Home>>அரசியல்>>உள்ளூர் சந்தைதான் உலக சந்தை
அரசியல்உலகம்கட்டுரைகள்தமிழ்நாடு

உள்ளூர் சந்தைதான் உலக சந்தை

நம்மூரில் நாம் பிழைக்க முடியாது என்று சொல்லி தான் வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்கிறோம். ஆனால் எப்படி பன்னாட்டு நிறுவனங்கள் நம்மூரில் வந்து பணம் ஈட்டுகிறார்கள்? அவர்களின் பொருளை ஏன் சிறு சிறு கடைகளில் கூட விற்கிறார்கள் என்பதை உணர்ந்தால் நாம் நம் சந்தையை கொண்டே பிழைக்கலாம் வெளியூர், வெளிநாட்டிற்கு செல்ல அவசியமில்லை.

அவர்களின் கண்களுக்கு தெரிந்த சந்தை, நம் கண்களுக்கு ஏன் தெரியாமல் போனது ஏன்???

பொருளாதாரம்
தனது உழைப்பு தனது வருமானம் என்றாகிவிட்டது. தனிமனிதனுக்கு இது சரி, ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு இது உகந்ததா…

தனிமனித வருமானமும் நாட்டின் பொருளாதாரம் தொடர்வண்டி தண்டவாளத்தை போல கட்டமைக்கப்படுவதால் இந்த சிக்கலில் சிக்கி நாட்டின் பொருளாதாரம் சிதைகிறது. நாட்டின் பொருளாதாரத்தை சமன் செய்வதாக நினைத்து தேவையில்லாத வரி விதிப்புகள் தனிமனித வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அவர்களின் பொருளாதாரமும் சிதைகிறது.

பொருளாதாரம் என்பது என்ன? வெறும் இலாபம் பார்ப்பதா இல்லை செலவை சமன் செய்து கூடுதலை பார்ப்பதா? இரண்டுமே இல்லையே.

குறைந்த முதலீடு, தேவையான உழைப்பு, பரவலான சந்தைகள், கனிசமான இலாபம், ஏற்றத்தாழ்வற்ற பணப்புழக்கம், எளியவர்கள் வரியவர்களாக வேண்டும், வரியவர்கள் நிலைப்பெற வேண்டும் இது தானே பொருளாதாரமாக இருக்க வேண்டும்.

இதில் நமது மண்ணில் எது குறைகிறது? அனைத்துமே இருப்பதால் தானே. பாடினான் பட்டுக்கோட்டையான் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையையேந்த வேண்டும் அயல்நாட்டில் ஒழுங்காய் பாடுபடு வயற்காட்டில் உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில் என்று பாட்டிற்கு கைத்தட்டிவிட்டு கருத்தை கைக்கழுவியதால் இன்று அயல்நாட்டிலும் அயல்நாட்டு நிறுவனங்களிலும் அடிமையாக உழைத்து அவர்களை செழிப்பாக வாழவைத்து நாம் செதிலாக தேய்ந்து கொண்டிருக்கின்றோம்.

இதற்கு அடிப்படை காரணம் நமது உள்ளூர் வியபாரம், உழவை சார்ந்த வாழ்வியல், நெசவு தொழில், மீன்பிடி தொழில் என்று நமது தற்சார்பை இழந்தது முக்கிய காரணமாக உள்ளது.

உதாரணத்திற்கு நாட்டின் முதுகெலும்பு என்று உழவை கூறிவிட்டு நிமிர்ந்து நிற்க தூணாக இருக்க வேண்டிய முதுகெலும்பை உடைக்கும் அனைத்து வேலையுமே நடக்கின்றது. வாழ்வியலாக வளமாக இருந்த உழவு இன்று உளவால் உலர்ந்து வரண்டு வறுமையில் அழிகிறது.

உழவிற்கு உகந்த மிகப்பெரிய நிலப்பரப்பு உள்ளது. தேவைக்கு அதிகமான மக்கள் சக்தி உள்ளது. மாடுகள் வீட்டின் செலவாகவும் இருந்தது அதன் சாணம் உரமாக இருந்தது போக்குவரத்துக்கும் பயன்பட்டது. அதனால் ஏற்படுகின்ற செலவும் குறைந்தது.

