Home>>இலக்கியம்>>இரவல் வேண்டுபவர்கள்
இலக்கியம்கவிதைபெண்கள் பகுதி

இரவல் வேண்டுபவர்கள்

திராணியற்ற கேவல்கள்
உங்களை
வந்து சேராமல்
சுற்றி காத்து நிற்கும்
அத்தனை படைகளுக்கும்
பாராட்டு பத்திரம்
தயாரித்துக் கொண்டிருக்கிறேன்..

இயலாமையின்
உச்சத்தில்
உயிரை, தானே சிதைக்க
வரிசையில் நின்றிருக்கும்
அத்தனை ஜீவன்களுக்கும்
இரங்கல் செய்தி
எழுதிக் கொண்டிருக்கிறேன்..

விடைகளை
பதுக்கி வைத்துக்கொண்டு
விதண்டாவாதங்களை
முன்னிறுத்திக் கொண்டிருக்கும்
அறிவாளிகளுக்கு
கேடயங்கள் பரிசளிக்க
நேற்று இறந்த
குழந்தையின் எலும்புகளை
மாற்றியமைத்து கொண்டிருக்கிறேன்..

பசியின் அழகில்
வறுமையின் ஆடம்பரத்தில்
மயங்கி சுகித்திருக்கும்
காலத்திலும்
உண்மைகளின் கசப்பை
உணர வேண்டாமென
ஒதுங்கி நிற்கும்
அப்பாவிகளுக்காய்
கிரீடங்கள் தயாரிக்கத்
தொடங்கிவிட்டேன்…

முள்ளென நினைத்தால் முள்ளாக
பொன்னென நினைத்தால் பொன்னாக
இளக்கமாய் ஒரு கிரீடம்..

மூலப்பொருட்களின்
தட்டுப்பாட்டில்
தயாரிப்புகள் குறைந்துவிட்டன.
கொள்முதலுக்கு
விலையேதும் நிர்ணயிக்கப்படவில்லை.

உங்கள்
மூளையையும்
மனதையும்
ஒரே முறை
பிய்த்துக் கொடுங்கள்..

கிரீடங்களின் தயாரிப்புகள்
தொடங்கப்படும்
உடனடியாக..

ரொட்டி துண்டங்களின்
வாசனையை விட..
கிரீடத்தின் நெடி
உயர்ந்ததாய் இருக்கையில்

தேவை இதுவாவென
யார் கேட்கப் போகிறார்??


– கனிமொழி பாலாஜி

(2051 ஆனி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)

பட உதவி: @prochurchmedia

Leave a Reply