளது. படுமோசமான ஆபாச காட்சி. இந்த காட்சியை நாகரீகமாக எடுத்து இருக்கலாம்.

மற்றபடி, ஒரு நல்ல படத்தை கொடுத்ததற்காக வாழ்த்துகள் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்💐💐💐


எழுத்து:
மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply