வங்க கடலில் நாளை காலை புரேவி புயல் உருவாகும் என்றும் இது நாளை மாலை அல்லது இரவில் இலங்கையில் கரையை கடந்து குமரி கடலுக்கு புயலாகவே நகரக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் கடந்த வாரம் உருவான நிவர் புயல் தமிழ்நாட்டில் கனமழையை கொடுத்திருக்கிறது. சென்னை நகருக்கு போதுமான மழையை அளித்திருக்கிறது.
தற்போது வங்க கடலில் உருவாகும் புரேவி புயலானது தென் தமிழகத்துக்கு நல்ல மழையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கேரளாவுக்கும் இந்த புரேவி புயலால் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது பற்றிய வானிலை அறிக்கை விவரங்களை பார்ப்போம்.
வரும் 4 ஆம் தேதி கன்னியாகுமரி – பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது. தற்போது தென்மேற்கு வங்காள விரிகுடாவில் சுமார் 460 கி.மீ தூரத்தில் திருகோணமலை (இலங்கை) அருகிலும் கன்னியாகுமரிக்கு 860 கி.மீ தூரத்தில் தென்கிழக்கில் உள்ளது.
முதலில் புரேவி புயல் திருகோணமலை அருகே கரையை கடக்கும்.பின் மன்னார் வளைகுடா நோக்கி நகர்ந்து குமரி பகுதிக்கு 3ஆம் தேதி நகரும். டிசம்பர் 4-ஆம் தேதி கன்னியாகுமரிக்கும் – பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் ஒரு சில இடங்களில் டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.
தென் தமிழகத்தில் டிசம்பர் 2 மற்றும் 4ம் தேதியும், தெற்கு கேரளாவில் டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதியும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
வட தமிழகம், புதுச்சேரி, மாஹே மற்றும் காரைக்கால் மற்றும் வடக்கு கேரளாவில் டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் கடலோர பகுதிகளில் டிசம்பர் 1 மற்றும் 4ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
முதல்வர் வேண்டுகோள்:
புதிய புயல் எச்சரிக்கை தொடர்பாக முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்பு, வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். மேலும், டிசம்பர் 1-4ம் தேதி வரை பெருமழை, புயல் வீசக்கூடும் என்பதால் எச்சரிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
—
செய்தி:
மன்னை செந்தில் பக்கிரிசாமி.