Home>>இலக்கியம்>>மைனா (சிறுகதை)
இலக்கியம்சிறுகதை

மைனா (சிறுகதை)

— மன்னை மதி


மணிகண்டன், சுதா இருவரும் வேலைக்கு சென்றுவிடுவார்கள். குழந்தை பிறந்து ஆறு மாதங்களே ஆனாலும் தான் வேலைக்கு செல்வது தான் முக்கியம் என சுதா வேலைக்கு செல்கிறாள், வேறு வழியில்லாமல் வீட்டு வேலைக்கும், குழந்தையை பார்த்து கொள்வதற்கும் ஒரு வேலைக்கார பெண்ணை பணிக்கு அமர்த்துகிறான் மணிகண்டன்.

ஒரு பறவை தன் குஞ்சுக்கு உணவு எப்படி அளிக்குமோ, அப்படியெல்லாம் கவனித்து வந்தாள் அந்த வேலைக்கார பெண் மைனா. பெயர்க்கு தகுந்தாற்போல் மைனா தன் குழந்தைக்கு எப்படி உணவை வழங்குமோ அப்படி வழங்கி பார்த்துக்கொண்டால் அன்பு என்ற அந்த சிறு குருவியை.

அவனின் சிறு அழுகையோ, சத்தமோ அவளை எங்கு இருந்தாலும் அன்பு அருகில் அழைத்து வந்து விடும். மைனா வீட்டில் எந்த பகுதியில் இருந்தாலும் அவள் கவனம் முழுவதும் அன்பை நோக்கியே இருக்கும். மணிகண்டன், சுதா இரவு வேலை முடிந்த உடன் தான் வீட்டிற்கு வருவார்கள். பல நாள் இரவு அன்பு மைனா மடியிலேயே படுத்து உறங்கிவிடுவான்.

அன்பு விளையாடுவது, படிப்பது, டிவி பார்ப்பது என அனைத்தும் மைனா உடன் தான்.

அன்பு மிகவும் சுட்டித்தனமான பையன். எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இருப்பவன். அவனுக்கு பதில் சொல்லி சோர்ந்து விடுவாள் மைனா.

பெற்றோர்களோ வேலை களைப்பில் வீட்டிற்கு வந்த உடன் அன்பு பேச துவங்கினால், கொஞ்சம் சும்மா இருடா எப்ப பார்த்தாலும் என்பார்கள்.

ஆக அன்புக்கு மைனாவே சிறந்த தோழி, அம்மா.

பதிலே தெரியாவிட்டாலும் அன்புவின் அத்தனை கதைகளையும் கண் இமைக்காமல் கேட்பாள் மைனா. நரி கதை, பூனை கதை, தான் பார்த்த கேலி சித்திரம் கதை என அனைத்தையும் பேசி பேசி இறுதியில் தூங்கி விடுவான் என்று மைனாவுக்கு தெரியும்.

அவன் தூங்கும் நேரத்தில் தான் வீட்டை சுத்தம் செய்வது, மணிகண்டன், சுதாவிற்கு சமைத்து வைப்பதை செய்வாள்.

ஒரு சனிக்கிழமை காலை நேரத்தில், மைனா அடுப்படியில் வேலை செய்து கொண்டிருந்தாள்.

அன்று அன்பு தன் அம்மாவிடம் (சுதா) ஏன் இன்னைக்கு வேலைக்கு போகல என்றான். இன்னைக்கு லீவு அதான். மைனா டீ கொண்டா என்றாள் சத்தமாக. சரிமா என்று உள்ளிருந்து மைனா சொன்னாள்.

அன்பு விளையாட்டுதனமாக நீ தானே வேலைக்காரி, நீயே போய் டீ போட்டுக்க வேண்டியது தானே என்றான் சுதாவை பார்த்து. சுதாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

நான் வேலைக்காரி இல்லடா, மைனா தான் வேலைக்காரி என்றாள் சுதா.

அன்பு அதற்கு – எப்பவும் நீ தானே வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு போற. மைனா தானே அம்மாவா இருந்து எனக்கு எல்லாத்தையும் பார்த்துக்குறாங்க. அப்புறம் எப்படி மைனா அம்மாவ வேலைக்காரின்னு சொல்ற நீ.

திகைத்து நின்றாள் சுதா.

இப்படியே சென்றாள் நல்லதற்கு இல்லை என்று தன்னுள் பேசி தொலைகாட்சி பெட்டியில் செய்தியை பார்க்க ஆரம்பித்தால்.

அன்பு 5 வயது வரும் வரை அந்த வீட்டில் வேலைக்கு இருந்தாள் மைனா.

ஒரு நாள் அன்பு பள்ளிக்கு சென்ற போது அவனுக்கு பதில் சொல்வது கடினம் என சுதா மைனாவை கூப்பிட்டு அவன் வருவதற்குள் நீ கிளம்பிவிடு என்றாள். ஏற்கனவே முடிவு செய்துவிட்டதால் அவளும் உள்ளே அழுது கொண்டு, வெளியில் மௌனமாக முகத்தை காட்டிய வண்ணம் தன் இரு பெட்டிகளை எடுத்து வைத்தாள்.

அவள் அந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு பொருளாக உடைந்த, உடையாமல் இருந்த பொருள்களை பார்த்தாள்.

அன்புடன் இருந்த பல இனிமையான நினைவுகள் அவள் கண் முன் வந்து சென்றது. சிறு குழந்தை முதல் 5 வயது வரை அன்பு வளர்ந்தது ஒரு கனவு போல இருந்தது.

சில மன கசப்பால் தன் சொந்த ஊருக்கே சென்றாள் மைனா.

அறியாத வயது என்பதால் அன்பு அழுதுகொண்டே இருந்தான். ஆனால் விவரம் அறிந்த மணிகண்டன், சுதா இவள் இல்லை என்றால் இன்னொரு வேலைக்காரி என்று இருந்தனர்.

அன்பு வளர்ந்து கல்லூரி படிப்பை முடிக்கும் நிலையில், ஒரு நாள் உடன் படித்தவர்கள் அடுத்து என்ன செய்ய உள்ளோம் என கூறுகிறார்கள்.

ஆனால் அன்பு தன்னுடைய அம்மாவை தேடி கண்டுபிடிக்க உள்ளேன் என்று கூறுகிறான்.

நண்பர்களோ, அம்மா தான் வீட்டிலேயே உள்ளார்களே நீ எங்கு நீ ஏன்டா தேடனும் என்று கிண்டல் செய்கிறார்கள்.

உங்களுக்கு சொன்னால் புரியாது என்று சொல்லி, அமைதியாக அங்கிருந்து நகருகிறான்.

அன்பு கல்லூரி படிப்பு முடிந்தவுடன், மைனாவை தேடி கண்டுபிடிக்க தன் சிறு வயதில் நிகழ்ந்த நினைவுகளின் தகவல்களை கொண்டு பயணிக்கிறேன்.

இறுதியில் அவளை (மைனாவை) சென்றடைகிறான் அன்பு.

அன்றும் ஒரு சிறு குழந்தை மைனா உடன் கிராமத்தில் விளையாடுகிறது. அந்த குழந்தை ஒரு கோழியை பிடிக்க ஓடி சென்று விழும் பொழுது, மைனா வேகமாக சென்று அந்த குழந்தை தூக்கி தன் கையால் மெல்ல தடவி கொடுக்கிறாள்.

அன்புக்கு தன் குழந்தை பருவ ஞாபகம் வருகிறது.

மகிழ்ச்சியில் வார்த்தை இன்றி இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் பொழுது கண்ணீர் மட்டுமே பதிலாகிறது.

Leave a Reply