மேலும் நீரியல் மேலாண்மையில் மேலோங்கி இருந்ததால் ஆறு, ஏரி, குளம், வாய்க்கால் மற்றும் கிணறுகள் என்று நீரை பாய்ச்சியும் சேமித்தும் வைத்திருந்ததால் அதற்கான செலவும் குறைவு. மொத்தத்தில் முதலீடு குறைவு இலாபம் அதிகமாக இருந்தது, அதனால் அன்று ஒரு மூட்டை நெல்லை விற்று ஒரு பவுன் தங்கம் வாங்கினார்கள். ஆனால் இன்று வளர்ச்சி நவீன முறை என்று கூறி உழவின் முதலீடு அதிகமானது அதே நேரத்தில் விற்கும் விலையும் குறைந்ததே பேரிழப்பு. இதனால் பத்து மூட்டையை விற்றாலும் ஒரு பவுன் தங்கம் வாங்க முடிவதில்லை.

அன்று உழவில் வரும் இலாபத்தை அவர்கள் ஆற்றில் விடவில்லை விடப்போவதுமில்லை. அதை கொண்டு வீடு கட்டுவது வண்டி வாகனங்கள் வாங்குவது துணிமணிகள் எடுப்பது என்று தான் செலவு செய்ய போகிறார்கள். இதனால் அது சார்ந்த தொழிலும் அத்தொழிலை சார்ந்த தொழிலாளர்களுமே வளர போகிறார்கள்.

அதே போன்று சோடா நிறுவனம், கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், முறுக்கு என்று பரவலாக பல தொழில்கள் சிறப்பாக செயல்பட்டு உள்ளூர் பொருளாதாரம் வலுவாக இருந்தது. அதை சார்ந்து பல குடும்பங்கள் பொருளாதார தன்னிறைவில் மகிழ்ந்திருந்தனர்.

ஏன் இவ்வளவு, ஒரு தெருவுக்கு இரண்டு தையல்காரர்கள் இருந்தார்கள். இந்த நொடி சிந்தித்து பாருங்கள் உங்களுக்கு மிக அருகில் தையல் கடை எங்குள்ளதென்று நினைவுக்கு வராது, அந்தளவிற்கு ஆயத்த ஆடைக்கு முக்கியத்துவும் கொடுத்துவிட்டோம்.

ஆயத்த ஆடைகள் தயாரிப்பது, நமது மண்ணில் பயன்படுத்துவது, நமது நீரை எடுத்துக்கொள்வது, நமது மின்சாரத்தை இத்தனையையும் நாம் இழந்தாலும் இலாபம் என்னவோ அன்னிய நிறுவனங்களுக்கு தான். இந்த இலாபத்தை அடைய அவர்கள் செய்வது விளம்பரம் மற்றும் அவர்கள் நிறுவனத்தின் முத்திரை இரண்டு மட்டுமே இந்த இரண்டையும் செய்ய அனுமதித்ததால் தெருவுக்கு இரண்டு குடும்பங்கள் அழிந்தது.

ஏன் இவ்வளவு மனிதனின் அடிப்படை தேவையான தண்ணீரை கூட விற்பனையாக்கி காசாக்குகிறான், வேடிக்கை தான் பார்க்கிறோம். நமது நீர்வளம் சிதைகிறது என்ற எந்த குற்றவுணர்வும் இல்லை அதேநேரத்தில் நிலத்தடி நீரின் கருவறையான ஆற்று மணலையும் அழிக்கிறார்கள். அதைப்பற்றியும் கவலை இல்லை இதெற்க்கெல்லாம் என்ன காரணம் இருக்க முடியும்?

இப்பொருளாதாரம் நம்மை மட்டுமே சுற்றியே பரிமாற்றம் நடந்ததால் அனைத்து தொழில்களின் வளர்ச்சியும் அதை சார்ந்த குடும்பங்களின் வளர்ச்சியும் மேலோங்கி இருந்தது.

இப்படி வளமாக கடந்த வாழ்க்கை, வளர்ச்சி, நாகரீகம், தூய்மை என்ற பெயரில் நமது வீட்டு வரவேற்பரையில் இருந்த தொலைக்காட்சி பெட்டியின் கண்ணசைவில் நாம் செயல்பட்டதன் விளைவு நமது உள்ளூர் தயாரிப்புகளை விடுத்து கவர்ச்சியான பன்னாட்டு விடத்தை தேடிச்சென்றோம்.

அவன் காற்றையும் அடைத்து வைத்து தனது வர்த்தகத்தை பெறுக்கி கொண்டான் இதன் விளைவாக உள்ளூர் சந்தை அழிந்தது தொழிலாளர்களின் பொருளாதாரம் சிதைந்தது.

