Home>>கட்டுரைகள்>>இந்திய கலாச்சாரம் வெறும் கட்டுக்கதையா ?
கட்டுரைகள்

இந்திய கலாச்சாரம் வெறும் கட்டுக்கதையா ?

உலக அளவில் மிகவும் பெருமையாக பேசப்படும் கலாச்சாரத்தில் இந்தியாவும் ஒன்று. வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்த பாரதம் என்று மார்தட்டிக்கொள்ளும் மக்கள் நாம். கலாச்சாரம் என்பது மக்கள் எப்படி வாழ்கிறார்கள், அவர்களுடைய மொழி, நம்பிக்கைகள், உணவு, உடை, மரபுகள் மற்றும் பல விசயங்கள். இந்திய கலாச்சாரத்தின் இந்த கூறுகள் மேற்கத்திய மோகத்தால் பாதிக்கப்படுகின்றன. அப்படி பார்த்தால் இந்திய கலாச்சாரம் வெறும் கட்டுக்கதையா ?

வெளிநாட்டினர் நமது பண்டைய சிற்ப கலையும் அதில் புலப்படும் காமசூத்ர ரகசியங்களை ஆய்வு மேற்கொண்டு போற்றி புகழ்கின்றனர். காமசூத்ராவும் வேதங்களுக்கு சமமான ஒன்றுதான். பாலியல் ஒரு தடை அல்ல. அது புதிய வாழ்க்கையை உருவாக்கும் ஒரு செயல். வேதங்களைப் போல் இதுவும் புனிதமானது. இன்றைய சமூக சூழலில் நம் பிள்ளைகளுக்கு பாலியல் கல்வி கட்டாய கல்வியாக்கும் சூழ்நிலை நிலவுகிறது. சிறுவயதில் அவர்களுக்கு மலம் கழிப்பதை (potty training) கற்று கொடுக்கும் நாம் பாலியல் கல்வியை கற்றுத்தர தயங்குகிறோம். ராணி லட்சுமி பாய், சரோசினி நாயுடு, கஸ்துரிபாய், கமலா நேரு, இந்திரா காந்தி போன்ற பல வீர மங்கைகளின் கதைகளை சிறுவயது முதல் பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டும். பெண்கள் வீரமானவர்கள், ஆணுக்கு சமம் என்பதை புரியவைக்க வேண்டும். இன்றைய தலைமுறையில் பெண்கள் பல துறைகளில் சாதனை புரிகின்றனர். ஆனாலும் 81% பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

நமது நாட்டின் வளங்களை நாமே சூறையாடி அயல் நாட்டினருக்கு விற்கிறோம். மணல் திருட்டில் தொடங்கி, மதத்தின் பெயரில் நதிகளை அழித்து, சிலைகளை கடத்தி நம் நாட்டிற்குள்ளேயே ஒரு அந்நிய சமூகத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். இது நம் பொது உடமை என்பதை மறந்து சுயநலவாதிகளாக செயல்படுகிறோம். இந்த நிலை நீடித்தால் நம் பிள்ளைகளுக்கு தேசிய வளங்கள் என்று சுட்டிக் காட்ட ஒன்றும் மிஞ்சாது. நாளைய தலைமுறைக்கு வெறும் புகைப்படத்தில் மட்டுமே நமது இந்திய வளங்களை காட்டும் சூழ்நிலை வரும். அது மிகவும் வேதனையான ஒன்று!

வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்தது பாரதம் என்ற கூற்று கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. இனம்,மதம், சாதி என பல்வேறு கூறுகளை எடுத்துக்காட்டி சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோம். சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியின் பொன்மொழி வெறும் ஏட்டில் மட்டுமே இருக்கிறது. பள்ளி படிப்பில் தொடங்கி திருமணம் வரை இனம், மதம்,சாதியின் வேட்டை தொடர்கிறது.

மாற்றம் ஒன்றே மாறாதது. ஒரு கலாச்சாரத்தில் மாற்றங்கள் வருவது இயற்கையே. ஆனால் நம்முடைய மாற்றம் நாளைய தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும். இந்தியனின் புகழும் கலாச்சாரமும் நம் கையில் உள்ளது. அதை கட்டிக்காக்கும் பெரும்பொறுப்பு நமக்கிருக்கிறது. பிறநாட்டினர் நம் கலாச்சாரத்தை என்றும் போற்றி புகழ வேண்டும் என்ற கர்வம் நம்முள் இருக்கவேண்டும். நம் கலாச்சாரம் வெறும் கட்டுக்கதையாய் போய்விடகூடாது. இந்திய கலாச்சாரத்தை மெருகேற்றி அதன் அழகை பிரகாசிக்க முயல்வோம்.

ஸ்ரீப்ரியா சுந்தர்,   USA
(2050 மாசி மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply