Home>>அரசியல்>>நாம் தமிழர் ஆட்சி வரைவின் முக்கிய அம்சங்கள்
செந்தமிழன் சீமான்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுதேர்தல்

நாம் தமிழர் ஆட்சி வரைவின் முக்கிய அம்சங்கள்

ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி (06/04/2021) நடைப்பெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான “நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவின் முக்கிய அம்சங்களாக” அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதை சகோதரர் இங்கர்சால் (நார்வே) அவர்கள் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். அதை தங்கள் பார்வைக்கு கீழே பகிர்கிறோம்.


மொழி இனம் நிலம்

1. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது நமது கனவு. தமிழ் ஆட்சிமொழி, அதிகார மொழி, பண்பாட்டு மொழி, பயன்பாட்டு மொழி, வழிபாட்டு மொழியாகக் கொண்டு வருவோம்.
2. இந்தி திணிப்பு தமிழகத்தில் முற்றிலுமாக தடுக்கப்படும்.
3. உயர் நீதிமன்றம் முதல் உள்ளூர் நீதிமன்றம் வரை மாநிலத்தின் அனைத்து நீதிமன்றங்களிலும் தாய்மொழியான தமிழ், ஆட்சி மொழியாக,அலுவல் மொழியாக உருவாக்கப்படும்.
4. தமிழர்களின் தொன்மையான அடையாளங்கள் கண்ணை இமை காப்பது போல் போற்றி பாதுகாக்கப்படும்.
5. பழுத்த அனுபவம் உடைய அறிஞர் குழுவை வைத்து தமிழர்களின் தொன்மையை மேலும் அறியவும், அதை உலகிற்கு பறைசாற்றவும் தகுந்த இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படும்.
6. பிற மாநிலத்தவர் தமிழக எல்லைக்குள் வரம்பில்லாமல் விவசாய நிலங்களை வாங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
7. உலகின் மூத்த மொழியான நம் தமிழைப் பிற மொழியினர் இலவசமாகக் கற்றுக்கொள்ள வேண்டி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் “தனித் தமிழ்ப் பயிற்சி மையம்” அமைக்கப்படும்.
8. வெளிநாட்டினர், வெளி மாநிலத்தினர் அனைவரும் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள வழிசெய்யப்படும். தமிழகத்தில் பணிபுரியும் வேற்று மாநில நடுவன் அரசு ஊழியர்களும் தமிழைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துவோம்.
9. பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் அரசுச் செலவில் பயிற்சி மையம் நடத்தப்படும். தமிழ்மொழியைப் பேச எழுதக் கற்றுக்கொள்ள மறந்த இந்தத் தலைமுறையினருக்கு இப் பயிற்சி மையம், நல் வாய்ப்பாக அமையும்.
10. தமிழ்வழிக் கல்விக்கு முன்னுரிமை அளிப்பதோடு, கல்விக்கான உதவித் தொகையும் அளிக்கப்படும். கூடவே தமிழ்மொழியில் படித்தவர்களுக்கு மட்டுமே தமிழகத்தில் வேலைவாய்ப்பு முன்னுரிமை அளிக்கப்படும்.
11. தமிழ் இலக்கியக் கல்வியை +2 முதலே முழுமையாகத் தொடங்கி முனைவர் பட்டம் வரையிலும் வளர்த்தெடுப்பதற்கான வழிமுறைகளைக் கற்றறிந்த சான்றோர்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்துவோம்.
12. தனித் தமிழ்ப் பேச்சுப் பயிற்சி, தமிழ்ப் பாடல்கள், இலக்கியப் பயிற்சி ஆகியவற்றில் இசையோடு தமிழைக் கற்றுத் தரும் பேராசிரியர்கள் உருவாக்கப்படுவர். இசைப்பாடல் பயிற்சியோடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பெருமளவில் பயிற்றிவிக்கப்படுவர். நாட்டுப்புறக் கலைகளில் திறன் கொண்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பெருமளவில் உருவாக்கப்படுவர்.
13. ஒட்டு மொத்த மாந்த அறிவுக்கும் தமிழர்களின் பங்களிப்பைச் செய்வதில் தமிழ் மொழியின் பங்கு என்ன என்பதை உலகுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லத் தனிவகை அறிஞர்கள் உருவாக்கப்படுவர்.
14. முன்னோர்களுடைய வீரம் செறிந்த போராட்டங்கள், ஆட்சிமுறை, அவர்களுடைய ஒழுக்கம், அவர்களுடைய செயலாண்மைத் திறன் போன்றவற்றை அறிந்து தெரிந்து கொள்வதற்காக எமது பிள்ளைகளுக்குப் பாடமாக வைக்கப்படும்.
15. பிற மாநிலத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழக எல்லைகள் மீட்கப்படும். 1956இல் நடைபெற்ற மொழிவழி மாநிலம் பிரிப்பு சரியானதன்று. முறையானதுமன்று. பண்டைய தமிழர்களின் பகுதியான பெங்களூரு, குடகுமலை அனைத்தும் தமிழ்நாட்டின் உரிமை, அவற்றை மறுசீரமைப்புச் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்காடுவோம்.
16. கோவில் சீரமைப்பு என்ற பெயரில் தமிழரின் கட்டடக் கலைகள், கல்வெட்டு ஆவணங்கள், பழமை கூறும் வரலாற்று ஆவணங்கள் அனைத்தும் சிறுகச் சிறுக ஆளும் ஆரிய-திராவிட அதிகார வர்க்கத்தினரால் அழிக்கப்பட்டு வருகிறது. எனவே கோயில் மற்றும் கல்வெட்டுச் சீரமைப்பிற்கு முன்னதாக அனைத்துப் பழைய புராதான சின்னங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்படும். முறையான அனுமதியின்றி, தேவையின்றி மாற்றம் செய்யக்கூடாது என்ற நடைமுறை கொண்டுவரப்படும்.
17. உணவே மருந்து எனும் தமிழர்களின் உணவுகளை உலகளவில் கொண்டு சேர்க்க சமையலுக்கு பெயர்போன செட்டிநாட்டில் உணவு ஆராய்ச்சி மையம் கொண்டு வரப்படும்.

கல்வி

18. அனைவருக்கும் சமமான இலவச கல்வி இனி படிக்காதவர்கள் இல்லை என்பதே இலக்கு.
19. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்கள் தமிழர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர்.
20. தமிழ் வரலாறு மற்றும் தொன்மை கலாச்சாரம் பண்பாடு அனைத்தும் நமது கல்வித் திட்டத்தில் சேர்த்து பாடம் நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்கப்படும்.
21. மெக்காலே கல்வி முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
22. சமுதாயத்தோடு இணைந்த மனித வாழ்வை மாற்றும் கல்வியான தனித்திறன் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
23. நீட் தேர்வு முற்றிலுமாக தடை செய்யப்படும்.
24. பொதுபட்டியலில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி மாநில உரிமைக்குள் மீண்டும் கொண்டுவரப்படும்.
25. மத்திய சிபிஎஸ்இ கல்வி முறையில் கட்டாய தமிழ் மொழிப் பாடம் போன்ற தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
26. இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாய கல்வி முறை பாடத்திட்டமாக சேர்க்கப்படும்.

