Home>>வரலாறு>>வரலாற்றின் சுவடுகளில் ராஜமன்னார்குடி
வரலாறு

வரலாற்றின் சுவடுகளில் ராஜமன்னார்குடி

பகுதி 1 : மன்னார்குடியின் சுங்கசாவடி ‘சாரிகைக் கோட்டை’

தமிழகத்தின் பண்டைய வரலாற்றிலும் சரி, நிகழ்கால அரசியல் வரலாற்றிலும் சரி, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஊராக நம் மன்னார்குடி திகழ்ந்து வருகிறது. பிற்கால சோழர் காலத்தில், முக்கியமாக, முதலாம் இராஜாதிராஜ சோழர் காலத்தில் நமது மன்னை மாநகர் மிகுந்த சிறப்புடன், வளம் செறிந்த ஊராக இருந்ததற்கு பல்வேறு வரலாற்று சான்றுகள் காணக்கிடைக்கின்றன. 

செண்பகாரண்ய க்ஷேத்திரம், வண்டுவராபதி, தட்சிண துவாரகை, வாசுதேவபுரி போன்ற பல்வேறு புராண பெயர்களால் அழைக்கப்பட்ட நம் மன்னார்குடி, முதலாம் இராஜாதிராஜ சோழர் காலத்தில், நான்கு வேதங்களும் கற்றுணர்ந்த பிராமணர்களுக்கு தானமாக கொடுக்கப்பட்டு, அதன் காரணமாக ‘இராஜாதிராஜ சதுர்வேதிமங்கலம்’ என்று அழைக்கப்பட்டது. ‘சதுர்வேதிமங்கலம்’ என்றால் நான்கு வேதங்களிலும் தேர்ச்சிப் பெற்ற பிராமணர்களுக்கு இறையிலியாக (எவ்வித வரியும் இன்றி) வழங்கப்படும் ஊர் ஆகும்.

இது மட்டுமின்றி, நமது மன்னைக்கு உள்ள இன்னொரு சிறப்பு, சோழர் காலத்தில் ‘தனியூர்’ என்ற சிறப்பு அந்தஸ்த்தைப் பெற்றிருந்தது. தனியூர் என்றால், ஒவ்வொரு வளநாட்டிலும் அரசு சிறப்பாக அமைக்கும் ஊர்; இது கூற்றத்தின் தலைமை ஊராகவும் செயல்படும். சோழர் கால கல்வெட்டுகளில் மன்னார்குடி, ‘சுத்தவல்லி வளநாட்டு தனியூர் இராஜாதிராஜ சதுர்வேதிமங்கலம்’ என்று குறிப்பிடப்படுகிறது. நமது இராஜகோபால சுவாமி கோவிலில், வாசுதேவ பெருமாள் சந்நிதியின் வடக்குப்புற கோஷ்ட சுவற்றில் உள்ள கல்வெட்டுகளில் இந்த பெயர் காணப்படுகிறது.

சோழர் காலத்தில் மட்டுமின்றி, அதற்கு பிறகு வந்த பிற்கால பாண்டியர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், பிரிட்டிஷார்களின் ஆட்சியிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஓர் ஊராகவே நமது ஊர் திகழ்ந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

தற்பொழுது நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடி அமைத்து அரசு சுங்கம் வசூலிப்பதை போல், அக்காலத்திலும் சுங்கச்சாவடிகள் இருந்துள்ளன. சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் சுங்கச் சாவடிகள் வழக்கில் இருந்துள்ளன. அவ்வாறாக, விக்கிரம பாண்டியன் என்ற பாண்டிய மன்னனின் காலத்தில், நமது ஊரில், ‘சாரிகைக் கோட்டை’ என்ற பகுதியில் சுங்கசாலை ஒன்று செயல்பாட்டில் இருந்துள்ளது. இந்த தகவல், மன்னை ஜெயம்கொண்டநாதர் கோவிலின் முன்மண்டப வாயிலின் நிலையில் உள்ள, பாண்டியர் கால கல்வெட்டுகளில் உள்ளது.

சாரிகைக் கோட்டை என்பது தற்போது அண்ணாமலையார் கோவில் அமைந்திருக்கும் பகுதி என்பதும் கல்வெட்டு தகவல்களின் மூலம் அறிய முடிகிறது. இந்த சாரிகைக் கோட்டை, பாண்டியர் காலத்தில் வணிகர்கள் பாதுகாப்பாக தங்கி செயல்பட்ட பகுதியாகும். சாரிகைக் கோட்டையில் வணிகர்கள் தங்கியிருந்த இடம், ‘புவனேகவீரன் மடிகை’ என்றும், ‘விக்கிரம பாண்டியன் மடிகை’ என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த வணிகக் குழுவினர் ‘பதினெண் விஷயம்’ என்ற பெயரால் அறியப்பட்டுள்ளனர். இந்த ‘பதினெட்டு விஷயம்’ வணிகக் குழுவினரும், நகரத்தாரும் இணைந்து ஜெயம்கொண்டநாதர் கோவில் திருப்பணிக்கு பல்வேறு பொருளுதவி செய்துள்ளனர்.

இந்த சாரிகைக் கோட்டை பகுதியில் புகுந்தோ, புகாமலோ செல்லும் ஒவ்வொரு பாக்குப் பொதிக்கும், ஒரு உழக்கு பாக்கு சுங்கமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மிளகுப் பொதி ஒன்றுக்கு ஒரு உழக்கு மிளகும், துணி மூட்டை ஒன்றுக்கு மாகாணி பணமும் சுங்கமாக வசூலிக்கப்பட்டுள்ளன. இப்படி சுங்கமாக வசூலிக்கப்பட்டவை, ஜெயம்கொண்டநாதர் கோவிலில் உறையும் இறைவனின் கறியமுதுக்கும், அக்கோவிலின் திருப்பணிக்கும் பயன்படுத்தப்பட்டு வந்த செய்தி, அக்கோவிலில் உள்ள பாண்டியர் கல்வெட்டுகள் மூலம் புலனாகிறது.

இவ்வாறாக நம் மன்னார்குடியில், பாண்டியர் காலத்தில் சுங்கம் வசூலிக்கும் சுங்கச் சாலையாக ‘சாரிகைக் கோட்டை’ பகுதி செயல்பட்டு வந்துள்ளது.

மன்னையின் வரலாறு தொடரும்….!

எழுத்தாக்கம் : அபிராமி பாஸ்கரன், மன்னார்குடி.
தகவல் உதவி : திருவாரூர் மாவட்ட தொல்லியல் வரலாறு.

(2050 மாசி மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply