Home>>கட்டுரைகள்>>கொரோனா சூழ் உலகு!
கட்டுரைகள்தமிழ்நாடு

கொரோனா சூழ் உலகு!

உலகமே இக்கட்டான தருணத்தில் தன்னை ஆட்படுத்திக்கொண்டுள்ளது. நாகரிகம், வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை புறந்தள்ளி அனைத்தையும் செயற்கையில் உருவகப்படுத்திய மனிதன் இன்று தன்னை தற்காத்துக்கொள்ள இயலாது மற்றவர் மீது பழிசுமத்தி கொண்டிருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான்!.

அறிவியல் என்ற பெயரில் ஏவுகணைகளையும், துப்பாக்கிகளையும் உருவாக்கியவன் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க மறந்துவிட்டான். உலகின் வல்லரசு என பீத்திக்கொண்ட நாடுகள் தொடங்கி உலகின் சுகாதார தலைசிறந்த நாடுகள் வரை கோட்டைவிட்ட மருத்துவ தன்னிறைவு என்பதை இன்று கேள்விக்குறியாக்கிவிட்டது கொரோனா!.

சாதிமத, இனப் பாகுபாடின்றி ஏழை பணக்காரன் என்ற பொருளாதார பாகுபாடின்றி வீதியெங்கும் பிணக்குவியலாக குவிந்து கிடக்கும் நிலைமையை உலகமெங்கும் உருவாக்கியுள்ளது வைரஸ். இயற்கை இறுதியாக ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது, இந்த தருணத்தில் கூட மனிதன் தன் தவற்றை மறுபரிசீலனை செய்யவில்லை எனில் இனி எந்த ஒரு கட்டத்திலும் மனித இனத்தை காப்பாற்ற இயலாது!.

இத்தகைய சூழலில் இந்திய தேசத்தின் நிலை?!.

“கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்”

என்றான் மகாகவி பாரதி. ஆனால் இன்று தேசத்தின் நிலை பாரதியின் கூற்றுக்கு எதிர்மறையாக உள்ளது. தற்சார்பு பொருளாதரத்தை உருவாக்காமல் நாட்டை பன்னாட்டு முதலாளிகளின் ஆய்வுக்கூடமாக மாற்றிவிட்டார்கள். இதனால் மக்களின் உயிர் காப்பாற்ற வேண்டிய நேரத்தில் அண்டை நாடுகளிடம் மருத்துவ உபகரணங்களுக்கு கையேந்தும் நிலையில் இருக்கிறோம்!.

கண்ணுக்கு தெரியாத நோயோடு போராடும் நேரத்தில் கூட மதத்தால் பிரிவினை ஏற்படுத்தும் செயலை ஊக்கப்படுத்தி வருகின்றனர். ஆக்கப்பூர்வமான செயல்களை முன்னெடுக்காமல் அரசியல் செய்கின்றனர் மக்கள் உயிரில்.

ஊரடங்கு பிறப்பித்து மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் சூழலில் அன்றாட தொழிலாளர்கள், சிறுகுறு நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்வாதார பிரச்சனையில் இருக்கும்போது அவர்களுக்கான அத்தியாவசியங்களை செய்ய இயலாது மக்களிடமே கையேந்தி நிற்கிறது அரசு?!.

அடித்தட்டு மக்களின் வாழ்வாதரத்தை உறுதிப்படுத்தவேண்டிய அரசு, பன்னாட்டு முதலாளிகளின் ஏவலாய் செயல்பட்டு அவர்களின் வாராக்கடன்கள் பல லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்தது. அன்றாட நாட்டில் பலகோடி மக்கள் ஒருவேளை சோற்றுக்கே திண்டாடும்போது தன்னுடைய வலிமையை காட்டுவதாக நினைத்து பலகோடி செலவில் சிலைவைத்து மக்கள் பணத்தை வீணடிப்பு செய்தது.

நோய் எதிர்ப்பை பாதுகாப்பாக கையாளவேண்டிய அரசு அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய நிதியில்லை நிவாரணம் வழங்க நிதி தாருங்கள் என மக்களிடம் கையேந்தும் அரசு, இத்தகைய இக்கட்டான சூழலில் பல கோடி செலவில் புதிய பாராளுமன்றம், பலகோடிக்கு ஏவுகணை தளவாட பொருட்கள் என தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ளவே துடிக்கிறது!.