விவசாயம்

27. விவசாயிக்கு முழு நேரமும் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.
28. விவசாயிகளுக்கு விதைகள், உரம், இயற்கை பூச்சிவிரட்டி & களைக் கொல்லி மருந்துகள், சொட்டு நீர் பாசனம் போறிகள், தெளிப்பான்கள் போன்ற வேளாண்மைக்கு உதவும் பொருட்கள் மானிய விலையில் கொடுக்கப்படும்.
29. வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து நிதி ஒதுக்கப்படும். விவசாயிகளுக்கு மாதம் சுமார் 20 ஆயிரம் ரூபாயும் ஆண்டிற்கு இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும் நிரந்தர வருமானமாக ஈட்ட சிறப்பு திட்டம் கொண்டுவரப்படும். வேளாண் துறை நிதி ஒதுக்கீடு விவசாயிகளுக்கு நேரடியாக கிடைத்திட வழிவகை செய்யப்படும்.
30. மாவட்டம்தோறும் தானிய உணவுப் பொருட்கள் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். பகுதி சார் விவசாய விளைபொருட்களை கருத்தில் கொண்டு அந்தந்த பகுதிகளில் அப்பொருட்களை சேமிக்கவும், பதப்படுத்தவும், மதிப்புக்கூட்டவும் மற்றும் ஏற்றுமதிக்கான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் தகுந்த கிடங்குகள், தொழிற்சாலைகள் நிறுவப்படும். பல லட்சம் பேருக்கு இதில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
31. வேளாண் பல்கலைக்கழகங்கள் தரம் உயர்த்தி ஐந்து பல்கலைக்கழகங்களாக உருவாக்கப்படும்.
32. பாரம்பரிய விதைகளை, நெல் வகைகளை பாதுகாக்க உயிர் பாதுகாப்பு பெட்டகங்கள் உருவாக்கப்படும்.
33. நமது பாரம்பரிய நெல் வகைகளுக்கு உலக காப்புரிமை குறியீடு தமிழ்நாடு அரசின் பெயரில் பெற்றுக்கொள்ள சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
34. சரக்கு மற்றும் சேவை வரிகளில் விவசாயம் மற்றும் கைவினைப் பொருட்கள் GST வரி விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
35. ஏற்றுமதிக்கான வேளாண் மற்றும் உணவுப் பொருட்களின் தரத்தை லாபம் ஈட்டும் வகையில் மேம்படுத்துவதோடு ஏற்றுமதி ஊக்குவிக்கப்படும்.
36. வளர்ச்சித் திட்டங்களுக்காக, அரசு விவசாயிகளிடம் நிலம் கையகப் படுத்தி, அத்திட்டங்களை நிறைவேற்றாமல் கைவிட்டு காலியாக வைத்துள்ள நிலங்கள் மீண்டும் விவசாயிகளுக்கே திருப்பித் தரப்படும்.

பெண்கள்

37. தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்குச் சரி பாதி (ஐம்பது சதவீத) வேலைவாய்ப்பு அளிக்கப்படும். பெண்களுக்கு 50 விழுக்காடு, தனி சட்டமன்ற பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும்.
38. அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் குழந்தை பராமரிப்பு மையம் கட்டாயமாக்கப்படும்.
39. பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க பாலியல் துன்புறுத்தல் தடுப்பு பிரிவு அமைக்க சட்டம் இயற்றப்படும்.
40. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் இயற்றப்படும். நாடகம், திரைப்படம் இன்னும் பிற ஊடகங்கள் வாயிலாக பெண்களை இழிவுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
41. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்.
42. பெண்களை மட்டுமே பணியாளர்களாக கொண்ட வங்கி “வீரமங்கை வேலுநாச்சியார் மகளிர் வைப்பகம்” என தனித்து பெண்களுக்காகவே உருவாக்கப்படும்.
43. பெண் சிசுக்கொலை ஒழிக்கப்படும். பாலின அறிவிப்புத் தடைச் சட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும். பெண் குழந்தைகளைப் பெருஞ்சுமையாக, அவமானமாக எண்ணும் காரணிகளான வரதட்சணை, பெரும் செலவிலான திருமணங்கள், சடங்குகள் ஆகியவற்றிற்கு எதிராகத் தீவிர விழிப்புணர்வுப் பரப்புரைகள் மேற்கொள்ளப்படும்.
44. விளையாட்டில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
45. காவற்படை, கடற்படை, சிறப்புக் காவல், விமானப் போக்குவரத்து, மென்பொருள், வன்பொருள் தயாரிப்பு, நீதித்துறை என அனைத்திலும் வாய்ப்புக் கொடுத்து, பெண்களின் பேராளுமை உறுதி செய்யப்படும்.
46. தமிழினத்தின் வீர மங்கையர்கள் பெயரில் வேலைவாய்ப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும்.
47. பெண்களுக்கு அவர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தைக் கவனிக்க, அவர்களுக்கான வேலை நேரம் ஆறு மணியாகக் குறைக்கப்படும். வீட்டிலிருந்தபடியே கணினி வழிப் பணி புரியவும் வழிவகைச் செய்யப்படும்.
மருத்துவம்
48. அனைவருக்கும் சரியான சமமான தரமான மருத்துவம் கட்டணமில்லாமல் அளிக்கப்படும்.
49. மாநகராட்சி நகரங்கள் உள்ள பகுதிகளில் தோறும் சென்னைக்கு நிகரான பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் கொண்டுவரப்படும்.
50. சுகாதாரத்துறையில் சித்தா ஆயுர்வேதம் யுனானி உள்ளிட்ட மரபுவழி மருத்துவத்திற்கு துணை அமைச்சகம் ஏற்படுத்தப்படும்.
51. சித்த மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் அக்குபஞ்சர் மருத்துவம் ஹோமியோபதி மருத்துவம் அனைத்தும் இணைத்து சமத்துவ மருத்துவ முறை செயல்படுத்தப்படும்.