இதன் விளைவாக அன்னியர்களிடமும் அவர்களின் அடிமைகளிடமும் வணிகத்தை இழந்து இடப்பெயர்வு கூலிக்கு வேலை என்று பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாகி போனோம். அவர்கள் நமது நிலத்தை அழித்து இயற்கை வளங்களை சிதைத்து காற்றை மாசாக்கி நமது அபரிவிதமான உழைப்பையும் சுரண்டி அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்கின்றனர். அதே நேரத்தில் நமது மண்ணின் மக்களின் அனைத்து கட்டுமானங்களையும் அழித்தனர்.

போர்களத்தில் எதிரியை எதிர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவனின் பலத்தை சிதைப்பதும் அவனது ஆயுதத்தை அபகரிப்பதும் அதை கொண்ட தன்னை பலமாக்கி கொள்வதும் முக்கியம். அதை தான் பன்னாட்டு நிறுவனங்கள் நம் மீது போர் தொடுத்து கொண்டிருக்கின்றனர் நாமும் இதை உணராமல் அவர்களின் வலையில் விழுந்து வலுவிழந்து வருகின்றோம்…

உலக நாடுகள் ஏன் இங்கு வலைவிரிக்கின்றன. இங்கு தான் அதிக அளவில் நிலப்பரப்பு உள்ளது. தேவையான நீர் கிடைக்கிறது. தனது சூழலை பாதுகாத்துக்கொள்ளும் அளவிற்கு விழிப்புணர்வு இல்லை. தடையின்றி மின்சாரம் கிடைக்கிறது. தரக்கட்டுப்பாடு என்ற ஒன்று கிடையவே கிடையாது. மக்களின் அழிவை விட நிறுவனத்தின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதிவிலக்குகள் பொதுவிதியாக உள்ளது. இது அனைத்தையும் கடந்து அளவுக்கு அதிகமான மக்கள் சக்தி உள்ளது…

ஆக அவர்களின் முதலீட்டு செலவு குறைகிறது. அதிக இலபாம் கிடைக்கிறது இதுவே முக்கிய காரணிகளாக அமைகின்றது.

இந்த நிலை உருவாக காரணம் என்ன சற்று ஆழமாக சிந்தித்தால் அன்றைய காலங்களில் எவரும் வெறும் இலாப நோக்கில் மட்டுமே தொழில் செய்யவில்லை தரத்தின் அடிப்படையில் நம்பகத்தனத்தோடு தொழில் செய்தார்கள்.

அன்று துணி எடுக்க வேண்டுமா முதலியார் கடையில் எடுக்கலாம் தரமாக இருக்கும். எண்ணெய் வேண்டுமா செட்டியாரிடம் வாங்கலாம் தூய்மையாக இருக்கும். பலசரக்கு சாமன் வாங்க வேண்டுமா அண்ணாச்சி கடையில் வாங்கலாம் நன்றாக இருக்கும்.

இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு கடை என்று அவரவர் சிந்தனைக்கு பழக்கவழக்கங்களுக்கு தகுந்தாற்போல் வர்த்தகம் செய்தனர். தொழில் நன்றாக இருந்தது சமூக ஒற்றுமையும் உதவும் மனப்பாங்கும் விட்டுக்கொடுக்கும் இயல்பும் இருந்தது.

வட்டித்தொழில் கூட நடவுக்கு பணம் பெற்று வட்டியோடு அறுவடை முடிந்து கடனை அடைத்தனர். இன்றும் இது நடக்குமா? நடக்காது?? அந்தளவிற்கு நம்பகத்தன்மை சிதைக்கப்பட்டுள்ளது. இதனால் வட்டி கூட குட்டிப்போடுது. குட்டிக்கு வட்டி போடுறான் அந்த அளவிற்கு சிந்தனை சிதைந்துள்ளது

இதன் விளைவாக இன்று முதல் போட்டவரெல்லாம் முதலாளி, விளம்பரம் செய்பவரெல்லாம் வியாபாரி. யார் எவர் என்ற எந்த அடையாளமும் இன்று இல்லை. பொருளின் தரமும் தேவையில்லை, விலை மலிவாக இருக்கிறதா என்ற சிந்தனை மட்டுமே.

