Home>>பெண்கள் பகுதி>>படித்த விவசாயி
பெண்கள் பகுதி

படித்த விவசாயி

பெற்றோரின் / மற்றோரின் விருப்பத்திற்கு இணங்க இயந்திர பொறியியல் படிப்பை படித்தேன்.

படிப்பை முடித்ததுமே படிப்பிற்கு தகுந்த பணியை தன் வசம் கொள்ள துடித்தேன்.

பட்டணமெங்கும் காலடி பதித்தபின் கிடைத்த தரம் தாழ்ந்த பணியை மனதார செய்வதாக நடித்தேன்.

நடித்துக்கொண்டிருக்கும் புத்தியை நறுக்கென கேள்விகள் கேட்ட மனசாட்சி முன்பு கூனி குறுகினேன்.

இத்துணை காலமாய் சேர்த்தது உமக்கு தானே வீட்டோடு சேர்ந்திடு என்ற கூச்சலால் வீடு திரும்பினேன்.

விளையாட்டாய் விதை நெல்லை வீசியெறிய லாபமாய் மாறிய விளைச்சல் கண்டு வியந்தேன்.

எவனோ ஒருவனிடம் சம்பளம் வாங்கியது போதுமென.

என் நிலத்தின் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பளித்து சம்பளம் வழங்க பழகினேன்.

ஆறு மாத உழைப்புக்கு இணையாய்  அறுவடை காலம் தரும் சுகம் கண்டு மகிழ்ந்தேன்.

சிந்திய வியர்வைகள் நெல் முத்துக்களாய் நிமிர கண்டு நெஞ்சம் குளிர்ந்தேன்.

இத்துணை உணர்வுகளையும் ஒரு நொடி பார்வையில் பொசுக்கும் உறவுகளை சகித்து கொள்ளவும் பழகி கொண்டேன்.

படிப்பிற்கும் தொழிலுக்கும் இடையில் இல்லாத தொடர்பை அடிக்கோடிட்டு பார்க்கும் உறவுகளே, என் தொழிலுக்கும் அதன் வழி நான் கொள்ளும் திருப்திக்கும் இடையே உள்ள தொடர்பையும் உடன் காணுங்கள்.


சுபஸ்ரீ விசுவலிங்கம் B.E., வேப்பங்குளம்.
(2051 ஆடி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)

Leave a Reply