இயற்கை

52. நீர் வளம், நில வளம், மலை வளம், காட்டு வளம், கனிம வளம், கடல் வளம் என அனைத்து வளங்களையும் பாதுகாக்கும் வகையில் மக்களின் வளங்கள் அனைத்தும் மக்களுக்கானது என்று சட்டம் இயற்றப்படும்.
53. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் அனுமின் நிலையம், அனல் மின் நிலையம் போன்ற அனைத்து சிகப்பு பிரிவு தொழிற்சாலைகளும் படிப்படியாக மூடப்படும். கேடுவிளைவிக்கும் புதிய ஆலைகள்தொடங்க அனுமதி வழங்கப்பட மாட்டாது.
54. ஆற்று மணல் கொள்ளை முற்றிலுமாக தடுக்கப்படும். தமிழக மணல் தமிழகத்திற்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சட்டம் இயற்றப்படும். கனிமங்கள் மற்றும் மலை மணலுக்காக மலைகளை, குன்றுகளை குடைவது போர்கால அடிப்படையில் தடைசெய்யப்படும். மீறி குடைவோர் கடும் தண்டமும் தண்டனையும் பெறுவர்.
55. மரங்களின் பிசாசுகளான சீமைக்கருவேல மரம், யூக்கலிப்டஸ் மரங்கள் முற்றாக அகற்றப்பட்டும்.
56. வெளிநாடுகளில் இருந்து மறுசுழற்சி செய்ய முடியாதக் நெகிழி, மருத்துவ மற்றும் கணினிக் கழிவுகளைக் கப்பல்கள் மூலம் கொண்டுவந்து தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத் துறைமுகப் பகுதிகளில் இறக்கி வைத்துவிட்டுச் செல்கிறார்கள். மண்ணுக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் இதை தடுத்து நிறுத்துவதுடன், அப்படியான கழிவுகளைக் கொண்டு வரும் கப்பல்கள் மீதும், நிறுவனங்கள் மீதும் சட்டப்படிக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
57. பத்தாண்டு பசுமை திட்டத்தின் கீழ், அரசின் தரிசு நிலங்களில் மண்ணிற்கேற்ற நாட்டு மர இனங்கள், காடுகளில் உள்ளது போல் அடர்த்தியாக வளர்க்கப்படும்.
58. பலகோடி பனை திட்டத்தின் கீழ், தமிழகத்தின் தேசிய மரமான பனை மரங்களை பெருக்க, ஆண்டிற்கு 1 கோடி விதைகளுக்கு குறையாமல் ஊன்றப்படும்.
59. கழிவுகளிலிருந்தும், சூரிய ஒளியில் இருந்தும், இயற்கைக்கு கேடு விளைவிக்காத மற்ற மாற்று வழிகளின் மூலம் மின் உற்பத்தியை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
60. மக்களைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்ற கொள்கை முடிவு சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும்.
61. கெயில் போன்ற எரிகாற்று குழாய் நிறுவனத்தை நிலையாகத் தடை செய்வோம்.
62. தமிழ்நாட்டில் மட்டும் அணுஉலை வேண்டாம் என்று கூறவில்லை. உலகத்தில் எந்த நாட்டிலும் வேண்டாம் என்பதுதான் நமது நிலைப்பாடு. நாம் தமிழர் அரசு அணுஉலைக் கொள்கைக்கு எதிரானது. மாற்றுவழி மின் உற்பத்தியைப் பெருக்கி அணு உலையை நிலையாக மூட நடவடிக்கையை எடுப்போம்.
63. சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை தொடங்க அரசு முன்னுரிமை அளிக்கும்.
64. மாமல்லபுரம் காஞ்சிபுரம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஆகியவற்றை இணைத்து சுற்றுலாவை மேம்படுத்த திட்டம் மேற்கொள்ளப்படும்.
65. இந்த மண்ணை, இயற்கை வளத்தை, நீர் வளத்தை அடுத்த தலைமுறைக்கு அப்படியே பாதுகாத்து வழங்கிட வேண்டியது நம் கடமை. நமது நீர்வளத்தைச் சேமித்துப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழகத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும். பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நீர் வளத்தினைப் பாதுகாக்கப் புதிய கொள்கை மறை நீர்ப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்படும்.

நீர் மேலாண்மை

66. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு 152 அடியாக உயர்த்தப்படும்.
67. அனைவருக்கும் சுத்தமான தரமான கட்டணமில்லா குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்.
68. குடிநீரை வணிகமயமாக்குதல் தடை செய்யப்படும்.
69. ராமநாதபுரம் சிவகங்கை தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு போர்கால அடிப்படையில் நீர் மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
70. வெள்ளப்பெருக்கு காலத்தில் நீரை சேமிக்க தடுப்பணைகள் அமைக்கப்படும்.
71. கர்நாடக மாநிலம் தண்ணீர் தர மறுக்கும்போது தமிழகத்தின் கனிம வளமான நிலக்கரி, மின்சாரம் அவர்களுக்கு மறுக்கப்படும். நிலக்கரி பொதுச் சொத்து, பகிர்ந்தளிக்க வேண்டும் என்றால் தண்ணீரும் பொதுச் சொத்துதான். அதையும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று முடிவெடுப்போம்.
72. பாலாறு தமிழகத்தின் சொத்து, ஆறு இயற்கை மக்களுக்கு அளித்த கொடை. ஆற்று நீரைப் பொதுவாகக் கருதி நடுவண் அரசு பகிர்ந்தளிக்க மாநில அரசின் மறுசீரமைப்புக் கோரிக்கையினை நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்துவோம்.
73. தேசிய, மாநில, கிராமச் சாலைகளின் இருபுறமும் நீர் வழிப்பாதைகள் கட்டாயம் அமைக்கப்படும். ஒவ்வொரு அரை கிலோமீட்டர் தூரத்திலும் சிறுசிறு குட்டைகள் வெட்டப்படும். சாலைகளில் வழியும் மழைநீர் அந்தக் குட்டைகளில் தேக்கப்படும்.

நீதித்துறை

74. தமிழே நீதிமன்ற மொழி – வழக்காடு மொழி. உயர்நீதிமன்றம் முதல் உள்ளூர் நீதிமன்றம் வரை மாநிலத்தின் அனைத்து நீதிமன்றங்களிலும் தாய் மொழியான தமிழை ஆட்சிமொழியாக, அலுவல் மொழியாக ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை நாம் தமிழர் அரசு உடனடியாக எடுக்கும்.
75. நீதி மேலாண்மை – ஒரு சனநாயக நாட்டில் சட்டசபை இயற்றுகிற சட்டங்களையும், திட்டங்களையும் தடை செய்து நிறுத்தி வைக்கிற நீதிமன்ற மேலாண்மை நம் அரசியலைப்பு முறைமையில் அதிகமாக இருக்கிறது. இந்நிலையை மாற்ற நீதிமன்ற மேலாண்மையைக் குறைத்து மக்கள் சனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளிக்க உரிய சட்ட மாற்றங்களைக் கொண்டுவரத் தகுந்த முயற்சிகளை முன்னெடுப்போம்.
76. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்கள் உட்பட 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இஸ்லாமியர்கள் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள்.
77. தமிழகத்தில் உச்சநீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் மாவட்ட நீதிமன்ற அதிகாரம் கொண்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்படும். காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடம் சமூகநீதிக் கொள்கைகள் அடிப்படையில் நிரப்பப்படும்.
78. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு நீதியை நாம் தமிழர் கட்சி பெற்றுத்தரும்.
79. கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை சுமார் 560 தமிழக மீனவர்கள், சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறர்கள். நாம் தமிழர் அரசு அதற்கான சட்ட நடவடிக்கையை எடுக்கும்.
80. மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் இருக்கும் பிணக்குகளை தீர்க்க மட்டுமே உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும். மற்றபடி மாநிலத்தில் நடக்கும் அனைத்து வழக்குகளை மாநில தலைமை நீதிமன்றங்களே உச்சநீதிமன்றங்களாக இருந்து செயல்பட வேண்டும் என்று அரசியல் அமைப்பு அமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு முயற்சிகளை முன்னெடுப்போம்.
81. இளம் வழக்கறிஞர்கள் – சிற்றூராட்சி முதல் மாநகராட்சி வரை உரிமையியல், குற்றவியல் வழக்குகள், காவல் நிலைய பிரச்சனைகள் உள்ளிட்ட அனைத்துச் சட்டம் தொடர்பான உதவிகள் செய்வதற்குச் சட்ட உதவி மையம் அமைக்கப்படும்.
82. சட்டக்கல்வி முடிக்கின்ற அனைத்து இளம் வழக்கறிஞர்களுக்கும் முதல் மூன்று வருடங்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை அரசால் வழங்கப்படும்.
83. நீண்ட காலமாக தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கத் தற்காலிக நீதிமன்றங்கள் மாநிலம் முழுக்க பரவலாக ஏற்படுத்தப்படும்.
84. மாநிலம் முழுக்க இருக்கின்ற நீதிமன்றங்களில் இணையதள வசதி உடனடியாக ஏற்படுத்தப்படும். ஒருங்கிணைந்த நீதிமன்றப் பணிகளை நிர்வகிக்கத் தகவல் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.
85. தமிழில் படிவங்கள் – கீழ் நீதிமன்றம் முதல் உயர் நீதிமன்றம் வரையிலும் அனைத்துப் படிவங்களும் தமிழில் அமைய ஆட்சி மொழிச் சட்டம் கொண்டுவரப்படும்.
86. அந்தந்த மாநில அரசின் தலைமை நீதிபதியாக, அந்தந்த மண்ணின் மைந்தர்களையே நியமிக்கும் வகையிலான சட்ட மாற்றத்தை ஏற்படுத்த நாம் தமிழர் அரசு பாடுபடும்.
பொருளாதாரம்
87. அண்ணல் காந்தியடிகளின் உதவியாளர் ஜே சி குமரப்பா அவர்கள் முன்வைத்த தற்சார்பு பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்.
88. வரிகளை மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு பங்கு பெறும் நடைமுறையை மாற்றி மாநிலங்கள் ஈட்டிக் கொடுத்த வரி வருமானத்தில் விகிதாச்சார அடிப்படையில் பங்கு பிரிக்க நடுவண் அரசிடம் வலியுறுத்தப்படும்.
89. ஊராட்சி வரிகள், விற்பனைவரி சுங்கவரி, கலால்வரி, பருவவரி போன்ற பல்வகை வரிகளை மத்திய-மாநிலஅரசுகள் 50-50 என்கிற வகையில் கையாளுகின்றன. தமிழக வரி வருமானத்தில் 25 சதவீதத்தை மட்டும் நடுவன அரசு பயன்படுத்த வேண்டும் மீதமுள்ள 75% தமிழகத்திற்க்கு கொடுக்க வேண்டும்.
90. தற்போது இருக்கும் மாவட்ட கிராம கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் இணைக்கப்பட்டு மாபெரும் “மாநில விவசாய வங்கி” உருவாக்கப்படும்.
91. இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு இயங்கும் தமிழ்த்தேசிய வைப்பகம் அனைத்து மாநிலங்களிலும் தொடங்கப்படும். மேலும் உலக நாடுகள் அனைத்திலும் அதன் கிளைகள் தொடங்கப்படும். அனைத்திலும் தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருக்கும் தமிழகம், வைப்பகத்திலும் தன்னிறைவு பெற்றிருக்கும்.
92. வைப்பகத்தின் முக்கிய நோக்கம் தொழில் முனைவோருக்கு உதவியாய் நிற்பதுதான். தனியாரிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி நலிந்து போவதைத் தடுக்கும் நோக்கம்தான். கந்து வட்டியில் சிக்கித்தவிக்கும் அனைவரையும் கந்துவட்டியிலிருந்து மீட்டெடுத்து எளிதாகத் தொழிலில் ஈடுபடும் நடவடிக்கையை நாம் தமிழர் அரசு எடுக்கும்.
93. வேளாண் பெருங்குடிகள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், விதவைகள், ஆகியோர்களுக்கு மட்டும் தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். குறிப்பாக வேளாண் தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எந்த வகையிலும் தொழில் நலிந்து போகாமல் இருக்க அவ்வப்போது ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் வழங்கப்படும்.
94. இயற்கை சீற்றங்களால் வீடு, விவசாயம், தொழில் இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு

95. வேலைவாய்ப்பிற்காக மாவட்டம் தோறும் தொழில் கூடங்கள் அமைக்கப்படும்.
96. படித்தவர் படிக்காதவர் அனைவருக்கும் அரசு வேலை.
97. தென்னக ரயில்வே துறையில் தமிழகத்திற்கு உள்ளான அனைத்து பணியிடங்களிலும் தமிழர்களுக்கு 90 சதவீத வேலை முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
98. தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் காலியிடங்களில் தமிழர்கள் பணியமர்த்தப்படுவார்கள். அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
99. புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் தொடக்கநிலை நிறுவனங்கள் முன்னேற்றத்தில் தனி அக்கறை செலுத்தப்படும்.
100. மாவட்டம் தோறும் ஆராய்ச்சியாளர்களுக்கு வ.உ சிதம்பரம் அடைகாக்கும் மையங்கள் அமைக்கப்படும். பொருளாதார நிலையில் பின்தங்கிய இளம் விஞ்ஞானிகள் அதே மையத்தில் தங்கி தங்கள் கண்டுபிடிப்புகளை சீர்செய்ய உண்டாக்கும் செலவை அரசே ஏற்கும். கண்டுபிடிப்புகள் முழுமை அடைந்தவுடன் அதற்கான காப்புரிமை கண்டுபிடித்தவரின் பெயருக்கு அரசு பெற்று தரும். கண்டுபிடித்து காப்புரிமை பெற்ற பொருட்களை வணிகம் செய்ய துணிகர மூலதன நிறுவனம் மூலம் முதலீடு செய்து அரசு கூட்டுவாணிகம் மேற்கொள்ளும். வ.உ சிதம்பரம் அடைகாக்கும் மையங்களுக்கு நன்கொடை அளிப்பதற்கு அரசு வருமான வரி விளக்கு பெற்றுத்தரும்
101. மதுரை கோவை திருச்சி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் அரசு தகவல் தொழில்நுட்ப கண்காட்சி அமைக்கப்படும்.
102. தற்போது நடைமுறையில் உள்ள கல்வி சமூகம் பொருளாதாரம் சார்ந்த இட ஒதுக்கீட்டு முறையை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் வழியில் நாம் தமிழர் அரசு சீராய்வு செய்யும்.
103. தமிழ் குடிகளுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும். பிற மொழி வழி மாநிலங்கள் தமிழ் இன மக்களுக்கு என்ன முன்னுரிமை வழங்குகின்றனவோ அதே உரிமை தமிழகத்தில் வாழும் பிற மொழியினருக்கு வழங்கப்படும்.
104. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்கப்படும்.
அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம்
105. மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி.
106. ஒற்றை ஆட்சி முறையை ஒழித்து கூட்டாட்சி முறைக்கு வழிவகை செய்ய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டுவரப்படும்.
107. நாம் தமிழர் ஆட்சியில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் தன்னாட்சி என்ற முழக்கத்தோடு அனைத்து வகையான இனங்களுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசிற்கு உண்டு என்கிற வகையில் இந்திய அரசியலைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டுவரப் பாடுபடும்.
108. நரசிம்மராவ் தவிர வட மாநிலத்தை சார்ந்தவர்களே பிரதமராக இதுவரை அமர்த்தப்பட்டுள்ளார்கள், அதனை மாற்றி சுழற்சி முறையில் அனைத்து மாநிலத்தவரும் பிரதமராக வாய்ப்பு வழங்கும் உரிமை பெற்றுத் தரப்படும்.
109. 6 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு பாராளுமன்ற தொகுதி என்ற இன்றைய நிலையை மாற்றி மூன்று சட்டமன்ற தொகுதிக்கு ஒரு பாராளுமன்ற தொகுதி என்று மாற்றம் கொண்டுவரப்படும்.
110. மக்களால் தேர்ந்து எடுக்காத ஆளுநர் மாநில அரசை கலைக்கும் உரிமை பெற்று இருப்பது மக்களாட்சிக்கு எதிரானது. ஆகையால் அந்த உரிமையை நீக்க நாம் தமிழர் ஆட்சி வழிவகை செய்யும்.
111. நாடு முழுவதும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும்.
112. எலக்ட்ரானிக் ஓட்டு முறையை அதாவது இயந்திர ஓட்டு முறையை ஒழித்து வளர்ந்த நாடுகள் பயன்படுத்தும் வாக்குச்சீட்டு முறைக்கு வர வழிவகை செய்யப்படும்.
113. சின்னம் இல்லாத தேர்தல் அதாவது தேர்தல் முறையில் அமெரிக்காவைப் போல் என் முறையை கொண்டுவரப்படும். இல்லாவிட்டால் எல்லா தேர்தலுக்கும் எல்லோருக்கும் புதிய சின்னம் கொடுக்கப்படும்.
114. முதல் குடிமகன் – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி குடியரசுத் தலைவரே நாட்டின் தலைவராக இருக்கிறார். மக்களாட்சித் தத்துவத்தின்படி அரசு அமைக்கப்படுவதாகக் கூறப்படும் சனநாயக நாட்டில், மக்களால் நேரிடையாக தங்களது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாதபடி சட்டம் உள்ளது. மக்களே தங்கள் நாட்டின் குடியரசுத் தலைவரைத் தேர்தல் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் அரசியலமைப்பு மாற்றம் செய்ய நாம் தமிழர் அரசு பாடுபடும்.
115. மாநிலங்களவை – மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படாத மாநிலங்களவை உறுப்பினர்கள், இந்நாட்டையே ஆளுகின்ற மத்திய மந்திரிகளாக வருவது மக்களாட்சி மாண்பிற்கு எதிரானது. மக்களால் தேர்ந்தெடுக்கப் படாத எவரும் மக்களை ஆட்சி செய்கிற, அதிகாரம் செலுத்துகிற பொறுப்புகளில் வர உரிமையில்லை. அதனால் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ‘அதிகாரம்’ அளிக்கப்படுவதை நாம் தமிழர் அரசு எதிர்க்கிறது.
116. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத குடியரசுத் தலைவர், மக்களால் தேர்ந்தெடுக்கப் படாத பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய இருவதும் சேர்ந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசைக் கலைத்துவிட முடியும் என்ற அதிகாரத்தைப் பெற்றிருப்பது மக்களாட்சி தத்துவத்திற்கே எதிரானது. இதனை நாம் தமிழர் அரசு எதிர்க்கிறது.
117. வாக்குச்செலுத்துதல் கட்டாயக் கடமையாக்கப்படும்.
118. திராவிட கட்சிகள் தங்கள் வாக்கு வங்கி சுயலாபத்திற்காக தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு நாம் தமிழர் ஆட்சி தடை செய்யும்.
119. கள்ள ஓட்டுப் பதிவினைத் தடுக்க, வாக்களித்த பிறகு வாக்காளருக்குச் சான்று வழங்க வேண்டும் என நமது அரசு தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தும்.
120. வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் ஊழல் ஒழிக்கப்படும்.
121. ஊழல் ஒழிப்பு பாசறை என்ற அமைப்பை நாட்டிலேயே முதலாவதாக நிறுவி, பல்லாயிர கணக்கான பொதுமக்கள் லஞ்சமாக இழந்த தொகையை நாம் தமிழர் கட்சி மீட்டு உரியவர்களுக்கு வழங்கி வருகிறது. இதில் கூடுதல் பொறுப்பாளர்களை தமிழகம் முழுவதும் நியமித்து கையூட்டு, ஊழல் இவற்றை அடியோடு ஒழிப்போம்.
122. ஊழல் போன்ற காரணங்களால் களவுபோன பொதுமக்கள் மட்டும் அரசு தொழிலாளர்களின் பணத்தை மீட்டெடுக்க விசாரணை குழு அமைக்கப்படும்.
123. அரசு நலத்திட்டங்கள் வேலைகள் அனைத்தும் தாமதமின்றி வெளிப்படைத் தன்மையோடு விரைவாக கிடைக்க “சேவை பெறும் உரிமை சட்டம்” விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
124. மக்கள் அதிகார சட்டம் மாநில அளவில் மேலும் பலப்படுத்தப்பட்டு உடனடியாக நடைமுறைப் படுத்தப்படும்.
125. அசையா சொத்து ஆக்கிரமிப்பு, போலி ஆவணங்கள் தயாரிப்பு போன்ற குற்றங்களை ஒழிக்க உலக அளவில் பயன்படுத்தப்படும் ப்ளாக் செயின் முறை அமல்படுத்தப்படும்.
126. ஒவ்வொரு ஊரிலும் புகார் பெட்டிகள் அமைத்து மக்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நெய்தல்