இதனால் எவரும் எங்கேயும் தொழில் செய்யலாம். ஆனால் உண்மையாக நேர்மையாக மட்டும் செய்துவிட கூடாது. அந்தளவிற்கு பகுத்து பார்க்க கற்றுத்தருகிறேன் என்ற பெயரில் அனைத்தையும் கேள்வியாக்கி விடைகளை தேட வைத்துவிட்டனர். விடைத்தேடும் இடைவெளியில் அன்னியனும் தொழில் செய்ய ஏதுவான சூழலை உருவாக்கிவிட்டனர்.

இதன் விளைவாக மண்ணின் மைந்தர்களோ இதையெல்லாம் பயன்படுத்த தவறி அன்னியர்களிடம் தாரைவார்த்ததால் அன்றாட வாழ்விற்கு தகிடுதத்தோம் போடுகின்றோம்.

இதிலிருந்து மீள ஒரே வழி இன்றைய மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் இருந்து மாற்றி உள்ளூர் சந்தைகளை கைப்பற்றும் தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்குவதே.

அதாவது ஒரே இடத்தில் உருவாக்கப்படும் அதிகமான உற்பத்தி அல்ல, அதிகமான இடங்களில் உருவாக்கப்படும் மிக அதிகமான உற்பத்திகள், அதை சந்தைப்படுத்த தெளிவான முகவர்கள், எளிதில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விளம்பரங்கள்.

இவை தான் அன்னிய நிறுவனங்களை வாழவைக்கின்றன. இந்த அறியாமையை நாம் அகற்றினால் இயலாமை ஒழியும். பிறகு தெளிவாக திட்டமிட்டால் நமது பொருளாதாரம் நமது கையில்.

இவையெல்லாம் முடியுமா என்ற சந்தேகம் நெல் முனையளவு கூட நமக்கு தேவையில்லை. இந்த வசதிகள் அனைத்தும் நம்மை சுரண்டுபவர்களுக்கு கிடைக்கிறது என்றால் நமக்கும் கிடைக்கும்.

அவர்களுக்கும் நமக்கும் ஒரே வேறுபாடு தான் உள்ளது. அவர்களுக்கு அமைத்து கொடுக்க இங்கே அடிமைகள் உள்ளனர். நாம் நாமாகவே அமைத்து கொள்ள வேண்டும். நாம் தான் அதை அடைய முயற்சி செய்ய வேண்டும்.

அதுவும் இன்றைக்கு அளவுக்கு அதிகமான இளைஞர்கள் படித்து முடித்து சரியான வேலைகள் இல்லாமல் தவறான வழியை நோக்கி பயணிக்கிறார்கள். இவர்களுக்கான சரியான வடிகாலாக சில வழிமுறைகளை வகுக்கவேண்டும் அதுவே அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து வாழ்வியல் முறை மாற வழிவகுக்கும்.

இப்படி ஒரு வளமான பொருளாதாரம் அமைந்தால் மட்டுமே தன்னுரிமை பெற்ற இனமாக உலக அரங்கில் உயர வேண்டும்.

நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், நாம் இழந்து கொண்டிருப்பது நமது பொருளாதாரத்தை மட்டுமல்ல, நமது வாழ்வியலை, நமது பண்பாட்டை, நமது பாரம்பரியத்தை, நமது சுற்றுச்சூழலை, நமது பூமியின் கீழுள்ள வளங்களை என அனைத்தையும் இழக்கின்றோம்.

அனைத்தையும் மீட்டெடுக்க நமது பொருளாதாரத்தை மீட்போம், அன்னிய சுரண்டல்களை ஒதுக்கிய தற்சார்பு பொருளாதாரத்தை வளர்த்து தன்னுரிமை பெற்ற தமிழ்நாட்டை கட்டமைப்போம்…

பொருளாதாரமே
வாழும் பொருளின் ஆதாரம்…

உள்ளூரில் உள்ள கடைகளில் என்று உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் அதிகமாக விற்கப்படுகிறதோ அன்றே நாமும் உள்ளூரில் இருக்க முடியும். இல்லையென்றால் நம் பொருள்களை அகற்றியது போல் நம்மையும் விரைவில் அகற்றுவார்கள். அதற்கான வேலை ஏற்கனவே நடைபெற தொடங்கிவிட்டது.

விழித்து கொண்டோரெல்லாம் பிழைத்து கொண்டார்கள்…. நாம்???


– இராசசேகரன்,
மன்னார்குடி

(2048 ஆவணி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)

Leave a Reply