பணமதிப்பிழப்பிற்க்கு பிறகு மெல்ல தலைதூக்கிய பொருளாதாரம் மீண்டும் அகலபாதளத்தை நோக்கி சென்றுவிட்டது. ஊரடங்கு காலத்திற்குள் விலைவாசி உயர்வு எக்குதப்பாக உயர்ந்து அன்றாட காட்சிகளின் வாழ்கை நகர்வு கேள்விக்குறியே?!. பங்குச்சந்தை முதல் சிறுகுறு நிறுவனங்கள் வரை வீழ்ச்சியை சரிசெய்ய இன்னும் இரண்டு முதல் ஐந்து வருடங்கள் தேவைப்படலாம், இந்த காலகட்டத்திற்குள் எத்தனை சிறுகுறு நிறுவன முதலாளிகள் தேய்ந்து தொழிலாளியாய் நிற்பார்களோ?!.

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவத்திலும் தனியார்துவத்தை உட்புகுத்தி , தன்நிறைவு பெறாத அரசு இதுபோன்ற இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள இயலாது கையேந்தி நிற்கும் என்பதற்கு நம் தேசமே சிறந்த உதாரணம். சொந்த நாட்டில் வாழ வழியின்றி குடும்பத்தை காப்பாற்ற கடல் கடந்து பல தேசங்களில் வேலைக்கு சென்றவர்கள் தற்போது தங்கள் எதிர்காலத்தை நினைத்து வேதனையில் நிற்க்கும் சூழலில் அங்கும் மதசாயத்தை பூசி அவர்களின் தற்போதைய நிலையை கேள்விக்குறியாக்கிவிட்டது அரசு.

தன்னிறைவு பொருளாதரத்தை முன்னெடுத்து, தனியார் மயத்தை கட்டுப்படுத்தி, வேலைவாய்ப்பை உருவாக்கி கல்வி, மருத்துவத்தை அரசுமயமாக்கி சிறுகுறு நிறுவனங்களை ஊக்கப்படுத்தி சாதிமத அரசியலை களைந்து அடுத்தகட்ட நகர்வை நோக்கி நாட்டை வழிநடத்து தவறினால் தேசமும் சோமாலியாவே!!..

தற்போதுவரை மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட இறப்பு விகிதம் சராசரியாக உயர்ந்து வருகின்றது. கொரோனா சமூக பரவலாக மாறி உயிர்களை காவு வாங்கி வருகிறது, பொதுமக்களும் சிறிது கூட பொறுப்புணர்வு இன்றி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நடந்துவருகின்றனர்.

நம் வீரத்தை நிரூபிக்கும் நேரம் இதுவல்லவே.. கொரோனா தொற்றால் உலகமே மிரண்டு இருக்கும் நேரத்தில், கொரோனா எங்களை ஏதும் செய்யாது எங்ககிட்ட வராது என வீரவசனம் பேசி திரிந்தவர்கள் இனி வீட்டிற்குள் முடங்கியே ஆகவேண்டும்..!

உங்களுக்காக இல்லாவிடினும் உங்கள் குழந்தைகளுக்காக, உங்கள் வீட்டில் வாழும் பெரியவர்கள் மற்றும் உடல்நிலை பாதிக்கபட்டவர்களுக்காக உங்கள் வீர சாகசங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சமூக விலகலை பின்பற்றி வீட்டில் இருங்கள். அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்க்காகவும் வெளியில் சுற்றித்திரிய வேண்டாமே…!

இளைய தலைமுறைய நீங்கள் தான் வருங்கால தேசத்தை நிர்மாணிக்கவேண்டிய சிற்பிகள், உங்கள் உயிர் இந்த தேசத்தின் நலனுக்காக இருக்கட்டும். தேசத்தை பற்றி அக்கறையில்லையா..? பரவாயில்லை உங்கள் குடும்பத்தினர் நலனுக்காகவாது இருக்கட்டுமே ) :-

உங்கள் இருசக்கரவாகன சாகசங்களை ஒத்திவைத்துவிட்டு வீட்டில் பயனுள்ள புத்தகங்களை வாசியுங்கள், பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள், வருங்கால தற்சார்பு பொருளாதார வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை உள்வாங்கி கற்றுக்கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கை அழகாகட்டும்…!

சீனா, இத்தாலி என கேள்விப்பட்ட விசயம் தற்போது நம் மண்ணிலும் கோரத்தாண்டவத்தை நிகழ்த்த ஆயுத்தமாகிவிட்டது. இனியும் நாம் செய்யும் அலட்சியம் நம்மையும் நம் தலைமுறையையும் பாதிக்கும்..!

“உயிர் உன்னதமானது”

விழிப்புடன் இருப்போம்..!
சமூக விலகலை கடைபிடிப்போம்..!


விழிப்புணர்வுடன்..,
கி.எல்லாளன்

Leave a Reply