127. சாகர்மாலா திட்டம் முற்றிலும் தடை செய்யப்படும்.
128. மீனவர்களுக்கு தனி சட்டமன்ற பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும்.
129. மீனவர்களுக்கான தனி அமைச்சகம் போர்க்கால அடிப்படையில் உருவாக்கப்படும்.
130. மீனவர்கள் பாதுகாப்பை வலுப்படுத்த நெய்தல் படை அமைக்கப்படும்.
131. மீன்பிடித் தொழில்கள் நடைபெறும் கடலோர மாவட்டங்களில் குளிர்பதன பாதுகாப்பு கூடங்கள் அமைக்கப்படும்.
132. அரசாங்கமே நடத்தும் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் மீனவர்களுக்கான குறைந்த வாடகையில் மீன்பிடிக் கலன்கள் வினியோகிக்கப்படும்.
133. கடல்சார் நெய்தல் நிலம் மீனவர்களுக்கு சொந்தம் அவர்களை அங்கிருந்து எந்த காலத்திலும் அப்புறப்படுத்தும் எந்த திட்டங்களுக்கும் எந்த காலத்திலும் நாம் தமிழர் அரசு அனுமதிக்காது. கடற்கரையோரமும் அகற்றப்பட்ட மக்கள் மீண்டும் அங்கே குடியமர்த்தப்படுவார்கள்.
134. மீனவர்களுக்கு என தனி வைப்பகம் அமைக்கப்படும்.
135. தமிழகத்தில் உள்ள துறைமுகங்களை மையமாக வைத்து மேலும் கூடுதலாக வர்த்தகப் போக்கு வரவு, சுற்றுலாப் படகு, கப்பல் போக்குவரத்து, கேளிக்கை, மீன்பிடி அம்சங்கள் உள்ளிட்ட வளர்ச்சிகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
136. துறைமுகப் பகுதிகளில் கழிவுகள் தேங்காமல் சிப்பிகள், மீன்கள் இயற்கையாக வளர்வதற்கான வழிகளைச் செய்ய வேண்டும். அந்தப் பகுதிகள் முழுவதும் காற்று மாசுபடாத படி நடவடிக்கை மேற்கொள்ள படும். இவைகளை நாம் தமிழர் அரசு மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்றுக் கொடுக்கும்.
137. துறைமுகங்களின் வளர்ச்சி என்ற பெயரில் கரையோரம் வாழ்பவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படக்கூடாது. அதற்கான சட்டம் கொண்டு வரப்படும். கடலோரப் பகுதிகளில் அவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாமல் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
138. பசுமைப் பாதுகாப்பு முறைகள், துறைமுகத் தொழிலாளர்களுக்குக் காப்பீடு, உலகத் தரத்திலான பாதுகாப்பு ஏற்பாடு கணினிக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அனைத்தும் செயல்படுத்தப்படும்.
139. ஏற்கனவே துறைமுக நகரமாக இருந்த கடலூரில் புதிய துறைமுகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சிறந்த சரக்கு மற்றும் வர்த்தகப் போக்குவரவு நகரமாக மாற்றப்படும். அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். மேலும் கடலோரப் பகுதிகளில் வாய்ப்புள்ள இடங்களில் சிறிய மீன்பிடித் துறைமுகங்கள் கட்டவும், நடவடிக்கைகள் எடுக்கப்படும்
140. தமிழகத்தில் புதியதாகப் பெரிய வர்த்தகக் கப்பல், சரக்குக் கப்பல்களைக் கட்டும் தொழிற்கூடம் நம் முப்பாட்டன் இராசேந்திர சோழன் பெயரில் ஏற்படுத்தப்படும்.
141. அனைத்துத் துறைமுகங்களிலும் சரக்கு மற்றும் வணிகக் கப்பல்களைப் பழுதுபார்க்கும் வசதிகளும் ஏற்படுத்தப் படும். இதற்கான உரிமைகளைத் தனியார்கள் பெற்றுக்கொள்வதைப் போல் மாநில அரசும் தனியாகப் பெற்றுச் செயல்படுத்தும். இதன் மூலம் வர்த்தகம் மேலும் பெருகும்.
142. தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைமுகங்களுக்கும் சரக்குப் பெட்டகங்களை எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் சாலைப் போக்குவரத்து நவீன வசதிகளுடன் மாற்றப்படும். சாலைப் போக்குவரத்து, இரயில் போக்குவரவு அனைத்தும் எளிதில் துறைமுகங்களோடு இணைக்கும்படியான கட்டமைப்புகள் நவீன முறையில் மேலும் வலுப்படுத்தப்படும்.
143. நவீன தொழில் நுட்பங்கள் வளர்வதற்கு முன்பே பல்லாயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் இயற்கை வழி நீர்ப் போக்குவரத்தில்தான் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த இயற்கை நீர்வழிப்பாதை உலகம் முழுவதும் இருக்கின்றது. அவற்றை மீளாய்வு செய்து மீண்டும் இயக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த நாம் தமிழர் அரசு முயற்சிகளை மேற்கொள்ளும்.
அயலகத் தமிழர்களுக்கான அமைச்சகம்
144. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு அஞ்சல் வழியில் வாக்களிக்கும் உரிமை பெற்றுத் தரப்படும்.
145. அயலகத் தமிழர் நலம் – நாம் தமிழர் ஆட்சியில் 1983 குடிபெயர்வுச் சட்டம் (விதிகள் வரையறைகள்) மத்தியச் சட்டத்தை மாற்றி அமைக்க ஆவன செய்வதுடன் தமிழர் நலம் சார்ந்து வெளிநாடு வாழ் தமிழர்களுக்கெனத் தனிச்சட்டம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
146. தனி அமைச்சகம் – MOTA (MINISTRY OF OVERSEAS TAMIL AFFAIRS) என்ற பெயரில் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு என நாம் தமிழர் அரசு தனி அமைச்சகத்தை ஏற்படுத்தும்.
147. தமிழ்நாடு குடிப்பெயர்வுக் கணக்கெடுப்பு 2013-இன் படி பெரும்பாலும் கூலித் தொழிலாளியாக உள்ள இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலானோர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் சட்ட உதவி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
148. நாம் தமிழர் அரசு மாவட்டம் தோறும், மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கண்காணிப்பில் தனிப் பிரிவை ஏற்படுத்தும். இந்தத் தனிப்பிரிபு அந்த மாவட்டத்தில் இருந்து வெளிநாடு சென்று வேலைபார்ப்போரின் விவரங்களைத் திரட்டி, அவர்களின் தொடர்பு எண், வேலை செய்யும் வெளிநாடு, அவர்களுக்குள்ள சிக்கல் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்து பராமரித்து வைத்திருக்க வேண்டும்.
149. மாதம் ஒரு முறை அவர்களை மாவட்ட நிர்வாகம் தொடர்பு கொண்டு அவர்களின் நிலையை விசாரித்துப் பதிவு செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் திரட்டப்படும் தகவல்களை மாநிலத் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மாநிலத் தலைமை, மத்திய அரசின் வெளியுறவுத்துறையைத் தொடர்பு கொண்டு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கும்.
150. வெளிநாடு வாழ் தமிழர்களின் வருவாயை ஈட்டிக்கொள்ளும் அரசு அவர்களுக்கான அவசரகால உதவிகள் பற்றி அக்கறை கொள்வதில்லை. நமது அரசு அதற்கென்று தனிப் பிரிவை உருவாக்கும்.
151. 24 மணி நேரமும் இயங்கும் அந்த அவசர மையம், உலகின் எந்த மூலையில் இருந்தும் தொடர்பு கொள்ளும் தமிழர்களின் அவசரக் குரலுக்கு வேண்டிய நடவடிக்கையை உடனே எடுக்கும். மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று துரித நடவடிக்கையை எடுக்கச் செய்யும்.
152. வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனைக் காக்கவென்று தனி வாரியம் அமைக்கப்படும். அதில் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்கள் உறுப்பினராகப் பதிவு செய்யப்படுவர். அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்படும். வாரியம் இவர்களுக்குத் தொழில் தொடங்க, வீடுகட்ட வட்டியில்லாக் கடன் வழங்கும். தவிர, திருமணம், மருத்துவ உதவி போன்ற உதவிகள் கிடைத்திட நடவடிக்கை எடுக்கும்.
153. வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து, தமிழகத்தில் ஒரு தொழிலைத் தொடங்கலாம். கூட்டுப்பண்ணை முறையில், எந்த மாவட்டத்தில் என்ன தொழில் சாத்தியமோ அந்தத் தொழிலில் பல தமிழர்கள் கூட்டாகச் சேர்ந்து முதலீடு செய்யலாம். அதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழில் வளமும் பெருகும். அவர்களின் சிறு முதலீடும் வளர்ந்தபடி இருக்கும்.
154. முறையற்ற முகமைகளுக்குத் தடை (PRIVATE AGENCY) – தமிழ்நாட்டில் இயங்குகிற முறையற்ற ஏஜென்சிகளால் தான் பெரும்பான்மையான இளைஞர்கள் ஏமாற்றப் படுகிறார்கள். பல இலட்சங்களை இழந்து, வெளிநாட்டிலும் சரியான வேலையின்றித் தவித்து வருகிறார்கள். அதனால் இதற்கென்று அரசே முகமையை உருவாக்கும். எந்த நாட்டில் என்ன வேலைவாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்து முறையான கட்டணத்தோடு ஆட்களை அனுப்பி வைக்கும். இதில் முறையாகப் பதிவு செய்யப்பட்ட முகமையாளர்களும் இணைந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும். இளைஞர்களை ஏமாற்றி வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கும் முகமையாளர்கள் மனிதக் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப் படுவார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
155. துணைத்தூதரகம் – இராமநாதபுரம் மாவட்டத்தைத் தலைமையாகக் கொண்டு அரேபிய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் சிறப்புத் துணைத் தூதரகத்தை மத்திய அரசு உதவியோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
156. தமிழர்கள் பெரும்பாலும் வாழுகிற வெளிநாடுகளில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் குடிப்பெயர்வு குறித்த சந்தேகங்களைச் சட்டத் திட்டங்களைத் தெரிந்து கொள்வதற்கென்றும், புகார் மற்றும் உதவிக்கென்றும் தனிஅமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும்.
157. வைப்பகம் – வெளிநாடுகளில் வாழுகின்ற தொழிலாளர்கள் தங்களின் ஊதியத்தைத் தனியார் ஏஜென்சி மூலமாக அனுப்பி ஏமாறாமல் இருப்பதற்குச் சட்டத்திற்குட்பட்டு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கெனத் தனிவைப்பகம் ஏற்படுத்தப்படும். அந்த வைப்பகம் பணப் பரிமாற்றத்தை மட்டும் செய்யாமல், அவர்களுக்குக் கடன் உதவி, சேமிப்பு எனப் பிற வைப்பகங்கள் செய்கின்ற சேவைகளையும் செய்து கொடுக்கும்.
158. இந்திய உச்ச நீதிமன்றம் கூறியதுபோல், வெளிநாடுகளில் வாழுகிற தமிழர்களுக்கும் வாக்களிக்ககூடிய உரிமையும் வசதியும் ஏற்படுத்தித்தர நாம் தமிழர் அரசு மத்திய அரசுக்குத் தொடர் அழுத்தம் கொடுத்து, வாக்குரிமையைப் பெற்றுத்தரும்.
159. வெளிநாட்டில் வேலை செய்யும் மீனவர் நலன் – பன்னாட்டுக் கடற்கரையில் ‘ஒப்பந்த அடிப்படையில்’ மீன்பிடிக்கச் செல்லும் மீனவத் தொழிலாளர்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் முறையாகப் பதிவு செய்யப்படும். எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நாட்டில் வேலை செய்கிறார்கள் அவர்களுக்கான சிக்கல் ஏதும் உள்ளதா என அனைத்தும் கண்காணிப்பிலேயே வைக்கப்படும். அவர்களுக்கான உரிமைகள் அங்கே மறுக்கப்பட்டால் உடனடியாகப் பன்னாட்டு மனிதஉரிமை அமைப்புகளோடு தொடர்புகொண்டு தீர்த்து வைக்கப்படும்.
160. முறையற்ற நிறுவனங்களால் கூலி வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், எந்தவித அடிப்படை உரிமையும் இல்லாமல், அந்நாடுகளின் சிறைகளிலும், அடைப்புக் காவலிலும் தடுத்து வைக்கப் பட்டிருக்கின்றனர். அவர்கள் பற்றிய தகவல்களை முழுதுமாகப் பெற்றுப் பன்னாட்டு நீதிமன்றம் மூலமாக அவர்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் விடுதலைக்காகத் தனிச்சட்டக் குழுமம் ஒன்றும் ஏற்படுத்தப்படும்.
161. வெளிநாடுகளில் சட்டவிரோதமாக இயங்கி வருகின்ற (MAN POWER AGENCY) முகமைகள் (ஏஜென்ஸிகள்) கணக்கெடுக்கப்பட்டு உரிய அரசுகளிடம் தகவலைச் சொல்லி மேற்கண்ட முகமைகளைத் தடை செய்வதற்குச் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவது தடுக்கப்படும்.
162. வெளி மாநிலத் தமிழர் நலம் – வெளிநாடுகளைத் தவிர்த்து இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழுகிற தமிழர் நலம் காப்பதற்குத் தனி வாரியம் ஏற்படுத்தப்படும். அந்தந்த மாநிலங்களில் தமிழ் வழிக் கல்வி படிப்பதற்கும், தொழில் நடத்தவும் உதவிகளை வழங்கும். தவிர சட்டஉதவிகள் வேண்டும் என்றாலும் வழங்கப்படும். அவர்களின் கலை பண்பாடு, கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்து வகை உதவிகளையும் நாம் தமிழர் அரசு செய்யும்.

தமிழீழம்

163. விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசின் தடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
164. தனி தமிழீழ கோரிக்கைக்கு ஐநாவின் பொது வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
165. அறிவார்ந்த ஆளுமைகளை ஒன்று திரட்டிக் குழு அமைக்கப்படும். அந்தக்குழு, இந்தியாவின் பிற மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள், கருத்தாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரைத் தொடர்ச்சியாகச் சந்தித்துப் பேசும். ஈழ இனப்படுகொலைக்கான காரணங்கள் என்ன, எதற்காகப் புலிகள் போராடினார்கள் என்பதையெல்லாம் ஆவணங்களோடு குழு உறுப்பினர்கள் விளக்கிக் கூறுவார்கள்.
166. தொடர் அழுத்தங்கள், பிரச்சாரங்கள் மூலம் இந்தியாவின் பிற மாநில மக்களின், பிற தேசிய இனங்களின் ஆதரவைப் பெற்று மத்திய அரசின் போக்கை மாற்ற முயற்சிகள் எடுக்கப்படும்.
167. உலகளவில் அந்தந்த நாட்டுப் பிரதிநிதிகளை, அறிவார்ந்தவர்களைச் சந்தித்து இனப்படுகொலை விசாரணை நடத்தி நீதியைப் பெற்றுத் தருவோம்.
168. உலக நாடுகளில் வாழும் தமிழ்ப் பெருங்குடி மக்களை பல இலட்சக்கணக்கில் திரட்டி மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாட்டை நடத்தி அந்த மாநாட்டில் தமிழ்த் தேசிய இனத்திற்கென்று பரந்து விரிந்து கிடக்கின்ற இந்தப் பூமிப்பந்தில் ஒரு தேசம் அது தனித் தமிழீழ பொதுவுடமை குடியரசே என்று நாம் தமிழர் அரசு பேரறிவிப்பு செய்யும்.
169. இந்தியாவில் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமையை மத்திய அரசிடம் நாம் தமிழர் அரசு பெற்றுத் தரும். ஈழ உறவுகள் விரும்பும் வரை இங்கேயே இருக்கலாம் தேவையென்றால் சொந்த நாட்டிற்கு செல்லலாம்.
170. அகதிகளுக்கு உலகநாடுகள் என்ன நிதி உதவிகளை வழங்குகிறதோ அதையே நாம் தமிழர் அரசு வழங்கும். திபெத், வங்கதேசம் அகதிகளை போன்று விரும்பிய வேலைகளுக்கு சென்று வரலாம்.
171. தமிழக சுற்றுலாத் தளங்களில் ஈழ உறவுகளுக்கு தனிக் கடைகள் ஒதுக்கி தரப்படும்.
172. இந்திய அரசை உலகளாவிய அகதிகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போடச் செய்வோம்.
173. தமிழகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாம்கள் அனைத்தும் நிரந்தரமாக மூடப்படும். பதிவு செய்தபின் அவர்கள் விரும்பும் இடத்திற்கு சென்று தங்கி வாழலாம்.

சமுதாய சீர்திருத்தம்

174. தனி இரட்டை வாழ்விடம் (ஊர், சேரி) இரட்டை வழிபாட்டுத் தலங்கள், தனி இடுகாட்டு முறை ஒழிக்கப்படும்.
175. பட்டியல் வகுப்பிற்கு தனி மாணவர் விடுதி, பிற்படுத்தப் பட்டோருக்குத் தனிமாணவர் விடுதி எனப் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் அமைப்பு மாற்றப்பட்டு அனைவரும் ஒரே விடுதியில் தங்கிப் படிக்க ஆவணம் செய்யப்படும்.
176. ஆங்கிலேயர் காலத்தில் இம்மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பஞ்சமி நிலங்கள் கண்டறியப்பட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். ஆதித்தமிழர் அல்லாதோரிடமிருக்கும் ஆக்கிரமிப்பு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, ஆதித்தமிழர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.
177. சாதி எதிர்ப்புப் போரில் அரசு வன்முறை ‘சாதிவெறித் தாக்குதலில் பலியானோரை “சமூகநீதிப் போராளிகள்” என்று அறிவித்து அவர்தம் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், அரசுப் பணியும், வாரிசுகளுக்கு உதவித்தொகையும் வழங்கப்படும்..
178. ஆதித் தமிழர் சமூகத்திற்கென ஒதுக்கப்படும் சிறப்பு உட்கூறு நிதியில் அம்மக்கள் தொகை விழுக்காட்டிற்கு இணையான இடஒதுக்கீடு செய்வதோடு மேற்படி நிதியை ஆதித்தமிழர் நலத்துறைத் திட்டங்கள் மூலம் செயலாக்கப்படும்.
179. வனவள உரிமைச்சட்டம்-2008 முழுமையாக நடைமுறைப்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும். மலைவாழ் தமிழர்களுக்குச் சொந்தமாக ஐந்து ஏக்கர் வேளாண் நிலத்தை அப்பகுதியிலேயே ஒதுக்கித் தரவேண்டும் என்ற ஆணையை நாம் தமிழர் அரசு நிறைவேற்றும்..
180. ஆதித்தமிழர்/பழங்குடிகள் மேம்பாட்டுக்கென இயங்கும் தாட்கோவிற்கு மாற்றாக அயோத்திதாசர் பெயரில் நிதியம் உருவாக்கப்படும்.
181. பறையடித்தல், செத்தமாடு சுமத்தல், பிணம் சுடுதல், செருப்புத் தைத்துக் கொடுக்க வற்புறுத்தல் போன்ற தீண்டாமைத் தொழில்கள் முற்றிலும் நீக்கப்படும்.
182. மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் முறை முற்றாக தடை செய்யப்படும். அவர்களுக்கு நவீனக் கருவிகளுடன் 100 விழுக்காடு அரசுப்பணி வழங்கப்படும்.
183. ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைச் சார்ந்தவர்களை மட்டும் தூய்மைப் பொறியாளராகப் பயன்படுத்திவரும் முறை தடை செய்யப்படும்.
184. தூய்மைப் பொறியாளார்களுக்கு உயர்ந்த சம்பளம் கொடுக்கப்படும்.
185. நலிந்துவரும் தனியார் தேயிலைத் தோட்டங்களை அரசு தோட்டங்களாக மாற்றப்படும், அதன்மூலம் மலைமக்களின் வேலைவாய்ப்புக்கு உறுதி அளிப்பதோடு, அப்பகுதியில் இருந்து வரும் பெரும் முதலாளிகளின் கூட்டுக்கொள்ளை முற்றிலும் ஒழிக்கப்படும்.
186. நிலமற்ற மலைவாழ் மக்களுக்கு மலை நிலங்கள் வழங்கப்படும். நிலம் உள்ளவர்களுக்கு மலை பயிருக்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்படும். மலைப்பகுதியில் நிலங்களை தனியார்கள் வாங்க தடை விதிக்கப்படும். ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படும்.

பொதுவானவை

187. தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, சமூக, பொருளாதாரம் சார்ந்த இடஒதுக்கீட்டு முறையைப் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் வழியில் நாம் தமிழர் அரசு சீராய்வு செய்யும்.
188. தமிழகம் முழுவதும் சுங்கமில்லாத சாலைகள் உருவாக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளும் மூன்று மாத காலங்களில் நீக்கப்படும்.
189. அனைவருக்கும் ஒரு யூனிட் மின்சாரம் ஒரு ரூபாய்க்கு அளிக்கப்படும்.
190. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை உடனே நிறைவேற்றும். அர்ச்சகர் தொழிலைத் தமிழர் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அரசு வேலையாக மாற்றுவோம். மற்றைய அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டுமுறை பின்பற்றப்படுவதைப் போல் அர்ச்சகர் வேலையிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
191. தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பிற மாநிலத்தவர் குடியேற்றம் தடுக்கப்படும்.
192. வியன்னா ஒப்பந்தப்படி இரு நாடுகள் சேர்ந்து போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி இரண்டில் ஒரு நாடு அதைக் கடைபிடிக்கத் தவறினால், மற்றொரு நாடு அந்த ஒப்பந்தத்தைத் தாராளமாகத் திரும்பப்பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறைப்படி கச்சத்தீவில் விதிமுறைகளை மீறித் தமிழர்களை அனுமதிக்காததைக் கண்டித்து இந்திய அரசு தீவைத் தாரைவார்த்துக் கொடுத்ததைத் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் தமிழர் அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்கும்.
193. கூட்டுறவு ஏல மையங்களில் ’கூட்டமைப்பு’ (சிண்டிகேட்) முறை ஒழிக்கப்படும். இதனால் அரசுக்கும் தொழிலாளர்களுக்கும் வருவாய் கூடும். தேயிலைத்தூள் விற்பனையில் கலப்படங்கள் முழுதுமாக ஒழிக்கப்பட்டு, தரமான உற்பத்தி முறை கொண்டு வரப்படும்.
194. மாநில எல்லைக்குள் பயணிக்கும் தொடர் வண்டி நிர்வாகத் துறையினை நாம் தமிழர் அரசு இந்திய அரசியலைப்புச் சட்டமாற்றம் மூலம் கையகப்படுத்தும்.
195. பேருந்துகள் அரசு வாகனங்கள் அனைத்தும் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கக்கூடியதாக மாற்றி அமைக்கப்படும். ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் மின்கலன் சேமிப்பு மையம் அமைக்கப்படும். இதன் மூலம் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கமுடியும். இதனால் நகரங்களில் உள்ள கரியமிலக் காற்றின் அளவு குறைக்கப்படும்.
196. உடல் தானம் செய்ய விரும்புபவர்கள் விவரத்தை ஓட்டுநர் உரிமத்தில் பதிவு செய்யப்படும்.
197. வெளி மாநிலத்தவர் பற்றிய முறையான கணக்கெடுப்பு நடத்தப்படும். முறையான பதிவு மேற்கொள்ளப்படும். 15 ஆண்டுகள் தமிழகத்தில் வாழும் பிற மாநிலத்தவர்களுக்கு மட்டுமே முறையான குடும்ப அட்டையும், வாக்காளர் உரிமையும் அளிக்கப்படும். அதன் பிறகுதான் அவர்கள் தமிழகத்திற்குள் சொத்துவாங்கும் உரிமை பெற்றவர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.
198. ஐந்திணைத் திருவிழா – முல்லை நில இறையோனாகவும், தலைவனாகவும் இருக்கின்ற மாயோன் (கண்ணன்), மருதம் (இந்திரன்), நெய்தல் (வருணன்), பாலை (கொற்றவை) ஐந்து திணைகளில் வாழ்ந்த எம் முன்னோர்களுக்குத் திருவிழா எடுக்கப்படும்.
199. தமிழகக் கோயில்களில், உலகின் மூத்த மொழியான தமிழ்மொழியில் இறைவனைத் துதிக்க முடியவில்லை. கோவில்களில் “தமிழிலும் அர்ச்சனை செய்யலாம்” என்ற சொல்லை நீக்கிவிட்டு “இங்குச் சமற்கிருதத்திலும் அர்ச்சனை செய்யப்படும்” என்று எழுதப்படும். தமிழ் வழிபாடு கொண்டு வரப்படும்.
200. மக்களின் வாழ்வியலுக்கான இப்பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் செய்து முடிக்கப்படும் எனத் தமிழக மக்களாகிய எம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு நாம் தமிழர் அரசு உறுதி அளிக்கிறது.

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்; இனநலம்
எல்லாப் புகழும் தரும் – தமிழ்மறை (457)

நாம் தமிழர் அரசு, மக்களின் கருத்துக்கானது அன்று. முழுக்க முழுக்க மக்களின் நலனுக்கானது. அதிகாரம் வலிமையானது, எமது அதிகாரம் எம் மக்களுக்கானது.

எங்கள் மண்ணின் வளத்தையும் மக்களின் நலத்தையும் யார் கெடுத்தாலும் நாங்கள் பேரரணாக நின்று தடுப்போம்!

செந்தமிழன் சீமான்


செய்தி உதவி:
இங்கர்சால், நார்வே

முகநூல் பதிவு முகவரி: https://www.facebook.com/ingersol.selvaraj/posts/3886560851381909

Leave a Reply